வலைஞர் பக்கம்

இன்று அன்று | நவ.28, 1890 - மகாத்மா ஜோதிராவ் பூலே மறைந்தார்!

செய்திப்பிரிவு

‘மகாத்மா’ என்றும், ‘இந்திய சமூகப் புரட்சியின் தந்தை’ என்றும் அழைக்கப்பட்ட ஜோதிராவ் பூலேவின் நினைவுதினம் இன்று.

இவர், 1827 ஏப்ரல் 11-ல், மகாராஷ்டிரத்தின் சத்தாரா மாவட்டத்தில் மாலி என்ற (சத்திரிய) சமூகத்தைச் சேர்ந்த கோவிந்த்ராவ் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அவரது குடும்பத்தினர், காய்கறி மற்றும் பூக்களைப் பயிரிட்டு விற்பனை செய்துவந்தனர். தொடக்கக் கல்வியுடன் படிப்பை நிறுத்திவிட்டு, தந்தையின் வியாபாரத்துக்குத் துணையாக இருந்துவந்தார் பூலே. 12 வயதானபோது அவருக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டது.

பள்ளிப்படிப்பை விட்டாலும் வாசிப்பை விடாத ஜோதிராவின் அறிவுக் கூர்மையைக் கண்டு வியந்த ஒரு முஸ்லிம் பெரியவர், “அறிவு நிரம்பிய இந்தச் சிறுவனின் படிப்பு தடைப்படக் கூடாது” என்று ஜோதிராவின் தந்தையை வேண்டினார். இதையடுத்து, தனது 13-வது வயதில், ஸ்காட்டிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார் ஜோதிராவ். தனது 21-வது வயதில், ஆதிக்க சாதி நண்பரின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த ஜோதிராவ், சாதி அடிப்படையில் அவமதிக்கப்பட்டார்.

அந்தக் காலகட்டத்தில், அமெரிக்க எழுத்தாளர் தாமஸ் பெயின் எழுதிய ‘ரைட்ஸ் ஆஃப் மேன்’ என்ற புத்தகமும், சமூக நீதி குறித்த விழிப்புணர்வை அவருக்குள் ஏற்படுத்தியது. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கான உரிமைக்காகப் போராடினால்தான் சமூகத்தில் நிலவும் அநீதிகளுக்குத் தீர்வு காண முடியும் என்று முடிவுசெய்தார்.

1873 செப்டம்பர் 24-ல், ‘சத்ய ஷோதக் சமாஜ்’ (உண்மையைத் தேடுபவர்களின் சங்கம்) என்ற அமைப்பைத் தொடங்கினார். தன் மனைவி சாவித்ரி பூலேவுக்குத் தானே கல்வி கற்பித்தார். இருவரும் இணைந்து பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினார்கள். விதவைகளுக்கான ஆதரவு இல்லம் ஒன்றையும் அவர்கள் தொடங்கினார்கள். சமூக நீதியை வலியுறுத்தும் பல நூல்களையும் ஜோதிராவ் பூலே எழுதியுள்ளார்.

1888-ல் மும்பையின் மாண்ட்வி பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தங்களுக்காக உழைத்த ஜோதிராவ் பூலேவுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் பாராட்டுவிழா நடத்தி ‘மகாத்மா’ என்ற பட்டத்தை வழங்கினர். உயர் சாதியினரின் கடும் விமர்சனத்துக்கு இடையிலும் சமூக நீதிக்காக உழைத்த ஜோதிராவ் பூலே, 1890-ல் இதே நாளில் மறைந்தார்.

- சரித்திரன்

SCROLL FOR NEXT