பிரிட்டன் எழுத்தாளர், பத்திரிகையாளர், பெண் உரிமை ஆர்வலர் ரெபெக்கா வெஸ்ட் எனப்படும் டேம் சிசிலி இசபெல் ஃபேர்ஃபீல்டு பிறந்தநாள் இன்று (டிசம்பர் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* லண்டனில் பிறந்தவர். அப்பா துணிச்சலான பத்திரிகையாளர். வீட்டுக்கு வரும் ரஷ்யப் புரட்சியாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் அரசியல் பற்றி காரசாரமாக விவாதிப்பார்கள். இது பின்னாளில் இவரது படைப்புகளுக்கு உதவின. அப்பா இறந்தபோது, இவருக்கு 14 வயது. அதன் பிறகு, குடும்பம் ஸ்காட்லாந்தில் குடியேறியது.
* பணவசதி இல்லாததால் படிப்பைத் தொடர முடியவில்லை. ஒரு நடிகையாக புகழ்பெறவேண்டும் என்ற ஆசையில் லண்டனில் நடிப்பு பயிற்சி மேற்கொண்டார். அப்போது மாற்றிக்கொண்ட பெயர்தான் 'ரெபெக்கா வெஸ்ட்'. பிறகு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது.
* 'ஃப்ரீ வுமன்' பெண்கள் வாரப் பத்திரிகையில் சேர்ந்தார். புகழ்பெற்ற எழுத்தாளர் எச்.ஜி.வெல்ஸின் 'மேரேஜ்' நாவலை விமர்சித்து 1912-ல் இந்த பத்திரிகையில் காரசாரமாக எழுதினார். அதைப் படித்த வெல்ஸ் இவரது எழுத்தால் கவரப்பட்டார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. வெல்ஸ் மறையும் வரை இந்த உறவு நீடித்தது.
* பெண் உரிமை, சமூக நலனுக்கு குரல் கொடுப்பதிலும் நறுக்குத் தெறித்ததுபோல கூர்மையான விமர்சனம் எழுதுவதிலும் புகழ்பெற்று விளங்கினார் ரெபெக்கா. தி நியூ ரிபப்ளிக், நியூயார்க் ஹெரால்டு டிரிப்யூன், நியூயார்க் அமெரிக்கன் உட்பட ஏராளமான நாளேடுகள், இதழ்களில் எண்ணற்ற கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். இவரது எழுத்தாற்றலை ஜார்ஜ் பெர்னார்ட் ஷா பாராட்டியுள்ளார்.
* பத்திரிகைத் துறையில் படைத்த சாதனைக்காக இவருக்கு 'வுமன்ஸ் பிரஸ் கிளப் அவார்டு' விருதை 1948-ல் அமெரிக்க அதிபர் ட்ரூமேன் வழங்கினார். 'உலகின் தலைசிறந்த நிருபர்' என்று விழாவில் அதிபர் இவருக்கு புகழாரம் சூட்டினார். இவரது எழுத்துகள் புகழோடு, பணத்தையும் குவித்தது.
* இரண்டாம் உலகப்போரின்போது, தனது பிரம்மாண்ட வீட்டில் யூகோஸ்லேவிய அகதிகள் பலரைத் தங்கவைத்திருந்தார்.
* ஒவ்வொரு முறை எழுதத் தொடங்கும்போதும் எப்படி ஆரம்பிப்பது என்று யோசிக்க பல மணி நேரம் செலவிடுவாராம். ஒரு நாவலுக்கான அத்தியாயம் ஒன்றை சளைக்காமல் 26 முறை மாற்றி மாற்றி எழுதிப்பார்த்திருக்கிறார்.
* பிளாக் லாம்ப், மீனிங் ஆஃப் டிரேசன், தி ரிட்டர்ன் ஆஃப் தி சோல்ஜர் என வரலாறு, கலாச்சாரம், அரசியல், போர் குறித்து பல நாவல்களை எழுதியுள்ளார். அமெரிக்க கலை, அறிவியல் அகாடமியின் வெளிநாட்டுக்கான கவுரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
* இரண்டாம் உலகப் போரின்போதும் அதற்கு முன்பும் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அரசியல் மற்றும் பயண நாவல்கள் எழுதுவதற்கான விஷயங்களைத் திரட்டினார்.
* இறுதி மூச்சு வரை எழுதிக்கொண்டிருந்த ரெபெக்கா வெஸ்ட் 91-வது வயதில் மறைந்தார். இவரைப் பற்றி 2004-ல் இரண்டு நாடகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.