வலைஞர் பக்கம்

இவர்கள் தோற்றால்...

எம்.சுப்பையா

நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துவிட்டது. இனி தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டியதுதான். இந்நிலையில் இந்த தேர்தலில் தோற்றால் நம் அரசியல் கட்சித் தலைவர்கள் என்ன சொல்வார்கள் என்று ஒரு சிறு கற்பனை.

கருணாநிதி:

உடன்பிறப்பே... தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மாற்றார் பொறாமை கொள்ளும் அளவிற்கு கழகம் பெற்ற வாக்குகளின் சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஜெயலலிதா மற்றும் பாரதிய ஜனதாவின் மாய்மாலங்களையும், தேர்தல் கமிஷனின் ஒருதலைப் பட்சமான நடவடிக்கைகளையும் மீறி நமக்கு இந்த வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை நீ நினைத்துப் பார்க்கவேண்டும்.

இந்த வாக்குகள், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளன. நாம் தோற்றாலும் மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமையவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அப்படி அமைந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்.

ஜெயலலிதா:

வாக்குப்பதிவு எந்திரங்களில் மத்திய அரசு செய்த சதியால் நமது கட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தத் தேர்தலை செல்லாது என்றும், மறுதேர்தல் நடத்தக்கோரியும் கழகத்தின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

மேலும் கழகத்திற்கு எதிராக தமிழகத்தில் செயற்கை மின்வெட்டை நிகழ்த்தியவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்றும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தோல்வியைத் தொடர்ந்து அமைச்சரவையில் செய்யவேண்டிய மாற்றங்களைக் குறித்து ஆலோசனை நடத்த நான் உடனடியாக கொடநாடு புறப்பட்டு செல்கிறேன்.

ஞான தேசிகன்:

பத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சிக் கால சாதனைகளையும் இலங்கை தமிழர்கள் மற்றும் இந்திய மீனவர்கள் பிரச்சனைகளில் காங்கிரஸ் எடுத்த நிலைப்பாட்டையும் மக்கள் புரிந்து கொள்ளத் தவறி விட்டார்கள். மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்.

2016ல் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்து ஆட்சி அமைக்க அனைத்து முயற்சிகளையும் செய்வோம். காங்கிரஸ் கட்சியை யாரும் தனிமைப்படுத்த முடியாது என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்த்:

நான் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. என் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் தொண்டர்கள் விரும்பினார்கள் என்ற காரணத்தால் கூட்டணி அமைத்தேன். ஆனால், இந்தக் கூட்டணியை பெரும்பான்மையான மக்கள் விரும்பாத காரணத்தால் தோற்றோம். எனவே 2016 தேர்தலில் மக்களுடனும் தெய்வத்துடனும் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ்:

இந்தக்கூட்டணி தோற்கும் என்று எனக்கு முன்பே தெரியும். எனவேதான் நான் எந்தவொரு கூட்டணிக் கட்சிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவில்லை. எனவே வருங்காலங்களில் எந்தவொரு தேசிய கட்சியுடனும் திராவிட கட்சிகளுடனும் மண்ணுள்ளளவும் விண்ணுள்ளளவும் கூட்டு சேரமாட்டோம்.

பொன் இராதாகிருஷ்ணன்:

கடந்த காலங்களைப்போல் அல்லாமல் பாரதிய ஜனதாவிற்கு தமிழகத்திலே ஒரு நல்ல அடித்தளம் கிடைத்துள்ளது. எனவே அதை மேலும் பலப்படுத்தி 2016 தேர்தலுக்கு தயாராவோம்.

தா.பாண்டியன்:

இடதுசாரி இயக்கங்கள் தோற்றாலும் கணிசமான வாக்கு வங்கியைப் பெற்றுள்ளோம். பாடம் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் இந்தத் தேர்தலில் பாடம் கற்றுக்கொண்டிருப்பார்கள். நாங்கள் கிள்ளுக்கீரைகள் அல்ல என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துவிட்டது. எந்த நிலையிலும், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும்.

SCROLL FOR NEXT