வலைஞர் பக்கம்

ஜெயகாந்தனோடு பல்லாண்டு 10

பி.ச.குப்புசாமி

சமீப காலங்களில் மரணம் பல வடிவங்களில் வந்து என்னை அச்சுறுத்துகிறது.

மரணத்துக்கு அஞ்சாதிருத்தல் ஒரு காலத்தில் சாத்தியமாக இருந்தது. மரணத்தின் பரிமாணத்தை அறியாது இருந்த பருவம் அது. சாவு என்பது யாருக்கோ வரும், நமக்கு வரவே வராது என்கிற முழுமூடத்தனம் எமது முடிமேல் அமர்ந்திருந்த காலம் அது.

இபோது அப்படியில்லை. பொட் பொட்டென்று பழங்கள் பழுத்துக் கீழே விழுகின்றன. காய்களும் பிஞ்சுகளும் கூட, காற்றடித்த வேகத்தில் கீழே விழுந்துவிடுகின்றன.

மன்னுயிர் அனைத்தின் தலையெழுத் தான இந்த மரணம் குறித்து, ஜெயகாந்தன் எங்களிடம் நிறையப் பேசியிருக்கிறார்.

அவரது சகோதரக் குழந்தைகளின் சாவுகளில் அது தொடங்குகிறது.

அப்புறம் பல மரணங்கள்!

‘‘அவர் ஏன் செத்துட்டார்?’’ ஜெயகாந்தக் குழந்தை கேட்கிறது.

‘‘வயசாகிப் போச்சு. அதனாலே செத்துட்டார்!’’

‘‘உங்களுக்கும் வயசாகுமா?’’

‘‘ஆகுமே..!’’

‘‘எனக்கு வயசு ஆகுமா?’’

‘‘ஆகுமே!’’

‘‘அப்போ… நீங்களும் நானும் செத்துடுவோமா..?’’

‘‘ஆமாம்! ஒரு நாளைக்கு நானும் நீயும் கூடச் செத்துப் போயிடுவோம்!’’

அந்தப் பாலகனின் மனதில், அவர் சாவதுகூட ஒரு பொருட்டாகப்பட வில்லை. ஆனால், தான் சாவது என்பதை அந்தக் குழந்தை உள்ளத்தால் தாங்க முடியவில்லை.

அன்று ஒரு மாடிப் படியில் சென்று அமர்ந்து வெகுநேரம் தேம்பித் தேம்பி அழுதாராம் பால ஜெயகாந்தன்.

பிற்காலத்தில் ஒருநாள் நாங்கள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ‘‘நீங்கள் எல்லாம் காலையில் கண் விழித்ததும் முதலில் என்ன நினைப் பீர்கள்?’’ என்று ஜெயகாந்தன் கேட்டார்.

ஆளாளுக்கு ஒரு பதில் சொன் னோம். ‘‘புதிய இடங்களில் இரவு தூங்கிக் காலையில் விழிக்கும்போது, எங்கிருக்கிறோம் என்கிற குழப்ப நினைவு எனக்கு உண்டாகும்’’ என்று நான் சொன்னேன்.

ஜெயகாந்தன் நாங்கள் யாரும் எதிர்பாராத வகையில், ‘‘காலையில் கண் விழிச்சதும், ‘அப்பாடா… நாம் உயிரோட இருக்கோம்டா’னு நெனைச்சுக்குவேன்!’’ என்றார்.

டால்ஸ்டாயின் ஒரு கதையில் ஒரு வரி வரும். ‘எந்த மனிதரிடத்தும், எந்த மரணச் செய்தியைக் கேட்டாலும், அடிமனசில் உண்டாவது ஒரு மகிழ்ச்சியே. அவர்தான் செத்துவிட்டார், நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதே அந்த அடிமன மகிழ்ச்சிக்குக் காரணம்’ என்கிற டால்ஸ்டாயின் வரியை நான் அப்போது ஜெயகாந்தனிடம் குறிப் பிட்டபோது, ‘‘எப்படி மனசின் மூலை முடுக்கெல்லாம் அவர் படம் பிடிக்கிறார் பார்…’’ என்று வியந்து பேசினார்.

எனக்கு 39-வது வயது நெருங்க நெருங்க ஒரு கிலி பிறந்தது. பாரதியாருக்கே 39 வயதுதான் ஆயுள். அவருக்குக் கொடுக்காத சலுகையையா, கடவுள் நமக்குக் கொடுக்கப் போகிறார் என்கிற ஐயமும் சஞ்சலமும் அடிக்கடி மனசில் எழுந்து கொண்டே இருக்கும். மவுனமாகவே இருந்து, நாற்பதைக் கடந்தவுடன் நான் இது பற்றி ஜெயகாந்தனிடம் கூறினேன்.

‘‘ஆமாம்… ஆமாம்! எனக்கும் 39 மற்றும் 40 வயதுகளில், கொஞ்சம் திக் திக் என்றுதான் இருந்தது. அப்புறம் 41, 42… 43 என்று வயது தொடர தொடர… இனி நூறாண்டுகள் கூட வாழ முடியும் என்கிற நம்பிக்கை வந்துவிட்டது!’’ என்று மேஜையை உற்சாகமாக ஓங்கித் தட்டியபடியே பதிலளித்தார் ஜெயகாந்தன்.

அவர் என்னைவிட 9 வயது மூத்தவர். பாரதியை நினைத்துப் பிறந்த இந்தப் பயத்தை அவர் 9 ஆண்டுகளுக்கு முன்பே அனுபவித்திருக்கிறார் என்று புரிந்துகொண்டபோது, இந்த உணர்வின் ஒற்றுமையை நான் வியந்தேன்.

எதிர்பாராமல் தாக்க வருகிற மரணத்திடமிருந்து எதிர்பாராமல் நாம் தப்பிவிடும் போது, நம் மனநிலை எவ்வாறு இருக்கும்? ஏதோ ஓர் அருள் வந்து நம்மைக் காப்பாற்றியதைப் போல ஓர் உணர்வின் அலை தோன்றித்தானே தீரும்!

எழும்பூர் நெடுஞ்சாலையில் ஜெயகாந்தன் குடியிருந்தபோது, ஓர் இரவு, கட்டிலுக்கு மேலே வேகமாகச் சுழன்று கொண்டிருந்த மின்விசிறி கழன்று கட்டிலின் மீது விழுந்து... விழுந்த வேகத்தில் அந்தக் கட்டிலையே பொத்தலாக்கிவிட்டதாம். நல்ல காலம்! அன்று வழக்கத்துக்கு விரோதமாக கட்டிலைத் தவிர்த்து, ‘சில்லென்றிருக்கிறதே…’ என்று ரசித்துத் தரையில் படுத்திருக்கிறார் ஜெயகாந்தன். அன்றைக்கு அவர் மனசு எப்படி இருந்திருக்கும்? அவரே இதையெல்லாம் எழுதியிருக்கிறார்.

‘சாகாதிருப்பது… நம் சதுரால் அன்று!’ என்கிற வரியை அவர் சொல்லித்தான் நாங்கள் அறிந்தோம். ‘சதுரால்’ என்றால் ‘சாதுரியத்தால்..’ என்கிற அர்த்தத்தையும் அவரே எங்களிடம் சொன்னார்.

‘உறங்கும் போலும்…’ போன்ற அவருடைய சில சிறுகதைகளிலும் மரணம் என்கிற விஷயத்தை ஜெயகாந் தன் ஆழ்ந்து பரிசீலித்திருப்பதை, அதை படித்தவர்கள், இனியும் படிக்கப் போகிறவர்கள் நன்றாகவே உணரலாம்.

அதன் பின், முகத்தில் அறைய வரும் பறவையை முழங்கையால் தடுக்கிற மாதிரி, எல்லா மரணங்களை யும், அவரது லட்சியவாதம் புறந் தள்ளிக் கொண்டேயிருந்தது. நித்தியத்துவத்துக்கு உரியோர், மரணம் என்கிற பவுதீக உண்மையின் மீது ஏறி மிதித்து நின்று நிருத்தியம் செய்வது அவர் கண்களுக்குத் தெரிந்தது போலும்! ‘பூக்கள்… உதிரும்’ என்றால் ‘மலரும்’ என்று அவர் பொருள் கொள்ளலானார்.

எனவே, நாங்கள் மரணச் செய்திகளை அவர் காதிலே போடுவதற்கு மிகவும் தயக்கம் உள்ளவர்கள் ஆனோம். உயிரானது ஜ்வாலை கொண்டு எழுந்து நிற்கும் இடத்தில் யாரே சாவின் நிழலைப் படரவிடுவர்?

எங்கள் மனநிலையின் இந்தக் கட்டத்தில்தான் நெய்வேலியில் அது நிகழ்ந்தது.

வழக்கமாக நெய்வேலியில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு, அந்த ஆண்டு ஜெயகாந்தன் அழைக்கப்பட்டிருந்தார். அந்தத் தகவலை அவர் எனக்கு முன்கூட்டியே தெரிவித்ததால், நான் மட்டும் தனியாளாகத் திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலை, பண்ருட்டி வழியாக மூன்று பேருந்துகள் மாறி மாறி, சாயங்காலத்துக்கு மேல் நெய்வேலி போய்ச் சேர்ந்தேன்.

- வாழ்வோம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com

SCROLL FOR NEXT