இன்று எபோலா ஏற்படுத்தியிருக்கும் பதற்றத்தை 20 ஆண்டுகளுக்கு முன்னர் எய்ட்ஸ் நோய் ஏற்படுத்தியிருந்தது.
‘சைக்கோ’ பட நடிகர் ஆண்டனி பெர்க்கின்ஸ், ‘பிரிடேட்டர்’ படத்தில் வேற்றுக்கிரகவாசியாக நடித்த கெவின் பீட்டர் ஹால் உள்ளிட்ட பிரபலங்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட செய்தி வந்த நேரம். புகழ்பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரர் மேஜிக் ஜான்ஸன் அந்தச் செய்தியை உலகுக்கு அறிவித்தார்.
1991-ல் இதே நாளில், பத்திரிகையாளர்களுக்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டது. ஜான்ஸன் விளையாடிவந்த ‘லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ்’அணியின் செய்தித் தொடர்பாளர் அனுப்பிய இந்தச் செய்தியில், “முக்கியத் தகவல் ஒன்று வெளியிடப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
லேக்கர்ஸ் அணியின் அலுவலக அறைக்குள் செய்தியாளர்கள் குழுமினர். அவர்கள் முன் தோன்றிய ஜான்ஸன், “நான் கூடைப்பந்து விளையாட்டிலிருந்து விலகுகிறேன். காரணம், எனக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருக்கிறது” என்றார்.
அனைவரும் நம்ப முடியாமல் உறைந்துவிட்டனர். 6 அடி 9 அங்குலம் கொண்ட அசுர உருவம், 32 வயதுதான் ஆகியிருந்தது அவருக்கு. இப்படி ஒரு முடிவா? என்று அவரது ரசிகர்களும் சக வீரர்களும் கலங்கி நின்றனர். என்.பி.ஏ. கூடைப்பந்து தொடர்களில் லேக்கர்ஸ் அணியைப் பல முறை வெற்றிபெற வைத்தவர் அவர். 1981-லேயே அவருக்கு ரூ.150 கோடியைத் தந்தது லேக்கர்ஸ் அணி. எப்பேர்ப்பட்ட இழப்பு!
ஆனால், ஜான்ஸன் அசரவில்லை. எய்ட்ஸ் நோயுடன் தொடர்ந்து போராடி, 23 ஆண்டுகளையும் கடந்து வாழ்ந்துவருகிறார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அணியில் சேர்ந்து விளையாடினார். அணியின் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். தற்போது எய்ட்ஸ் விழிப்புணர்வைப் பரப்பும் வகையில் ஆக்கபூர்வமாகச் செயல்படுகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்ந்த நம்பிக்கை மனிதராக இருக்கிறார் ‘மேஜிக் ஜான்ஸன்’!