சிங்கப்பூரின் கிராஸ்ரூட்ஸ் கிளப் அரங்கில் அதிபதி இண்டர்நேஷனல் தியேட்டர்ஸ் வழங்கும் `கவசம்’ நாடகம் கின்னஸ் சாதனைக்காக 28 மணி நேரம் அரங்கேறவிருக்கிறது.
நாடக ஆசிரியர், தன் முனைப்புப் பேச்சாளர் என பல்வேறு திறமைகளைக் கொண்ட புகழேந்தி எழுதி இயக்கியிருக்கும் 'கவசம்' நாடகம், கடந்த நூறு ஆண்டுகளாக சிங்கப்பூரில் வாழும் நான்கு தலைமுறையைப் பற்றிய கதைக்களத்தைக் கொண்டது.
சிங்கப்பூர் விமானப் படையில் விமானியாகப் பணிபுரிந்த புகழேந்தி 'சங் நீல உத்தமன்', 'விக்கிரமாதித்தன்', 'தெனாலி', 'மிரட்டல்', 'பந்தம்', 'உதய சூரியன்', 'நரகாசுரன்', 'நடிப்போ நடிப்பு', 'கோசா', 'உங்கள் குழந்தைகளை புத்திசாலித்தனமாக வளருங்கள்' போன்ற நாடகங்களை எழுதி, இயக்கியுள்ளார். மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இலக்கியத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால் வீ.ஜே என்ற பதிப்பகத்தை நிறுவி, 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரின் பல நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 18 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொது மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து பல பயிற்சிப் பட்டறைகள் நடத்திய அனுபவம் உள்ளவர் புகழேந்தி.
'கவசம்' நாடகம் சிங்கப்பூரின் அரசியல் மாற்றங்கள், குடியேற்ற மாற்றங்கள், ஜப்பானியர்களின் ஆதிக்கம், ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பு, தமிழர்கள் வாழ்ந்த முறை, சிங்கையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தமிழர்கள் எப்படி ஏற்றுக்கொண்டு மாறினார்கள், தமிழரின் பண்பாடு மற்றும் மொழியின் கலாச்சாரத்தைப் படம் பிடித்துக்காட்டும் வகையில் அரங்கேறவிருக்கிறது.
சிங்கப்பூரின் அன்றைய இளைஞர்கள்தான் இன்றைய பெற்றோர்கள். அவர்களுக்கு அடுத்த தலைமுறை பிள்ளைகள் காணும் வாழ்க்கை மாற்றங்கள். முந்தைய தலைமுறையிடமிருந்து இவர்கள் கற்ற பாடங்கள் எப்படி அவர்களுக்குப் பயன்படுகிறது என்பதையும், அதிலுள்ள சவால்களையும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ப கதையின் ஓட்டம் செல்கிறது.
'கவசம்' நாடகத்தில் 65க்கும் மேற்பட்ட நடிப்பு அனுபவமிக்க நடிகர், நடிகைகள், மாணவர்கள். மற்றும் 35க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்குபெறுகிறார்கள். 600 பக்கங்களில், 50,000 அழகுத் தமிழ் வார்த்தைகளால் வசனம் எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து நீண்ட நேரம் நடைபெறும் முதல் தமிழ் நாடகம் என்று உலக சாதனை நூலான கின்னஸ் புத்தகத்திலும், சிங்கப்பூரில் நீண்ட நேரம் நடைபெறும் முதல் நாடகம் என்று சிங்கப்பூர் புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் பதிவு செய்து, ஒரே நேரத்தில் இரு சாதனைகளை நிகழ்த்த இருக்கிறார்கள்.
வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் திருப்பங்கள், மர்மங்களுடன் இந்நாடகம் வருகிற 13 ஜூலை 2019 சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பித்து, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 14 ஜூலை 2019 மதியம் 1 மணிக்கு நிறைவு பெறுகிறது.