ஜனநாயகத்தில் மக்களின் பலம் என்பது தேர்தலில் அவர்கள் அளிக்கும் வாக்குகள்தான். எனினும், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை 150 ஆண்டுகளுக்கு முன்னர் மறுக்கப்பட்டிருந்தது.
அதுவும் ஜனநாயகத்தைப் பற்றி உலகத்துக்கே வகுப்பு எடுக்கும் அமெரிக்காவில். அந்நாட்டில் பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடியவர்களில் முக்கியமானவர் சூஸன். பி. ஆண்டனி.
உண்மையில் அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் 1776-லேயே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. அதாவது, குறிப்பிட்ட அளவு சொத்து மதிப்பு கொண்ட இருபாலரும் வாக்களிக்கலாம் என்று அப்போதைய சட்டம் அனுமதித்தது.
எனினும், 1807-ல், பெண்களுக்கான வாக்குரிமையைப் புதிய சட்டம் ஒன்று ரத்து செய்தது. அதன் பின்னர் பல பெண்கள் வாக்குரிமைக்காகப் போராடிவந்தனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, எலிசபெத் காடி ஸ்டாண்டன் என்ற பெண்ணுடன் இணைந்து பல போராட்டங்கள் நடத்தினார் சூஸன். இருவரும் இணைந்து ‘ரெவலூஷன்’ (புரட்சி) என்ற பெயரில் வார இதழை நடத்தினார்கள்.
1872-ல் நடந்த அதிபர் தேர்தலின்போது, இதே நாளில் பல எதிர்ப்புகளையும் மீறி வாக்களித்தார் சூஸன். அவருடன் 50 பெண்
களும் வாக்களிக்க முயன்றனர். அவர் களில் பலர் திருப்பி அனுப்பப்பட்டனர். எனினும், சூஸன் உட்பட 15 பெண்கள் வாக்களித்தனர். இதையடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவருக்கு 100 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அதைச் செலுத்த அவர் மறுத்துவிட்டார். “நீதியற்ற இந்த அபராதத்தில் ஒரு டாலரைக் கூடச் செலுத்த மாட்டேன்” என்றார் துணிச்சலாக.
பெண்கள் தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு, 1920 ஆகஸ்ட் 18-ல் வாக்களிக்கும் உரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டது.