தி
னசரி தூக்கத்தில் காணும் கனவுகளை யாராவது எழுதி வைப்பார்களா?
அப்பாவிடம் அப்படி ஒரு பழக்கம் இருந்தது. அவருடைய பெட்டிக்குள் நிறைய நோட்டுப் புத்தகங்கள் இருக்கும். எல்லாம் அவர் தூக்கத்தில் கண்டு எழுதிவைத்த கனவுகள்.
கல்யாணமான புதிதில் என் மனைவி பொழுதுபோகாமல் அந்த நோட்டுப் புத்தகங்களை எடுத்துப் படிக்கப்போக, பயந்துவிட்டாள்.
“உங்க அப்பா தன்னோட கனவுகளை எழுதி வச்சிருக்காரே பார்த்தீங்களா? எல்லாம் பயங்கரமான கனவுகள், துர்ச்சகுனங்கள், விபத்துக்கள், மரணம் என்று படிக்கவே வயிற்றைக் கலக்குகிறது”
“படிக்காதே”
“அதையெல்லாம் எழுதாதீங்கன்னு சொல்லிவையுங்க! குடும்பத்துக்கு ஆகாது”
“அப்படி எந்த சாஸ்திரத்தில் எழுதியிருக்கிறது?”
அப்பாவின் கனவு நோட்டு விஷயமாக எங்களுக்குள் சண்டை மூளும்.
இதனால் எல்லாம் அவர் கனவுகளை எழுதிவைப்பதை நிறுத்தவில்லை…
அடிக்கடி ஈஸிசேரில் சாய்ந்தபடி அவர் படிக்கும் புத்தகம் ‘கனாநூல்’! கனவுகளுக்குப் பலன்கள் மட்டும் போடாமல், கனவுகள் ஏன் வருகின்றன, நாமே கனவுகளை வரவழைத்துக் கொள்ள முடியுமா என்றெல்லாம் விசித்திரமாக ஆராய்ச்சி செய்து எழுதிய புத்தகம்.
அப்பா தன் கனவுகளுக்குப் பலன் பார்ப்பதைவிடவும் ஆழ்மன ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருவது தெரிந்தது. அவர் ஒரு ஆசிரியர். நல்ல படிப்பாளி. அவரும் அவர் நண்பர் கல்யாணமும் பேசும்போது ஸிக்மண்ட் ஃபிராய்டு, பிராணிகள் கனவு காண்பது உண்டா, கனவுகளில் சஞ்சரிப்பது என்றெல்லாம் காதில் விழும்.
“நிறைவேறாத ஆசைகள்தான் கனவுகள்” என்பார் கல்யாணம்.
“என்னிடம் அப்படி ஒரு ஆசையே இல்லாதபோது விபரீதமான ஆசைகள் கனவுகளாக வந்து பேயாட்டம் போடுவானேன்?” - அப்பா.
“இதுதான் ஆழ்மனதின் விசித்திரம். உள்ளூர நீங்கள் விரும்பியது விரும்பாதது எல்லாம் கலர்காகிதக் குப்பைகளாக உடைந்த வளையல் துண்டுகளாக உள்ளே கிடக்கும்.அதுதான் கலைடாஸ்கோப் கோலங்களாக விரியும் கனவுகள்”
“கனவுகள் நடக்கப்போவதை முன்னறிவிப்பது எப்படி?”
“ரங்கராஜன்! கனவுகள் மனசின் கடிவாளம் இல்லாத பாய்ச்சல். இந்த ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம் விட்டுவிடுங்கள்!”
கனவு நோட்டின் பக்கங்களைப் புரட்டுகிறேன். இப்படி எழுதியிருக்கிறார்:
“நெடுஞ்சாலையோரம் நின்றுகொண்டிருக்கிறேன். நள்ளிரவு சாலையைக் கடக்க முயலும்போது தூரத்தில் ஒரு லாரி வந்துகொண்டிருப்பது தெரிகிறது. ஹெட்லைட் பிரகாசமாகிக்கொண்டே வருகிறது. லாரி போனதும் சாலையைக் கடக்கலாம் என்று நின்றுவிடுகிறேன். லாரி நெருங்குகிறது அதன் சத்தம் பெரிதாகிறது.
லாரி மீது பெயர்ப்பலகை பல்பு வெளிச்சத்தில் மின்னுகிறது.
லாஸ்ட் வேன். என்ன பயங்கரம்...
லாரியின் பின்பக்கம் சீராக அடுக்கப்பட்ட மரக்கட்டைகள்.
ஒரு விபரீத உண்மை புலப்படுகிறது. லாரி என்னைக் கடந்து செல்லவே இல்லை. அதன் உறுமல் சத்தம், ஓட்டம் எல்லாம் தத்ரூபமாக இருக்கிறது. ஆனால் என்னைக் கடக்காமல் ஓரிடத்தில் நின்றபடியே ஓடிக்கொண்டிருக்கிறது!”
ஒருநாள் அதிகாலை என்னைக் கூப்பிட்டார், “என்ன சொல்லுங்கள்?”
“அதிகாலைக் கண்ட கனவு பலிக்கும் என்பார்கள்... நான் கண்ட கனவு பலிக்கும்டா! நல்ல கனவுடா!”
“சொல்லுங்கள்!”
“நம்ம வீட்டுத் தாழ்வாரத்தில் ஒரு நீலநிறப் பறவை கூடுகட்டி இருக்கு. அந்தக் கூட்டில் ஒரு முட்டை. நீலமும் பச்சையும் கலந்த வர்ணத்தில் கண்ணைப் பறிக்கும் அழகுடா...”
என் மனைவி வெட்கத்துடன் சொன்னாள்.
“ஒரு சந்தேகம் இருக்கு. வாங்க டாக்டர்ட்ட போலாம்!”
உறுதியாகிவிட்டது. என் மனைவி பால்பாயசம் வைத்தாள். எங்கள் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவளுக்குக் கருச்சிதைவு ஆகி விட்டது.
என் மனைவி அமைதியாக அப்பாவின் கனவு நோட்டை நீட்டினாள். முதல்நாள் அப்பா கண்ட கனவு அதில்;
தாழ்வாரத்தில் குருவிக்கூட்டிலிருந்து முட்டை கீழே விழுந்து ஓடு உடைந்து...
அதற்குப் பிறகு, அப்பா பார்வையில் விரக்தி; “’எங்காவது ஷேத்ராடனம் மாதிரி போய்விட்டு வருகிறேன்’’ என்றார். நான் தடுக்கவில்லை.
நீண்டநாள் கழித்துத் திரும்பினார். அவர் நடைப்பயிற்சி செய்வதற்குப் புறப்பட்டுப் போனதும் பெட்டியைத் திறந்து பார்த்தேன். அதிலிருந்த கனவு நோட்டுகளைக் காணோம்!
பிராயச்சித்தங்கள் பலவிதம்! அவற்றில் இதுவும் ஒன்று போலும்!
-தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com