இலங்கையைச் சேர்ந்த பன்மொழிப் புலவரும், தமிழின் தொன்மையை உலகுக்கு எடுத்துக் கூறியவர்களில் முதன்மையானவராகப் போற்றப்படுபவருமான சா.ஞானப்பிரகாசம் (S.Gnanaprakasham) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள மானிப்பாய் என்ற ஊரில் பிறந்தவர் (1875). இவரது இயற்பெயர், வைத்தியலிங்கம். தந்தை இவரது 5 வயதில் காலமானார். தாய், கத்தோலிக்கர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், இவரது பெயர் ஞானப்பிரகாசம் என மாற்றப்பட்டது. அமெரிக்க மிஷன் ஆங்கிலப்பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார்.
* இலக்கணப் பிழையின்றி கவிதை இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தார். இளம் வயதிலேயே தமிழ், வடமொழி, ஆங்கிலம் மொழிகளைக் கற்றார். பள்ளிப்படிப்பு முடிந்தபிறகு, யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில் பயின்றார்.
* பின்னர் இறைபணிக்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பள்ளியிலும் கல்லூரியிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, சிங்களம் கற்றிருந்த நிலையில், பாதிரியாரான பிறகு லத்தீன், பிரெஞ்ச் மொழிகள் கற்றதால், பல்வேறு மொழிகளில் ஆர்வம் பிறந்தது. தமிழ்மீது தனிப் பற்றுக்கொண்டிருந்த இவர், தமிழ் சொற்களோடு பிறமொழிச் சொற்களையும் ஒப்பிட்டார்.
* 72 மொழிகளைக் கற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. லத்தீன், கிரேக்கம் உள்ளிட்ட 18 மொழிகளில் பேசும், எழுதும் திறன் பெற்றிருந்தார். ஊர்காவல் துறையில் பணியாற்றியபோது, மக்களிடம் நிதி வசூல் செய்து, தமிழில் வெளிவந்த அத்தனை நூல்களிலும் ஒவ்வொரு பிரதியை வாங்கி, ஒரு நூலகத்தை உருவாக்கினார்.
* ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க, கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தார். வரலாறு, அரசியல், மானிடவியல், சமூகவியல், எழுத்துமுறை, சொல் ஒற்றுமை, இடப்பெயர்கள், சமய வரலாறு, சமய வழிபாடுகள், பழக்க வழக்கங்கள் ஆகிய அத்தனை களங்களிலும் ஆழமான ஆராய்ச்சிகளை மேற் கொண்டார்.
* தமிழர் பூர்வீக சரித்திரம், யாழ்ப்பாணத்தரசர்கள், யாழ்ப்பாண சரித்திரம், இந்திய நாகரிகம், சுப்பிரமணியர் ஆராய்ச்சி, பிள்ளையார் ஆராய்ச்சி, தமிழர் வரலாறு, தமிழரிடையே ஜாதி பிறந்த முறை, தமிழ் சொற்பிதிர், தமிழ்த் தாதுக்கள், மொழிக்குடும்பம், தருக்க சாத்திரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தார். அவற்றில் பெரும்பாலானவற்றை இவரே வெளியிட்டார்.
* இவரது ‘தமிழ் அமைப்புற்ற வரலாறு’ என்ற நூலில், தமிழ் சொற் தொகுதிகள், பெயரீடு, முதற் சொல்லடிகள், வழிச்சொல்லடிகள், சொல் அர்த்தங்கள் வேற்றுமை உருபுகள், காலங்காட்டும் இடை நிலைகள் உள்ளிட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
* ‘நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்’ என நேசத்துடன் அழைக்கப்பட்டார். ‘சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி’ என்ற இவரது தமிழ் ஒப்பியல் அகராதி, இன்றும் தமிழின் தலைசிறந்த அகராதியாகக் கருதப்படுகிறது. மொழி ஆக்கத் துறையில் பெரும் சாதனையாக இது குறிப்பிடப்படுகிறது.
* இலங்கையில் வெளிவந்த, ஈழகேசரி, இந்து சாதனம், பாது காவலன் மற்றும் தமிழகத்திலிருந்து வெளிவந்த கலாநிலையம், கலைமகள், ஞாயிறு உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தார். சத்திய வேதப் பாதுகாவலன், குடும்ப வாசகம், அமலோற்பவ ராக்கினி தூதன் உள்ளிட்ட மாத இதழ் களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்.
* இலங்கை யாழ்ப்பாண வரலாற்று சங்கத்தின் துணைத் தலைவர், பின்னர் தலைவராகவும், ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தின் துணைத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். ‘சொற்கலைப் புலவர்’ எனப் போற்றப்பட்ட சுவாமி ஞானப்பிரகாசம், 1947-ம் ஆண்டு தமது 72-வது வயதில் மறைந்தார்.