ஆளுமைமிக்க நடிகர்
தென்னிந்தியாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவரும் தமிழ், தெலுங்கு திரையுலகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறந்தவருமான எஸ்.வி.ரங்கா ராவ் (S.V.Ranga Rao) பிறந்த தினம் இன்று (ஜூலை 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஆந்திராவில் உள்ள நுஜ்வித் என்ற கிராமத்தில் பிறந்தார் (1918). சாமர்லா வெங்கட ரங்கா ராவ் என்பது இவரது முழுப்பெயர். தந்தை, கலால் துறை ஆய்வாளராக ஆந்திராவில் பணிபுரிந்தவர். பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, மெட்ராஸ் பிரசிடென்சி கல்லூரியில் பி.எஸ்சி., பட்டம் பெற்றார்.
* சிறுவயது முதலே நாடகங்களில் ஆர்வம் கொண்டிருந்ததால் தீயணைப்புத் துறையில் கிடைத்த வேலையைப் புறக்கணித்தார். சினிமா வாய்ப்புத் தேட வேண்டும் என்பதற்காக சென்னையிலேயே தங்கிவிட முடிவு செய்தார். காக்கிநாடாவில் உள்ள யங்மேன்ஸ் ஹேப்பி கிளப்பில் சேர்ந்து தெலுங்கு மொழி, வசன உச்சரிப்பு, குச்சுபிடி நடனம், நாட்டியம், நாடக நடிப்பையும் கற்றுக் கொண்டார்.
* சினிமா வாய்ப்பு தேடி அலைந்த இவர், முதன்முதலாக 1946-ல் ‘விருதினி’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். ஆனால் படம் ஓடவில்லை. தொடர்ந்து வாய்ப்பும் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் டாடா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். 1951-ல் ‘பாதாள பைரவி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது சூப்பர் ஹிட்டானதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.
* மிகவும் உணர்ச்சிகரமான ஆனால், எல்லை மீறாத நடிப்பை வெளிப்படுத்துவது, இவரது தனிச்சிறப்பு. இறுதிவரை இவரது மார்க்கெட் குறையவேயில்லை. 25 ஆண்டுகளுக்கும் மேலாக, 160-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஆங்கில மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்!
* ஒரு காட்சியில் எந்த நடிகருடன் நடித்தாலும் இவரது ஆளுமை தனித்துவமாகப் பளிச்சிடும். கம்பீரமும், ஆஜானுபாகுவான தோற்றமும், குரலும், அபார நடிப்பாற்றலும் கொண்ட இவர், அப்பா வேடத்துக்கே தனி கவுரவத்தை ஏற்படுத்தியவர். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவரது தமிழ் உச்சரிப்பும் வசனம் பேசும் பாணியும் தனித்துவமானது.
* வீரம், சாகசம், குணசித்திரம், நகைச்சுவை, வில்லத்தனம், பயம், வெகுளித்தனம், கோபம் என இவர் வெளிப்படுத்தாத பாவங்களோ, ஏற்று நடிக்காத பாத்திரங்களோ இல்லை எனலாம். ‘பாதாள பைரவி’, ‘மிஸ்ஸியம்மா’, ‘அன்னையின் ஆணை’, ‘பங்காரு பாப்பா’, ‘பெல்லி நாட்டி’, ‘கற்பகம்’, ‘படிக்காத மேதை’, ‘பார்த்திபன் கனவு’, ‘தெய்வத்தின் தெய்வம்’, ‘அன்னை’, ‘பக்த பிரகலாதா’ உள்ளிட்ட இவரது திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.
* படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில்கூட கதாபாத்திரமாகவே நடந்து கொள்வாராம். ஆந்திரத்தில், இவருக்கு விஸ்வ நாட சக்ரவர்த்தி, நாட சார்வபவுமா, நாட சேகரா, நாட சிம்ஹா எனப் பல்வேறு பட்டங்கள் வழங்கப்பட்டன. அனைவரிடமும் நட்பாகப் பழகுபவர், நல்ல நகைச் சுவை உணர்வு மிக்கவர் என்பதால் அனைவராலும் நேசிக்கப்பட்டார்.
* தெலுங்கில் இவர் இயக்கிய 2 படங்களுமே நந்தி விருதை வென்றன. ராவணன், துரியோதனன், கம்சன் என அத்தனை புராண வில்லன் வேஷங்களிலும் வெளுத்து வாங்கினார். ‘புராண பாத்திரங்கள் எல்லாம் இப்படித்தான் இருந்திருப்பார்களோ’ என்று மக்கள் கூறும் அளவுக்கு இவரது நடிப்பும் தோற்றப் பொலிவும் இயல்பாக அமைந்திருந்தது.
* சிறந்த நடிகருக்கான பல்வேறு தேசிய விருதுகள், ஜகார்தாவில் நடைபெற்ற மூன்றாவது இந்தோனேசியன் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகள், மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் பெற்றுள்ளார். உலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் எனப் போற்றப்பட்டார்.
* ‘மாயா பஜார்’ படத்தில் கல்யாண சமையல் சாதம் பாடலுக்கு கடோத் கஜனாக, இவரது நடிப்பு இன்றும் மக்கள் மனதில் பசுமையாகப் பதிந்துள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகின் மறக்க முடியாத மாபெரும் கலைஞர்களில் ஒருவரான எஸ்.வி.ரங்கா ராவ் 1974-ம் ஆண்டு 56-வது வயதில் மறைந்தார்.