சில நாட்களுக்கு முன்னர் வாடகைக் கார் ‘புக்’ செய்திருந்தேன். அரை மணி நேரமாகியும் வண்டி வரவில்லை. அழைத்தேன். பதிலில்லை. அந்தக் காரை ரத்து செய்யலாம் என்று நினைத்த போது ஓட்டுநரே அழைத்தார்.
"தம்பி டிராபிக்கா இருக்கு, வந்துட்டு இருக்கேன். பத்து நிமிஷத்துல வந்தர்றேன், கேன்சல் பண்ணிடாதீங்க".
இருபது நிமிடம் கழித்து வந்தார். வயது 50-க்கும் மேல் இருக்கும். பக்கத்தில் ஒரு இளைஞர் இருந்தார். காரில் ஏறியவுடன் ‘ஒன் டைம் பாஸ்வேர்’டைச் சொன்னேன். செல்பேசியின் செயலியில் அந்த எண்ணை அவரால் அழுத்தவே முடியவில்லை.
பிறகு எப்படியோ அந்த இளைஞர் எண்ணை அழுத்திக் கொடுத்தார். காரைக் கிளப்பியபோதும் செயலியைச் சரியாக அழுத்தாததால் கார் கிளம்பவில்லை. அந்த இளைஞரே பிறகு அதையும் அழுத்தித் தந்தார்.
நான் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தேன். பிறகு அவரே பேச ஆரம்பித்தார். "இந்த தொடுற போன் யூஸ் பண்ணதில்லைங்க தம்பி. ரெண்டு நாளாதான் இதுல ஓட்டுறேன். நேத்து ஆன் பண்ண தெரியாமலேயே காரை எடுக்கல தம்பி. இவன் என் பையன், காலேஜ்ல படிக்கிறான். இன்னக்கி ஒருநாள் கத்துக் குடுக்க வந்திருக்கான்".
அந்தப் பையன் எதற்கும் இருக்கட்டும் என்று தலையாட்டி வைத்தான். நான் பதிலேதும் சொல்லவில்லை. அந்தப் பையன் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அலுவலகம் வந்ததும் அவரே சரியாக ட்ரிப்பை முடித்து வைத்தார். சரியாக பட்டனை அழுத்திவிட்டதாக உணர்ந்து அவர் மகனைப் பார்த்தார். அவனும் தலையாட்டினான். என் பக்கம் திரும்பி, “ ஜீரோ காட்டுதுங்க. பேங்க்ல பணத்தை போட்டீங்களா?" என்று கேட்டார். ஆமாங்க என்றேன். அவர் மகன் அது ‘வேலட்’ நைனா என்றான். அவர் தலையாட்டிக் கொண்டார்.
நான் இறங்குவதற்குள் அடுத்த சவாரியிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்திருந்தது. அவரே அதை சரியாக உற்றுப் பார்த்து ‘அக்செப்ட்’ செய்துவிட்டு, முகம் முழுக்கப் புன்னகையோடு என்னையும் அவர் மகனையும் பார்த்தார். அளப்பரிய தொழில்நுட்பங்களை, எளியதொரு புன்னகை வென்றெடுத்த தருணமது.