புகழ்பெற்ற ஆஸ்திரிய ஓவியர்
ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியரும் அலங்காரக் கலைக்கு புதிய வடிவம் தந்தவருமான கஸ்டவ் கிளிம்ட் (Gustav Klimt) பிறந்த தினம் இன்று (ஜூலை 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் பிறந்தார் (1862). தந்தை நகை செதுக்கும் கைவினைக் கலைஞர். சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவரும் இவரது சகோதரர் எர்ன்ஸ்டும் ஓவியக் களத்தில் தடம் பதித்தனர். பள்ளிப் படிப்பு முடித்ததும், வியன்னாவில் தொடங்கப்பட்டிருந்த ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார்.
* அங்கு உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் பலர் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். அவர்களிடம் ஓவியக்கலையின் அத்தனை நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்தார். இவர், இவரது சகோதரர், ஓவியக் கல்லூரி நண்பர் ஆகிய மூவரும் தலைசிறந்த மாணவர்களாகப் பேராசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்றனர்.
* இவரது 17-வது வயதில் ஆஸ்திரிய மன்னரின் திருமண வெள்ளி விழா நடைபெற இருந்த மாளிகைக்கு அலங்காரம் செய்யும் மிகப்பெரிய வாய்ப்புக் கிடைத்தது. 1883-ல் ஓவியக் கல்லூரியிலிருந்து வெளியேறினார்.
* தன் நண்பர்களுடன் சொந்தமாக ஓவிய அரங்கை அமைத்துக்கொண்டு களமிறங்கினார். வெறும் சுவரோவியங்கள் வரைவது மட்டுமல்லாமல், மேஜை, நாற்காலி, அலமாரி, பீங்கான் பொருட்கள், பூச்சாடிகள் என அனைத்துப் பொருட்களையும் ஓவியத்துக்கு ஒத்திசைவான கலைநயத்துடன் வடிவமைத்துத் தருவது உள்ளிட்ட அத்தனை நுட்பங்களையும் உள்ளடக்கியதுதான் மாளிகை அலங்காரக் கலை எனப் புதிய வடிவம் கொடுத்தார்.
* இந்தப் புதுமையான படைப்பாற்றல், இவருக்குப் புகழ் சேர்த்தது. பண்டைய கிரேக்கக் காலத்திலிருந்து தற்போதைய காலகட்டம் வரையிலான மனித வரலாற்றை இந்த அருங்காட்சியகத்தில் தனித்தனி ஓவியமாக வரைய வேண்டும் என முடிவு செய்தார்.
* இதற்கான தகவல்களைத் தேடி ஒவ்வொரு நூலகமாக, அருங் காட்சியகமாகத் தேடி அலைந்து தகவல்களைத் திரட்டினார். அவற்றை எல்லாம் அற்புத ஓவியங்களாகத் தீட்டினார். 35-வது வயதிலேயே உலகின் சிறந்த ஓவியர்களுள் ஒருவராகப் புகழ் பெற்றார்.
*முதலில் எதார்த்த பாணி ஓவியங்களாக வரைந்துவந்த இவர், பின்னர் தனக்கென தனித்துவமான பாணியை வகுத்துக் கொண் டார். குறியீட்டு ஓவியராக (symbolist painter) மாறினார். அக்காலகட்டத்தின் முற்போக்குக் கலைஞர்கள், சிந்தனையாளர் களுடனும் இவருக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.
* பழமைவாதம் பேசும் கலைஞர்களோடு இயைந்துபோக முடியாத இவர், வியன்னா ஓவியக் கலைஞர்கள் சங்கத்திலிருந்து விலகினார். முற்போக்கு ஓவியர்கள் சங்கம் உருவானதில் முக்கியப் பங்கு வகித்தார். இவரது ஓவியப் பாணிகள் பலரது பாராட்டுகளைப் பெற்றாலும், அதே அளவு விமர்சனங்களையும் எதிர்கொண்டன. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் தனது ஓவியப்பணியில் முழு கவனம் செலுத்தினார்.
* ‘தி கிஸ்’ என்பது இவரது உலகப் புகழ்பெற்ற ஓவியம். இதை ஆஸ்திரிய அரசே விலைக்கு வாங்கிக்கொண்டது. மேலும், ‘கோல்டன் பேஸ்’, ‘கோல்ட் லீஃப்’, ‘ஜுடித்’, ‘பாலாஸ் அதேன்’, ‘டெத் அன்ட் லைஃப்’, ‘தி வெர்ஜின்’ உள்ளிட்ட இவரது ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை.
* ‘கிளிம்ட்டின் மஞ்சள்’ என்று குறிப்பிடப்படும் அளவுக்கு மஞ்சள் நிறத்தின் தாக்கம் இவரது ஓவியங்களில் அதிகம் இருந்தது. ஓவியக் கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கஸ்டவ் கிளிம்ட் 1918-ம் ஆண்டு 56-வது வயதில் மறைந்தார். இவர் மறைந்து 88 ஆண்டுகளுக்குப் பின்னர் 2006-ல் ‘அடெல் புளோச்-பாவர் I’ என்ற இவரது ஓவியம் 135 மில்லியன் டாலருக்கு நியூயார்க்கில் விற்பனையானது.