‘டீன் ஏஜ்’ வயதில் தன்னுடைய படுக்கையறை கண்ணாடியின் முன் கவலையோடு நின்று கொண்டிருக்கும் அன்புத் தோழிக்கு, நடிகை சோனம் கபூர் எழுதிக்கொள்வது... ‘ஏன் நான் ஒரு திரையுலக நாயகியை போல மின்னவில்லை?’ என்று நீ பெருங்கவலை கொள்கிறாயா? உனக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். தூங்கி எழுகிற போதே நாங்கள் யாரும் பேரழகியாக ஜொலிப்பதில்லை. உலகத்தில் இருக்கும் எந்த நடிகையும் அப்படிப்பட்ட அசல் அழகி இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
ஒவ்வொரு முறை மின்னும் கேமராக்கள் முன்னால் தோன்றுவதற்கு முன்னாலும் நான் ஒப்பனை அறையில் ஒன்றரை மணிநேரம் தவங்கிடக்கிறேன். 3-6 பேர் என் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒப்பனை செய்கிறார்கள். ஒரு தேர்ந்த அழகுக்கலை நிபுணர் என் நகங்களைப் பொலிவாக்குகிறார். என் கண் புருவங்கள் பிறைநிலா போல வளைக்கப்படுகின்றன. என் மேனி முழுவதும் ஒப்பனை பூச்சுக்கள் நிறைத்து மூச்சடைக்க வைக்கின்றன.
காலையில் ஆறு மணிக்கு எழுந்து ஒன்றரை மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறேன். சமயங்களில் படுக்கப்போவதற்கு முன்னும் உடற்பயிற்சி செய்கிறேன். நான் என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிட கூடாது என்பதைத் தீர்மானிக்க மட்டுமே ஒருவருக்குச் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறேன். நான் சாப்பிடுகிற சாப்பாட்டை விட அதிகமான சத்துக்கள் நான் போட்டுக்கொள்ளும் ஒப்பனை பொருட்களில் இருக்கிறது என்கிற அளவுக்கே நான் சாப்பிட முடிகிறது. நான் அணிவதற்கு உரிய கவர்ந்து இழுக்கும் ஆடைகளைத் தேர்வு செய்யவே ஒரு குழு இருக்கிறது. இவ்வளவு போராடியும், "மாசற்ற" முழு அழகு சமயங்களில் வெளிப்படுவதில்லை. போட்டோஷாப் புண்ணியத்தில் நான் பேரழகியாகப் படைக்கப்படுகிறேன். ஆக, இது உண்மையில்லை. எனவே, ‘எங்களைப் போல அழகியாக வேண்டும்’ என்று கனவு காண வேண்டாமே!
தன்னம்பிக்கை மிளிர்பவராக ஆக ஆசைப்படுங்கள். அழகாக, கவலைகள் அற்றவராக, ஆனந்தம் மிக்கவராக இருக்க ஆசைப்படுங்கள். இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற கவலையில்லாமல் கம்பீரமாக வாழுங்கள். நண்பர்களே... அடுத்த முறை 13 வயது பெண் ஒருத்தி மாசு மருவற்ற, பளபளக்கும் கூந்தல் கொண்ட ஒரு பாலிவுட் நாயகியின் படத்தைப் பார்த்து சொக்கி நின்றால், அந்தக் குறைகளற்ற பேரழகின் பின்னிருக்கும் குன்று போன்ற குறைகளைக் கொட்டுங்கள். அந்த வளரிளம் பருவப் பெண் எந்த ஒப்பனைகளும் இல்லாமலே எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று சொல்லுங்கள். அவளின் புன்னகை, கள்ளமில்லாத சிரிப்பு, அறிவுத்திறம், இயல்பான நடை என்று எதையேனும் பாராட்டுங்கள். நான் குறையுள்ளவள் என்கிற நம்பிக்கையோடு அவளை வளர விடாதீர்கள்.
‘கட் அவுட்’களில் கலக்கலாகச் சிரிக்கும் பெண்ணிடம் இருக்கும் ஏதோ ஒன்று தன்னிடம் இல்லை என்று போலியாக அவள் ஏமாற விடவேண்டாம். இயல்பாக இருப்பதே இனிமை என உணர வையுங்கள். ‘கட் அவுட்’ நாயகி போல ஆவது ஒன்றும் அவளைப்போன்ற உண்மை அழகிக்கான இலக்கு இல்லை எனப் புரியவையுங்கள்.
சோனம் கபூர், திரைப்பட நடிகை.
தமிழில்: பூ.கொ. சரவணன்