வலைஞர் பக்கம்

நாடக விமர்சனம்: ‘டெமோ-க்ரேசி’

செய்திப்பிரிவு

அரசியல் களத்தைத் தேர்ந்தெடுத்து அதை நாடகமாக்கி பெரும் வெற்றியைக் கண்டவர் நடிகர் சோ ராமஸ்வாமி. அதுவும், இந்தியாவில் அரசியல்வாதிகளின் நகைச்சுவை கலந்த அட்டகாசங்களுக்குப் பஞ்சமே கிடையாது என்கிறபோது கேட்கவா வேண்டும்! இவற்றினை ஒரு கதைக்குள் புகுத்தி, நகைச்சுவை கலந்த வசனங்களோடு நாடகமாக்கி வெற்றி கண்டவர்களில் தமிழ் நாடகத் துறையில் சோவுக்கே முதலிடம். அவர் பாணியைப் பின்பற்றி ஓரிரு நாடகக் குழுக்கள் முயற்சி செய்தாலும் சோ ராமஸ்வாமி அளவுக்கு தொடர்ந்து வெற்றி காண முடியவில்லை.

1960-களும், 70-களும் தமிழ் மேடை நாடகங்களின் பொற்காலம் என்றே கூறலாம். தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் ஓங்கியதில், நாடகங்கள் பின்னடைவு அடைந்தன. கைபேசிகளில் கேளிக்கைகள் கிடைக்க, நாடக அரங்குகளுக்கு வரும் கூட்டமும் குறையத் தொடங்கியது. எனினும், சில நாடகக் குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

இந்தத் தருணத்தில் ‘அண்டூ ஃபைன் ஆர்ட்ஸ்’ (Undo Fine Arts) என்ற புதிய நாடகக் குழு தோன்றியிருப்பது ஆச்சரியம் அளித்தாலும், அவர்களது தன்னம்பிக்கையைப் பாராட்டியே ஆகவேண்டும். அதிக ஆர்வம், உத்வேகத்துடன் இந்த இளைஞர் கூட்டம் கிளம்பியிருப்பது தமிழ் நாடகத் துறைக்கும் நல்லதே!

தற்போது நகைச்சுவை நாடகங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு, 70-களில் வெற்றி கண்ட நகைச்சுவை நாடகங்களை மீண்டும் மேடைக்குக் கொண்டுவரும் போக்கு தொடங்கியுள்ள வேளையில், இவர்கள் புதியதொரு கதையை மேடையேற்றுவது நல்ல முயற்சியே.

இவர்களது முதல் நாடகம் ‘டெமோ-க்ரேசி’. இது, வழக்கமான அரசியல் நாடமாக இருந்தாலும், கதாசிரியரும், வசனகர்த்தாவுமான அருண்குமார் நல்ல கருத்துகளை நேர்த்தியாக முன்வைக்கிறார். அவை பளிச்சென்றும், முகத்தில் அடித்தாற்போலும் இருக்கின்றன. இந்நாடகத்தின் இயக்குநரும் அவரே. முதலமைச்சராக அலட்டிக்கொள்ளாத நடிப்பாலும், தடையில்லாத தமிழ் உச்சரிப்பாலும் நம்மைக் கவர்கிறார்.

லஞ்சம் புரையோடிப்போன நமது சமூகத்தை, அதில் இருந்து மீட்பதற்கான தீர்வைக் காண்பதே இந்நாடகத்தின் நோக்கம். கோமாளி அரசியல்வாதியாக அவ்வப்போது தன் கூட்டாளிகளோடு தோன்றி, மறந்தேபோய்விட்ட மதறாஸ் தமிழில் பேசி குழப்பத்தை விளைவிப்பவராக ரகுநாதன் ராமானுஜம் சிரிப்பை வரவழைக்கிறார். அவர்தான் இந்நாடகத்தின் தயாரிப்பாளர். ஆட்டோ ஓட்டுநராக வரும் பெட்டர், அரசியலில் நுழையும் இளைஞரான தினேஷ் ஆகிய இருவருக்கும் நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது. கன்னிமுயற்சியில் இக்குழுவினர் தேர்வடைந்துவிட்டனர் என்றே சொல்லலாம்!

SCROLL FOR NEXT