இலக்கியப் பத்திரிகைகளின் ஆரோக்கியமான பருவம் என்று 1970-களைக் குறிப்பிடலாம். எனினும் அப்போதைய இலக்கிய இதழ்கள் வடிவமைப்பின் அழகியலில் பெரிய ஆர்வம் கொண்டிருக்கவில்லை. அக்குறையைப் போக்கும் புதிய முயற்சியாக ‘அஃக்’ ஒரு ‘எழுத்தாயுத மாத ஏடு’ என்கிற பிரகடனத்தோடு 1972 ஜூனில் முதல் இதழைக் கொண்டு வந்தார் பரந்த்தாமன். இதழையும் புத்தகங்களையும் அச்சிட, “அச்சைக் கலையாக்குகிறார்கள்” - என்ற ஆசை வாக்கிய முழக்கோடு தனது சேலம் ஜாகிர் அம்மாப்பாளையம் வீட்டிலேயே ‘பிருந்தாவனம்’ அச்சகத்தையும் தொடங்கினார். அதில், பஞ்சாலைத் தொழிலாளியான அவரது அம்மாவின் ரத்தமும், வியர்வையும், சேமிப்புத் தியாகமும் கலந்திருந்தது, அச்சுக் கோக்கும் மனைவி சத்தியபாமாவின் உழைப்பும், இவரது கலையும் இணைந்திருந்தது. முதல் இதழின் அழகிய வடிவத்தைப் பார்த்துப் பிரமித்துப் போனது சிற்றிதழ் உலகம்.
பல எழுத்தாளர்களுக்கும் நிறைய பக்கங்கள் ஒதுக்கி அவர்கள் மீது அதிக வெளிச்சம் விழக் காரணமாயிருந்தது ‘அஃக்’ இதழ். பிரமிளின் 38 கவிதைகளை, ‘கண்ணாடியுள்ளிருந்து’ என்று தலைப்பிட்டு ஒரே இதழில் கொண்டுவந்தார். பிரமிளின் முதல் கவிதைத் தொகுப்பாகவே அதைக் கொள்ளலாம். வெங்கட் சாமிநாதனின், ‘சில கேள்விகள், சில பதில்கள், சில தெரியாதுகள்’ தொடர் கட்டுரை உட்பட பல கட்டுரைகள் வந்தன. முதல் இதழில் கி.ரா. ‘ஜீவன்’ என்கிற தலைப்பில் சிறுகதை எழுதியிருந்தார்.
1972 செப்டம்பர், ஐந்தாவது இதழில் என்னுடைய 20 கவிதைகள், நீலமணியின் ஒன்பது கவிதைகள் வெளிவந்தன. அம்பையின் ‘பயங்கள்’, இந்திரா பார்த்தசாரதியின் ‘போர்வை போர்த்திய உடல்கள்’ ஆகிய நாடகங்களையும் தன் ஈடுபாடு மிக்க பக்க அமைப்புடன் ‘அஃக்’கில் கொணர்ந்தார். ஞானக்கூத்தனின் பட்டிப் பூ கவிதையும், அவர் மொழி பெயர்த்த பசவண்ணாவின் கன்னடக் கவிதைகளின் மொழிபெயர்ப்பும் வந்தன. நீண்ட காலத்துக்குப் பின் பசுவய்யா ‘ஓய்ந்தேன் என மகிழாதே/ உறக்கமல்ல தியானம்/ பின் வாங்கல் அல்ல பதுங்கல்’ என்று அறைகூவலிடும் தன் கவிதைகளுடன் டிசம்பர் 1972 ஆறாவது இதழில் மறுபடி சிரசுதயமானார். சுந்தர ராமசாமியின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ 1976 ஜூலை-ஆகஸ்ட், 17-வது இதழில் வெளியானது.
பரந்த்தாமனே அச்சுக் கோத்து, தனது லினோ கட், பன்வர் கட் ஓவியங்களை மிகப் பொருத்தமாக இடையிட்டு, மெய்ப்புத் திருத்தி, பக்கம் சமைத்து அவரே ‘டிரெடி’லில் மிதித்து அச்சிடுவார். அவர் உபயோகித்த அச்சுருக்கள் அவருக்கென்றே பிரத்யேகமாகத் தயாரானவை போல வேறெந்த அச்சகத்திலும் இருக்காது. அந்த ஈய அச்சுக்களில்தான், கங்கைகொண்டானின் ‘கூட்டுப்புழுக்கள்’, அப்துல் ரகுமானின் ‘பால்வீதி’, வண்ணதாசனின் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ எல்லாவற்றையும் வார்த்தெடுத்தார். அதற்காகவே தேசிய அளவில் பரிசுகளையும் வென்றார். இதழை அவரது ஓவியங்களுடன் ஆதிமூலம், பிரமிள், ஏ.ராஜாராம் (பிரம்மராஜன்), ஜெயராமன், சாரங்கன் என்று பலரின் ஓவியங்களும் அலங்கரிக்கும்.
வானம்பாடிக் கவிதைகளின் வகைமையில் எழுதிவந்த அவர் தன் எழுத்துகளால் தன் இதழை ஒருபோதும் நிரப்பியதில்லை. அக்காலத்து இளைஞர்களைப் போலவே ஜெயகாந்தன் மீது மிகப்பெரிய காதல் உடையவர். அவரைப்போலவே உடையணிந்து, சிகை அலங்கரித்துக் கொண்டிருப்பார். உடல் மொழிகளும் அவரைப்போலவே இருக்கும். பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்தும் அவ்வப்போதுமாக 1978 வரை இருபது இதழ்கள் வரை நடத்தினார். அப்புறம் அவர் சேலத்தை விட்டு சென்னைக்கு வந்து சினிமா இயக்கும் ஆசைக்கனவில் அலைந்து திரிந்து தன்னை வெகுவாகக் கரைத்துக் கொண்டார். ‘வந்தவர்கள் போகிறார்கள்’ என்ற தலைப்பில் ஒரு முழு ‘ஸ்க்ரிப்’டைக் கையிலும் மனதிலும் சுமந்து திரிந்தார். கடைசியில் ஞாபகமறதி நோயால் பெரிதும் கஷ்டப்பட்டு ஒரு தனியார் இல்லத்தில் இருந்தார்.
1978-ல் கி.ரா அவருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “பரந்த்தாமனுக்கு, தலை வணங்குகிறேன். தேன் கூட்டை எத்தனை தரம் அழித்தாலும் திரும்பவும் திரும்பவும் அது கூடுகட்டித் தேன் நிரப்பும். அயராத உங்கள் செய்கை, என்னை உணர்ச்சிவயப்படச் செய்கிறது” என்று குறிப்பிட்டிருப்பார். அது போல 2006-ல் அவரைச் சந்தித்தபோது, பரந்த்தாமன் மீண்டும் ‘அஃக்’ இதழை, இன்றைய வளர்ந்துவிட்ட தொழில்நுட்ப உதவியோடு உலகே வியக்கும் வகையில் கொண்டு வர வேண்டும் என்ற அழுத்தமான கனவோடு இருந்தார். அழுத்தத்துக்காகவோ என்னவோ தன் பெயரை ‘பரந்த்தாமன்’ என்றே குறிப்பிடுவார். நோய்மை வராதிருந்தால் கண்டிப்பாக அந்த இலக்கியக்கூட்டை மறுபடி கட்டி, மறுபடி தேன் நிரப்பி இருப்பார்!
- கலாப்ரியா, கவிஞர் , தொடர்புக்கு: kalapria@gmail.com