இந்தியாவின் புகழ்பெற்ற வனவிலங்கு ஆராய்ச்சியாளர் ஜீவநாயகம் சிரில் டேனியல் (Jeevanayagam Cyril Daniel) பிறந்த தினம் இன்று (ஜூலை 9), அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* நாகர்கோவிலில் பிறந்தார் (1927). சொந்த ஊரிலேயே பள்ளிக் கல்வி கற்றார். விலங்குகளின் மீதான அம்மாவின் நேசம் இவருக்கும் தொற்றிக் கொண்டது. நரிகளின் ஊளை, ஆந்தைகளின் அலறல் நமக்கு ஏதோ சேதி சொல்கின்றன என்று அம்மா கூறக்கேட்டு, இது போன்ற ஏராளமான நுணுக்க மான விஷயங்களைத் தெரிந்து கொண்டார்.
* உயிரினங்கள் குறித்து மேலும் மேலும் அறிந்துகொள்ளும் இவரது ஆசையை நிறைவேற்றுவதில் இவரது தந்தையும் துணை நின்றார். திருவனந்தபுரத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நூலகத்தில் இயற்கையியல், ஆப்பிரிக்க காட்டுயிர்கள் தொடர்பான ஏராளமான நூல்களைப் படித்தார்.
* சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சலீம் அலியின் பணிகளால் உத்வேகம் பெற்றார். நீர், நில வாழ்வினங்கள், குறிப்பாக இவற்றில் அழியக்கூடிய ஆபத்தில் உள்ள ஆசிய யானைகள், காட்டு எருமை, புலி, வரையாடு, உப்புநீர் முதலை, கானமயில் குறித்தெல்லாம் ஆராய்ந்தார். பறவைகள் வலசை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
* சலீம் அலியின் நட்பைப் பெற்ற இவர், பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் சேர்ந்தார். 1950களில் அதன் காப்பாளராகத் தன் பணியைத் தொடங்கினார். பின்னர் அதன் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
* இந்தப் பணியின்போது களப்பணிகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு அவை குறித்து, கட்டுரைகளையும் நூல்களையும் எழுதினார். பல இயற்கை, வன உயிரி ஆய்வாளர்களையும் உருவாக்கினார். உலகப் பாதுகாப்பு அமைப்பு, உலக ஊர்வன மாநாடு, குரங்கினம், ஆசிய யானை, முதலை, பாம்புகள் ஆகியவற்றுக்கான நிபுணர் குழுக்களில் முக்கிய அங்கம் வகித்தார்.
* கோடியக்கரை, கிழக்குத் தொடர்ச்சி மலை, மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் உயர்ந்த பகுதிகளிலும் சத்தீஸ்கர் மாநிலம் பஸ் தாரில் உள்ள தீபகற்பக் காடுகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டார்.
* இந்திய வன உயிர்கள் நிறுவனத்தின் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் கல்விக் குழுக்களில் இடம்பெற்றிருந்தார். பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக ஆய்வு இதழின் நிர்வாக ஆசிரியராக சுமார் 40 ஆண்டு காலம் செயல்பட்டார். இயற்கை ஆர்வலர்களுக்காக ‘ஹார்ன்பில்’ என்ற இதழைத் தொடங்கினார்.
* ‘தி புக் ஆஃப் இந்தியன் ரெப்டைல்ஸ் அன்ட் ஆம்பிபியன்ஸ்’, ‘ஏ வீக் வித் எலிபன்ட்ஸ்’, ‘ஏ செஞ்சுரி ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி’, ‘பேட்ஸ் ஆஃப் இன்டியன் சப் கான்டினன்ட் ஏ ஃபீல்ட் கைட்’, ‘கன்வர்ஷன் இன் டெவலப்பிங் கன்ட்ரீஸ்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். தான் குருவாக மதித்த சலீம் அலி எழுதிய ‘தி புக் ஆஃப் இந்தியன் பேர்ட்ஸ்’ நூலைத் திருத்தி அவரது நூற்றாண்டு விழாவில் அதன் 12-வது பதிப்பை வெளியிட்டார்.
* பீட்டர் ஸ்காட் பாதுகாப்பு விருது, சாங்ச்சுவரி இதழ் வாழ்நாள் சாதனையாளர் விருது, ஆசிய யானைகள் பற்றிய ஆராய்ச்சிக்காக கேரள வேளாண்மைப் பல்கலைக்கழக விருது, இந்திராகாந்தி பர்யாவரன் புரஸ்கார் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
* முதுமையடைந்து, நோய்வாய்ப்பட்ட நிலையிலும்கூடத் தன்னை நாடி வரும் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார். சர்வதேச அளவில் ‘ஜே.சி.’ என பிரபலமடைந்த ஜீவநாயகம் சிரில் டேனியல் 2011-ம் ஆண்டு 84-வது வயதில் மறைந்தார்.