தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர்
தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவரும், குறுகிய காலத்தில் படைப்புலகுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான பி.ஆர்.ராஜமையர் (B.R.Rajam Iyer) பிறந்த தினம் இன்று (ஜனவரி 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* திண்டுக்கல் மாவட்டம் வத்தலக் குண்டில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் (1872) பிறந்தார். திண்ணைப் பள்ளி, உள்ளூர் பள்ளி, மதுரை பாண்டித்தியப் பாடசாலையில் கல்வி கற்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார்.
* தமிழ் இலக்கியத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த இவர், எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். கணித வித்வான் பூண்டி அரங்கநாத முதலியாரால் இயற்றப்பட்ட கச்சிக்கலம்பகப் பாடல்களுக்கு விளக்கவுரை எழுதினார்.
* திருமணமானதும் சென்னையில் குடியேறினார். கம்பன் பாடல்களும், ஷேக்ஸ்பியர், ஷெல்லி, வேர்ட்ஸ்வொர்த் உள்ளிட்டோரின் படைப்புகளும் கவிதை எழுதும் ஆர்வத்தைத் தூண்டின. உலகமே வியக்கும் வண்ணம் ஒரு வரலாற்று நூல் எழுத விரும்பினார்.
* அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளின் முன் னேற்றத்துக்கான வழிமுறைகளை அறிந்துவந்து, நம் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பது இவரது விருப்பமாக இருந்தது.
* பட்டம் பெற்றதும் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். இறுதித் தேர்வில் வெற்றி பெற முடியாததால் விரக்தியடைந்தார். தாயுமானவர் எழுதிய நூலைப் படித்ததும், இவருக்குள் ஆக்கமும் எழுச்சியும் பிறந்தன. ஆழமாகச் சிந்தித்து நிலையானது, நிலையற்றது குறித்த விழிப்புணர்வைப் பெற்றார். கைவல்ய நவநீதம், தத்துவராய சுவாமிகளின் பாடல்கள் இவரை ஞானமார்க்கத்துக்கு வழிநடத்தின.
* ‘விவேக சிந்தாமணி’ மாத இதழில் ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்னும் நாவலைத் தொடராக 3 ஆண்டுகளுக்கு எழுதினார். சமூகம், பெண்கள் நலன், நகைச்சுவை, ஆன்மிகம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நாவலில் பல்வேறு பழமொழிகள், குட்டிக் கதை கள், வேத, வேதாந்தக் கருத்துகளை எளிய நடையில் எழுதினார்.
வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இது, 1896-ல் நூல் வடிவம் பெற்றது. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அங்கீகாரம் பெற்று, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடநூலாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. நூலாக வெளிவந்த பிறகு குறுகிய காலத்தில் 6 பதிப்புகள் வெளிவந்தன. பிற்காலத்தில் மேலும் பல பதிப்புகள் வெளிவந்தன.
* கம்பராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, கம்பனின் கவிச்சிறப்பு, சீதையின் பெருமை குறித்து எழுதினார். ‘பிரம்மவாதின்’ என்ற ஆங்கில மாத இதழில் கட்டுரை எழுதினார். சாந்தானந்த சரஸ்வதி சுவாமிகளின் அறிமுகம் கிடைத்த பிறகு, அவரை தன் குருவாக ஏற்றார். அவரிடம் உபதேசம் பெற்று ஆன்மிக, தியான, யோக மார்க்க முறைகளைப் பயிற்சி செய்தார்.
* சென்னைக்கு வந்திருந்த சுவாமி விவேகானந்தரின் அறிமுகமும் கிடைத்தது. அவரது ஆசியுடன் தொடங்கப்பட்ட ‘பிரபுத்தபாரதா’ என்ற ஆங்கில இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதில் தத்துவ, வேதாந்த, புராண, சமயக் கட்டுரைகளை எழுதினார். இவை தொகுக்கப்பட்டு பின்னாளில் ‘வேதாந்த சஞ்சாரம்’ (ஆங்கிலத்தில் ‘ராம்பிள்ஸ் இன் வேதாந்தா’) என்ற தலைப்பில் 900 பக்கங்கள் கொண்ட நூலாக வெளிவந்தது.
* ஓய்வே இல்லாமல், எழுதுவதிலும், ஆன்மிகப் பயிற்சியிலும் ஈடுபட்ட இவர், உடல்நலனைப் புறக்கணித்ததால் நோய்வாய்ப்பட்டார். சாதனைப் படைப்பைத் தந்தவரும், எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், ஆன்மிக சிந்தனையாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவருமான பி.ஆர்.ராஜமையர் 26-வது வயதில் (1898) மறைந்தார்.