வலைஞர் பக்கம்

இணைய களம்: மனசு கேட்கவில்லை...

செய்திப்பிரிவு

நம் தலைவர்களில் தொல். திருமாவளவனைத் தவிர, வேறு யாரும் அசோகமித்திரனுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றதாகத் தெரியவில்லை. அம்மா கட்சியை விடுங்கள், அவர்களுக்கு இலக்கியமும் தெரியாது, தமிழும் தெரியாது. இந்த அய்யா கட்சிக்கு என்னாயிற்று? மு.க.ஸ்டாலின் போயிருக்க வேண்டாமா? ‘தமிழ்.. தமிழ்’ என்று முழங்குபவர்கள் அந்த அடையாளத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் சென்றிருக்க வேண்டாமா? அசோகமித்திரன் தமிழின் அடையாளம் அல்லவா? எவ்வளவு போராடி, எவ்வளவு இழந்து இந்த மொழிக்கு தன் பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

கனிமொழியாவது போயிருக்கலாமே? அவர் கவிஞர் அல்லவா, நவீன தமிழ் இலக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர் அல்லவா? டெல்லியிலிருந்து வந்துவிட்டுப் போக எவ்வளவு நேரமாகிவிடும்? சரி, சி.மகேந்திரனோ, முத்தரசனோ, ஜி.ராமகிருஷ்ணனோ போனார்களா? இலக்கிய மேடைகளில் பெர்னாட் ஷா, ஷேக்ஸ்பியர் எனத் தொண்டைத்தண்ணி வரளப் பேசும் வைகோ போயிருக்க வேண்டாமா? யாராவது இந்த அசோகமித்திரன் என்பவர் யார், அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்வது எவ்வளவு முக்கியம் எனச் சற்றுப் புரியும்படி எடுத்துச் சொல்லியிருந்தால், கேப்டன்கூட போயிருப்பார்.

மற்றவர்களுக்கு என்ன? நம் மொழியின் அடையாளமாக விளங்கும் எழுத்தாளர்களை, கவிஞர்களை, கலைஞர்களைக் கொண்டாட முடியாமல் என்ன மொழிப் பற்று? அப்புறம் யாரைக்கொண்டு போய் உலக அரங்கில் எங்கள் அடையாளம் என முன்னிறுத்துவீர்கள்? வாழும் காலத்தில் எழுத்தாளர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் தராத, எந்த மதிப்பையும் அளிக்காத தமிழ்ச் சமூகம், அவர்கள் செத்துப்போனால் மதிக்க வேண்டுமென எதிர்பார்ப்பது பேதமைதான், எனினும் மனசு கேட்கவில்லை.

அசோகமித்திரனே சொன்னதுபோல, ‘நாம் போய்ப் பார்ப்பது செத்துப்போனவருக்குத் தெரியவா போகிறது’ என ஆறுதல்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

SCROLL FOR NEXT