இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை
இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனையும், இருமுறை விண்வெளிப் பயணம் மேற்கொண்டவருமான கல்பனா சாவ்லா (Kalpana Chawla) பிறந்த தினம் இன்று (மார்ச் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
ஹரியாணா மாநிலத்தில் உள்ள கர்னால் என்ற நகரத்தில் பிறந்தவர் (1962). மிகவும் புத்திசாலிக் குழந்தையான இவரை முன்கூட்டியே பள்ளியில் சேர்ப்பதற்காகப் பிறந்த தேதியை 1961, ஜூலை 1-ம் தேதி என்று பெற்றோர் பதிவு செய்துவிட்டனர். இவரது சான்றிதழ்களிலும் அப்படியே காணப்படுகிறது.
தாகூர் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். எதிர்காலத்தில் விண்வெளி பொறியாளராக வேண்டும் என்று விரும்பினார். ஆராய்ச்சியாளர்கள், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை விரும்பிப் படித்தார்.
1982-ல் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து விமானப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
1984-ல் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1986-ல் கொலரேடோ பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து பயின்று விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் சேர்ந்தார். அங்கு கம்ப்யுடேஷனல் ஃப்ளுயட் டைனமிக்ஸ் மற்றும் வெர்டிகல் / ஷார்ட் டேக்ஆஃப் அன்ட் லாண்டிக் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
1993-ல் ஓவர்செட் மெத்தட்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் ஆய்வு விஞ்ஞானியாகவும் சேர்ந்தார். அடுத்த ஆண்டே இவரது விண்வெளிக் கனவை நனவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு பிறந்தது. விண்வெளிப் பயணத்துக்கான பயிற்சித் தேர்வுக்கு விண்ணப்பித்தார். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேரில் இவரும் ஒருவர். 1995-ல் பயிற்சி முடிந்து விண்வெளி வீராங்கனையாகத் தகுதி பெற்றார்.
கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87 (STS-87)-ல் பயணம் செய்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997-ல் இவரையும் சேர்த்து ஆறு வீரர்கள் கொண்ட குழு ஃப்ளோரிடாவில் கேப் கெனவரல் முனையிலிருந்து விண்ணுக்குச் செலுத்தப்பட்டது. விண்வெளியில் 16 நாட்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு 252 தடவை பூமியைச் சுற்றியது இந்த விண்கலம். இதன்மூலம் விண்வெளிக்குச் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
2003-ம் ஆண்டு விண்வெளியில் பறக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107)-ல்கல்பனா உள்ளிட்ட ஏழு வீரர்கள் அடங்கிய குழு விண்ணில் பாய்ந்தது. பிப்ரவரி 1-ம் தேதி, 16 நாட்கள் பயணம் முடித்து தரையிறங்கு வதற்குச் சுமார் 15 நிமிடங்கள் இருந்தபோது, டெக்சாஸ் வான்பரப்பில் விண்கலம் வெடித்துச் சிதறியது. கல்பனா உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர். கல்பனா சாவ்லாவுக்கு அப்போது வயது 41.
சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, வானை வசப்படுத்திய கல்பனா, தன் கனவு வெளியான விண்வெளியிலேயே இறந்து போனார்.
அமெரிக்க காங்கிரேஷனல் ஸ்பேஸ் மெடல் ஆஃப் ஹானர் விருது, நாசா ஸ்பேஸ் பிளைட் மெடல், நாசா டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்உள்ளிட்ட பல பதக்கங்கள், விருதுகள் வழங்கப்பட்டன. 2004-ம்ஆண்டிலிருந்து ‘கல்பனா சாவ்லா’ விருதை இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதற்காக வழங்கிவருகிறது கர்நாடக அரசு. 2011-ம் ஆண்டு முதல் வீரதீர சாகசங்கள் புரியும் பெண் களுக்கு இவரது பெயரில் இந்திய அரசு விருது வழங்கி வருகிறது.
- ராஜலட்சுமி சிவலிங்கம்