வலைஞர் பக்கம்

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 35: ஆயிரம் அகல் விளக்கு ஏற்றப்பட்ட மசூதி!

எஸ்.முத்தையா

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பற்றி சென்னை கிறிஸ்துவக் கல்லூரியின் முன் னாள் முதல்வரும்,  கிருஷ்ண தேவ ராய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் எம்.ஆபேல் எழுதிய ‘கிளிம்ப்ஸஸ் ஆஃப் இந்தியன் நேஷனல் மூவ்மெண்ட்’ (Glimpses of Indian National Movement) என்ற புத்தக வெளியீட்டு விழா 2005 ஏப்ரலில் நடந்தது. கல்லூரி மாண வர்களானாலும் சாதாரண வாசகர் களானாலும் எளிதாகப் படிக்கவும், நேரடியாகப் புரிந்துகொள்ளவும் உதவும் சரளமான நடையில் புத்தகம் எழுதப் பட்டிருக்கிறது. நம்மால் மறக்கப்பட்டு விட்ட இந்திய சுதந்திரப் போரின் முக்கியமான கட்டங்களை எளிதில் நினைவில் பதியவைக்கும் வகையில் நூலில் தகவல்கள் நிரம்பியுள்ளன.

புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்க்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக மிகவும் உருக்கமான வகையில் வேண்டுகோள் விடுத்தார். மிகச் சுருக்கமான அந்தப் பேச்சின்போது நான்கு முறை பலத்த கரவொலி எழுந்ததில் இருந்தே அவ ருடைய பேச்சின் வலிமையை உணர்ந்துகொள்ளலாம். சுதந்திரப் போராட்ட காலத்தில் நிலவிய இந்து - முஸ்லிம் ஒற்றுமை எப்போதும் தொடர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தது எந்தக் காலத்துக்கும் பொருந்தும்.

அவருக்கும் முன்னதாக, பேராசிரியர் எஸ்.கோபாலகிருஷ்ணன் பேசினார். அவர் நடப்பு ஆய்வுகளுக்கான மையத் தைச் சேர்ந்தவர். அடையாறில் உள்ள இறையியல் மன்றத்தில்தான் ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஆங்கிலேயர் முதலில் பேசினார். பிறகு, ரகுநாத ராவ் என்பவர் மயிலாப்பூர் மாட வீதியில் வசித்த இல்லத்தில் 1884-ல் நடந்த கூட்டத்தில் அடுத்தகட்ட நகர்வுக்கான விவாதம் நடந்தது. அந்த இடத்தையும் சம்பவத்தையும் நாம் மறந்துவிட்டோமே என்று கோபாலகிருஷ்ணன் பேசியபோது ஆதங்கப்பட்டார்.

இந்தியர்கள் ஜனநாயக நடைமுறை களில் நல்ல பயிற்சி பெற வேண்டும், தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்வதற்கான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. பிறகு, அதன் தலைமைப் பொறுப்புக்கு வந்த இந்தியத் தலைவர்கள் பூரண சுதந்திரமே தங்களுடைய லட்சியம் என்று பிரகடனப்படுத்தினர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர மாநாடு 1887 டிசம்பரில் முதல்முறையாக மெட்றாஸ் நகரில் நடத்தப்பட்டது. அப்போது ஆயிரம் விளக்கில் இருந்த மசூதியில் இந்துக் களும் முஸ்லிம்களும் சேர்ந்து 1,000 அகல் விளக்குகளை ஏற்றி வைத்தனர். அடிமை வாழ்க்கை என்ற இருள் மறைந்து சுதந்திர வாழ்க்கை என்ற ஒளி துலங்க இரு மதத்தவரும் ஒற்றுமையோடு சுதந்திரப் போராட்ட களத்தில் குதிக்க வேண்டும் என்ற வேட்கையோடு அந்த மாநாடு தொடங்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டதைப் பார்த்து இந்துக் கள் பரவசம் அடைந்தனர். கிரீம்ஸ் சாலைக்கு அருகில் மக்கேஸ் கார்டன் என்ற இடத்தில் மாநாடு நடந்தது. 1,000 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டதை தமிழ் அறிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமான சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் சொல்ல, தான் கேட்டதாக கோபாலகிருஷ்ணன் அக்கூட்டத்தில் விவரித்தார்.

ஆயிரம் விளக்கு மசூதியில் மொகரத் தின்போது ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஏராளமான எண்ணிக்கையில் வந்து கூடுவர். வருகிறவர்களுக்காக 1810-ல் ஆர்க்காடு நவாப் குடும்பத்தாரால் அங்கே பெரிய ஹால் கட்டப்பட்டது. 1820-ல், தொழுகை நடத்த வசதியாக மசூதி கட்டப்பட்டது. சமுதாய நலனில் அக்கறைகொண்டு அங்கே பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.

ஆர்க்காடு நவாப் முகம்மது அப்துல் அலி 2005-ல் பேசியதன் சாரம் போல, 1887-ல் நடந்த காங்கிரஸ் மாநாடு குறித்து, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் அதற்கும் முன்னரே எழுதியிருந்தது. இந்திய அளவில் மூன்றாவதான அந்த மாநாடு, மெட்றாஸ் நகரில் முதல்முறையாக நடத்தப்பட்டது குறிப் பிடத்தக்கது.

தேச விடுதலைக்கான ஒரே குரல்

“மூன்றாவது காங்கிரஸ் மாநாடு வெற்றிகரமாக நடந்தது. சமீபத்தில் நாம் மேற்கொண்ட கடும் முயற்சிகளுக்குப் பலனாக ஏராளமான முஹம்மதிய சகோதரர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்களும் மாநாடு நடந்த முறையும் அவர்களை மிகவும் கவர்ந்தன. அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நல்லுணர்வுகள் மேலும் வலுப்படவும் எல்லா இடங்களிலும் பரவவும் நாம் மேலும் உழைக்க வேண்டும்.

இந்துக்களை எப்படிச் சந்திக்கிறோமோ அப்படியே முஸ்லிம்களையும் நாம் சந்திக்க வேண்டும். படித்தவர்களின் கருத்துகளை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். கடந்த சில வாரங்களாகக் கடுமையாக உழைத் தோமே என்ற எண்ணத்தில் நாம் சிறிது ஓய்வெடுத்தால் இந்த வேகத்தை இழந்துவிடுவோம். தயாப்ஜியின் தலைமையில் நடந்த மாநாட்டுக்கு ஏராளமான முஸ்லிம்கள் வந்ததன் பலன் நமக்குத் தொடராமல் போய்விடும்.

சமுதாயத்தில் முக்கியமான இடத்தில் இருப்பவர்கள் முஸ்லிம்கள். அவர்களை உரிய முறைப்படி அழைத்தால் நம்மோடு இணைந்து தேச விடுதலைக்காகப் போராட முன்வருவார்கள். முஸ்லிம் களுடைய ஒத்துழைப்புக்கு இந்துக்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர், காரணம், இருவரும் சேர்ந்து கோரிக்கை விடுத்தால் அது தேச விடுதலைக்கான ஒரே குரலாக ஒலிக்கும். ஊர்வலம் எந்தப் பாதையில் செல்ல வேண்டும், மசூதிக்கு எதிரில் இசைக் கருவிகளை இசைக்கக் கூடாது என்பது போன்ற அற்ப விஷயங்களில் மோதிக்கொள் வதை இருதரப்பாரும் கைவிட வேண் டும். இந்து, முஸ்லிம் சகோதரர்கள் ஒற்றுமையாக இருந்து தேச விடுதலைக் காகப் போராட வேண்டும்” என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் எழுதியிருக் கிறது.

தேசம் விடுதலை அடைந்துவிட்டது. இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் அவ சியம் குறித்து நாளிதழ் எழுதியது இன்றைக்கும் பொருந்துவதாக இருக்கிறது.

- நிறைந்தது.

SCROLL FOR NEXT