இதோ இந்த ஆண்டுடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. 2009 ஜனவரி 20-ல் அமெரிக்காவின் 44-வது அதிபராக ஒபாமா பதவியேற்றார்.
1961 ஆகஸ்ட் 4-ல் பிறந்தார். வழக்கறிஞர், சட்டக் கல்லூரிப் பேராசிரியர் என்று உயர்ந்து அதிபரானார். தனது பதவிக் காலத்தில் பொருளாதாரச் சுணக்கத்திலிருந்து அமெரிக்காவை மீட்க நடவடிக்கைகள் எடுத்தார். அமெரிக்க ஏழைகள் பலருக்கு அரசின் மருத்துவக் காப்பீட்டுப் பாதுகாப்பு அளித்தார்.
அமெரிக்க ராணுவத்தில் தன்பாலினச் சேர்க்கையாளர்கள் வெளிப்படையாகச் செயல்பட 17 ஆண்டுகளாக இருந்த தடையை நீக்கினார். தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு என்ற கூறியவர் என்றாலும், காசா பகுதியில் இஸ்ரேலியத் துருப்புகளால் பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தார்.
ஒசாமா பின் லேடனை பாகிஸ்தானுக்கே சென்று கொல்ல நடவடிக்கை எடுத்தார். கியூபாவுடன் தூதரக உறவை மீண்டும் ஏற்படுத்தியது ஒரு சாதனை. ஈரான் மீதான சர்வதேசப் பொருளாதாரத் தடைகள் அகல உதவியதும் குறிப்பிடத்தக்க சாதனை.