வலைஞர் பக்கம்

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - சமூக நீதி போராளி

சமூக அநீதிகளுக்கு எதிரான போராளியும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவருமான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் (Krishnammal Jagannathan) பிறந்த தினம் இன்று (ஜூன் 16). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:

* திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் (1926). சொந்த ஊரில் ஆரம்பக் கல்வி பயின்றார். 11 வயதில் தந்தை காலமானார். மதுரையில் சவுந்திரம்மாள் நடத்தி வந்த இலவச இல்லத்தில் 1936-ல் சேர்ந்து மேல்நிலைக் கல்வி பயின்றார்.

* அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்றார். மதுரையின் முதல் பெண் பட்டதாரி என்ற பெருமைக்குரியவர். வினோபா பாவேயின் சர்வோதய அமைப்பில் இணைந்து, பூதான இயக்கத்திலும் கலந்துகொண்டார்.

* காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். கணவருடன் இணைந்து சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்கேற்றார். தன் இனத்தைச் சார்ந்த வர்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பார்த்து வளர்ந்த இவர், தன் வாழ்க்கையையே சமுதாய நலனுக்காக அர்ப்பணித்துக்கொண்டார்.

* நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் 1968-ல் விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 44 பெண்கள், குழந்தைகள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரம் இவரை நிலைகுலைய வைத்தது. நிலமற்ற விவசாயிகளான, பண்ணைக் கூலிகளுக்கு சொந்தமாக நிலம் பெற்றுத் தருவதையே தன் லட்சியமாக ஏற்றார். உழவனின் நில உரிமை இயக்கம் (லாப்டி) தொடங்கப்பட்டது.

* திண்டுக்கல் அருகே உள்ள அம்பாதுரை கிராமத்தில் காந்திகிராம தொழிலாளர்களுக்காக கணவருடன் இணைந்து ஓர் ஆசிரமத்தை நடத்தி வந்தார். கிராமம், கிராமமாக சென்று தாழ்த்தப்பட்ட, ஏழை விவசாயிகளின் நலன்களுக்காகத் தொண்டாற்றினார்.

* அரசின் திட்டங்கள், தன் லாப்டி அமைப்பு நிதி மூலமாக 2500-க் கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டிக்கொடுத்தார். இளைஞர்கள், மகளிருக்கு தையல், கணினிப் பயிற்சி, தச்சுத் தொழில், இயற்கை உரம் உள்ளிட்ட பல்வேறு தொழில் பயிற்சிகள் அளித்து வருகிறார்.

* ஆதரவற்ற குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள் அமைத்தல், ஏழைப் பெண்களுக்குக் கறவை மாடுகள், ஆடுகள் வழங்குதல், மதுவிலக்குப் பிரச்சாரம் உள்ளிட்ட ஏராளமான சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். எவ்வளவோ பேராபத்துகள், இடையூறுகளை எதிர்கொண்டாலும் எதைக் கண்டும் இவர் அஞ்சியதே கிடையாது.

* தனது நட்பு வட்டம், தொடர்புகள், செல்வாக்கு அனைத்தையும் ஏழைகளுக்கான உரிமைகள், நிலங்கள் பெற்றுத்தருவதற்காகவே பயன்படுத்தி வருபவர். தனக்கு கிடைத்த பரிசுத் தொகையையும் கூட அவர்களுக்கு வீடு கட்டித் தருவதற்காகவே பயன்படுத்தினார். தாட்கோ (TATCO) திட்டத்தின் கீழ் கடன் வாங்கி ஒரு நபருக்கு ஒரு ஏக்கர் நிலம் என பெற்றுத்தந்தார்.

* தனக்கு விடப்பட்ட சவாலை ஏற்று ஒரே நாளில் 1,040 ஏக்கர் நிலத்தை ஏழை விவசாயிகளின் பெயரில் பதிவு செய்தது உட்பட மொத்தம் 13,500 ஏக்கர் நிலங்களை அதுவும் மகளிர் பெயரில் பெற்றுத் தந்துள்ளார்.

* தனது சமூகப் பணிகளுக்காக பத்ம ஸ்ரீ, ஜம்லால் பஜாஜ் விருது, பகவான் மகாவீர் விருது, அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் 2008-க் கான ஓபஸ் விருது, ஸ்வீடன் நாட்டின் மாற்று நோபல் பரிசான ரைட் லைவ்லிஹுட் உள்ளிட்ட இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு விருதுகளையும் கவுரவங்களையும் பெற்றுள்ளார். இன்று 90 வயதை நிறைவு செய்திருக்கும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் இப்போதும் தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய மக்களின் நலன்களுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

SCROLL FOR NEXT