வலைஞர் பக்கம்

ராமச்சந்திர ராவ் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

இஸ்ரோ முன்னாள் தலைவர்

இஸ்ரோ முன்னாள் தலைவரும், உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் உடுப்பி ராமச்சந்திர ராவ் (Udupi Ramachandra Rao) பிறந்தநாள் இன்று (மார்ச் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கர்நாடக மாநிலத்தின் அடமாரு என்ற கிராமத்தில் (1932) பிறந்தவர். பள்ளி, கல்லூரி நாட்களில் ஏராளமான நூல் களைப் படித்து, தன்னை மேம்படுத்திக் கொண்டார். சென்னை பல்கலைக்கழகத் தில் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

* அகமதாபாத் இயற்பியல் ஆய்வுக்கூடத் தில் 1961-ல் முனைவர் பட்டம் பெற்றார். டாக்டர் விக்ரம் சாராபாயின் வழிகாட்டுதலில், காஸ்மிக் கதிர்கள் குறித்து ஆராய்ந்தார். பாஸ்டனில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) ஃபெலோஷிப் பெற்றார்.

* காஸ்மிக் கதிர்கள் குறித்த ஆராய்ச்சியோடு, சூரிய காற்று (Solar Winds) குறித்தும் ஆராய்ந்தார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் உயர் ஆராய்ச்சி மையத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றினார். 1966-ல் இந்தியா திரும்பியவர், மீண்டும் இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் சேர்ந்து ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

* காஸ்மிக் கதிர்களில் உள்ள எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் குறித்து ஆராய்ந்தார். செயற்கைக்கோள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பொறுப்பை 1972-ல் ஏற்றார். இவரது வழிகாட்டுதலில், 1975-ல் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா, அடுத்தடுத்து, பாஸ்கரா, ஆப்பிள், ரோஹிணி, இன்சாட்-1, இன்சாட்-2 உள்ளிட்ட பல செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.

* பல்நோக்கு செயற்கைக்கோள்கள், தொலைஉணர்வு செயற்கைக் கோள்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். பெங்களூரு வில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) செயற்கைக்கோள் மைய இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1984 முதல் 1994 வரை இஸ்ரோ தலைவராக செயல்பட்டார்.

* ராக்கெட் தொழில்நுட்ப வளர்ச்சியை முடுக்கிவிட்டார். 1992-ல் ஏஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இவரது தலைமை யில் 1991-ல் கிரையோஜெனிக் தொழில்நுட்ப மேம்பாடு, ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஆகியவற்றுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த காலக்கட்டத்தில் ஏவப்பட்ட அனைத்து இன்சாட் செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக இயங்கியதைத் தொடர்ந்து, மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களுக்கும் தொலைதொடர்பு வசதி கிடைத்தது.

* காஸ்மிக் கதிர்கள், உயர் ஆற்றல் வான்இயற்பியல், விண்வெளி, செயற்கைக்கோள், ராக்கெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக இந்திய மற்றும் சர்வதேச இதழ்களில் 300-க்கும் மேற்பட்ட அறிவியல், தொழில்நுட்பக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக பல்வேறு நூல்களும் எழுதியுள்ளார்.

* கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ் விருது, சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது, மேகநாத் சாகா பதக்கம், ஜாகிர் உசேன் நினைவு விருது, ஆர்யபட்டா விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர். 1976-ல் பத்மபூஷண் விருது பெற்றார்.

*2013-ல் சர்வதேச வானியலாளர்கள் கூட்டமைப்பு, ‘ஹால் ஆஃப் ஃபேம்’ சிறப்பு தகுதிக்கு இவரைத் தேர்ந்தெடுத்தது. இப்பெருமை யைப் பெற்ற முதல் இந்தியர் இவர். உலகின் முன்னணி விண்வெளி விஞ்ஞானிகளில் ஒருவரான இவருக்கு, இந்த ஆண்டு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.

* இஸ்ரோ வட்டாரத்தில் ‘யு.ஆர்.ராவ்’ என அன்போடு அழைக்கப்படும் பேராசிரியர் உடுப்பி ராமச்சந்திர ராவ் இன்று 85 வயதில் அடியெடுத்து வைக்கிறார். தற்போது அகமதாபாத் இயற்பியல் ஆய்வு மைய நிர்வாகக் குழு தலைவராகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தராகவும் பணியாற்றி வருகிறார்.

          
SCROLL FOR NEXT