பாகிஸ்தானை சேர்ந்த பிரபல வர்ணனையாளர் கலீத் அகமது, (கடந்த 84-ம் ஆண்டில்) ஜாகீர் நாயக் பெயரை சொல்லும் வரை அவரைப் பற்றி எனக்கு தெரியாது. அதன்பிறகு 2009-ம் ஆண்டு தனியார் அமைப்பின் மாநாட்டில் கலீத்துடன் பேசும்போது அவர் மேலும் ஆச்சரியப்பட்டார். அப்போது, “இஸ்லாமிய தொலைக்காட்சியின் குறிப்பிடத் தக்க மதபோதகராக ஜாகீர் நாயக் மாறுவார். ஆங்கிலத்தில் அவர் சரளமாக பேசுவதால், இந்த துணைக் கண்டத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதும் பேசப்படுவார்” என்று கூறினார்.
அப்போது ‘பீஸ் டிவி’ பற்றியும் எனக்கு தெரியவில்லை. அதனால் கலீத் மேலும் ஆச்சரியம் அடைந்தார். ‘‘பீஸ் டிவி.யை பாருங்கள். ஜாகீர் நாயக் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில் அவரைப் பற்றி நிறைய தெரிய வரும்’’ என்று கூறினார். அதன்படி ‘ஹஸ்ரத் கூகுளில்’ ஜாகீர் நாயக் பற்றி படிக்கத் தொடங்கினேன். அவருடைய பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி உரைகளை பார்த்தேன். அப்போது கலீத் என்ன சொல்ல வந்தார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
அலோபதி டாக்டர் பட்டம் பெற்ற ஜாகீர் நாயக், தொலைக்காட்சி மதபோதகராக மாறியுள் ளார். சவுதியில் கடைபிடிக்கப்படும் பழமைவாத இஸ்லாத்தின் சக்திவாய்ந்த குறிப்பிடத்தக்க செய்தித் தொடர்பாளராக மாறியுள்ளார்.
அவருடைய மொழி, எளிதில் புன்னகைக்கும் தன்மை, ஏராளமான மேற்கோள்கள், குரானில் இருந்தும், பகவத் கீதையில் இருந்தும், உபநிஷத்துகளில் இருந்தும், பைபிளில் இருந்தும் அவர் எடுத்து சொல்லும் கருத்துகள் மற்ற மவுலானாக்களில் இருந்து ஜாகீர் நாயக்கை வேறுபடுத்தி காட்டுகிறது. என்னுடன் பணிபுரிந்தவர்களின் உதவியுடன் ஜாகீர் நாயக்கிடம் பேட்டி எடுக்க முடிந்தது. கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜாகீர் நாயக்கின் பேட்டியை பதிவு செய்தேன்.
இந்திய அரசியலமைப்பு சட்டங்கள், நீதித் துறை மீது முழு நம்பிக்கையை வெளிப்படுத் தினார். (முஸ்லிம்கள் உட்பட எல்லோருக்கும் விரைவிலோ அல்லது பிற்காலத்திலோ நீதி கிடைக்கும் என்று கூறினார்.) இந்திய - பாகிஸ்தான் பிரிவினை என்பது இந்த துணைக் கண்டத்தில் நடந்த சோகம் என்றார். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை ஒன்றாக இருந்திருந்தால், விளையாட்டில் இருந்து பொருளாதாரம் வரை உலக சக்தியாக இருந்திருக்கும் என்றார்.
பெரும்பாலான முஸ்லிம்கள் பிரிவினையை கேட்கவில்லை. அது அவர்களுக்கு தேவையும் இல்லை. பாகிஸ்தானுக்காக பேசியவர்கள் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் கொள்கைகளை பின்பற்றாதவர்கள் என்று ஜாகீர் நாயக் குறிப்பிட்டார். காஷ்மீர் விஷயத்தில் கூட அவர் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொள்வார்கள். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளாலும் காஷ்மீர் மக்கள் வெறுத்துப் போயுள்ளனர். அதற்கு ஒரே தீர்வு பொது வாக்கெடுப்புதான். அது சாத்தியமில்லாத போது, இந்தியாவுக்கு உள்ள ஒரே வாய்ப்பு காஷ்மீரில் கல்வி, வேலைவாய்ப்புகளை மேம்படுத்தி அமைதியை கொண்டு வருதுவதுதான் என்று வலியுறுத்தினார்.
கடந்த 2008-ல் நடந்த மும்பை தாக்குதலையும் (26/11), 2001-ல் நடந்த இரட்டை கோபுர தாக்குதலையும் (9/11) கண்டிக்கிறார். இரட்டை கோபுரங்களை தகர்த்தவர் முஸ்லிம் கொள்கைகளை பின்பற்றுபவராக இருக்க மாட்டார். அவரை கண்டிக்க வேண்டும் என்று கூறிய ஜாகீர் நாயக், ஒரு கட்டத்தில் இரட்டை கோபுரத்தை தகர்த்தது ஜார்ஜ் புஷ்தான். அதற் கான ஆதாரங்களை ஆவணப்படங்களில் நான் பார்த்துள்ளேன். அது ஒசாமா பின்லேடனுக்கு எதிரான ஆதாரங்களை விட மிகவும் முக்கியமானது என்று ஜாகீர் கூறினார்.
அதேசமயம் அவருடைய கருத்துகளில் உள்ள அச்சுறுத்தல் என்ன? இஸ்லாமிய வழியில் மனைவியை ‘டூத் பிரஷ்’ மூலம் லேசாக அடிப்பதை ஆதரிக்கிறார். இஸ்லாம் பழமை வாதம் பற்றிய அவருடைய பேச்சு வல்லமை, மேற்கோள்கள் அச்சுறுத்தலாக தெரியாவிட்டா லும், அப்பாவி மனங்களில் அந்த பேச்சுகள் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் அபாயகரமானது.
இஸ்லாத்துக்கு எதிரான சதி ஐஎஸ் தீவிரவாத இயக்கம் என்று அவர் நிச்சயம் எதிர்ப்பார். ஆனால், அப்பாவி இளம் முஸ்லிம்களின் மனங்கள், அவரது பழைமைவாத விளக்கங்கள், அதற்கு அவர் கற்பிக்கும் நியாயங்களால் ஆட்கொள்ளப்படும். அதனால், வங்கதேசத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஜாகீர் நாயக் பேச்சால் கவரப்பட்டுள்ளனர் என்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.
இன்றைய கால கட்டத்தில் ஒரு கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. புதிய இளம் முஸ்லிம் தீவிரவாதிகள், குறிப்பாக ஐஎஸ்.யை சேர்ந்தவர்கள் நன்கு படித்தவர்களாக, நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களாக, ஆங்கிலம் பேசுபவர்களாக இருப்பது ஏன்? இந்த கேள்விக்கு பதில் ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி கூறியதில் அடங்கியிருக்கிறது.
ஒருமுறை ஹைதராபாத்தில் அவரும் அவரு டைய குடும்பத்தினரும் நடத்தும் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு 70:30 என்ற அளவில் மாணவி/மாணவர்கள் இருந்தனர். அவர்களுடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன. அதேநேரத்தில் மாணவிகள் எல்லோரும் முக்காடு போட்டு இருப்பதை தவறாக கூறி பல விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இதுகுறித்து கேட்ட போது இளம் முஸ்லிம்கள் இங்கு வராமல் மதரஸாக்களுக்கு சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கலாம். அங்கு இஸ்லாம், அடிப்படை கொள்கை மற்றும் ஜிகாத் பற்றி கூட விளக்கங்களை மவுல்வி சொல்லித் தந்திருப்பார். இளம் முஸ்லிம்கள் இப்போது இன்ஜினீயர்களாகவும் டாக்டர்களாகவும், எம்பிஏ படித்தவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களுக்கு தங்கள் மதத்தை பற்றிய அறிவு இல்லை. இப்போது அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்கள் எங்கு செல்வார்கள். ‘ஹஸரத் கூகுளில்’ தேடுவார்கள். கூகுளில் ‘ஜிகாத்’ என்று இளம்முஸ்லிம் ஒருவர் தேடினால், முகமது ஹபீஸ் சயீத்தும் அவரது ஜமாத் உத் தவா இயக்கத்தை பற்றிய விவரங்களும் கிடைக்கும். இதுதான் இஸ்லாத்துக்கு இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்று ஓவைசி கூறினார்.
கூகுளில் இருந்தும், தொலைக்காட்சி மதப் பிரசாரங்களில் இருந்தும் தங்கள் மதத்தை பற்றி தெரிந்துகொள்ள நினைக்கும் நன்கு படித்த இளம் முஸ்லிம்களை எப்படி நீங்கள் கையாள முடியும்? பாதிக்கப்படும் முஸ்லிம்களை பற்றி ஜாகீர் நாயக் போன்றவர்களின் பிரச்சாரங்களால் அவர்களுடைய மனங்கள் உணர்ச்சிப்பெருக்கில் மூழ்கிவிடுகிறது.
இந்தியாவில் திக்விஜய் சிங் மட்டுமல்ல, மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கூட, இஷ்ரத் ஜகான் என்கவுன்டரில் இருந்து பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் வரை எல்லாமே இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான சதி என்று கூறுகின்றனர். இந்தியாவிலேயே இதுபோன்ற பிரச்சாரங்கள் சிக்கலாக இருக்குமானால், பாகிஸ்தான், வங்கதேசத்தின் நிலையை கற்பனை செய்து பாருங்கள், 50 கோடி முஸ்லிம்களின் மனதில் அல்லது உலகின் 40 சதவீத முஸ்லிம் மனங்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு : shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஏ.எல்.பழனிசாமி