பிரான்ஸ் சிந்தனையாளர், படைப்பாளி
உலகின் தலைசிறந்த தத்துவமேதைகளில் ஒருவரும் இசை மேதையுமான ழேன் ழக்கே ரூசோ (Jean - Jacques Rousseau) பிறந்த தினம் இன்று (ஜுன் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் பிறந்தார் (1712). தந்தை, குடும்பத்தொழிலான கடிகாரம் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார். பிறந்த 9 நாட்களில் தாயை இழந்தார். மகனுக்கு கிரேக்க காவியங்களையும் ரோமப் பேரரசின் வரலாற்றையும், சாதனையாளர்களின் சாகசக் கதைகளையும் இரவு முழுவதும் வாசித்துக் காட்டுவார்.
* தன் அப்பா கடிகாரம் தயாரித்துக் கொண்டிருக்கும்போது மகன் அவருக்குப் புத்தகங்களை வாசித்துக் காட்டுவான். குடும்ப வறுமை காரணமாக 2 ஆண்டுகள் ஒரு பாதிரியார் வீட்டில் வளர்ந்தார். சிறுவயதில் எங்கெங்கோ சுற்றி அலைந்து பல்வேறு வேலைகளைச் செய்து வந்தார்.
* இறுதியில் டுரின் நகருக்குச் சென்றார். அங்கு வாரென்ஸ் என்ற சீமாட்டியின் ஆதரவில் வாழ்ந்து வந்தார். அப்போது கவிதை, நாடகம், நாவல்கள் என நிறைய எழுத ஆரம்பித்தார். இசையும் கற்றார்.
* இசையமைப்பு மற்றும் இசைக் கோட்பாடுகள் குறித்த ஆழ்ந்த அறிவைப் பெற்றார். சுதந்திர சிந்தனையும் தன்மான உணர்வும் கொண்டிருந்ததால் ஓரிடத்திலும் நிலைத்து இருக்க முடியவில்லை. பாரீஸ், இத்தாலி என மாறி மாறி வாழ்ந்து வந்தார். 1949-ல் ‘ஹாஸ் தி புரோகிராஸ் ஆஃப் தி சயின்சஸ் அன்ட் ஆர்ட்ஸ் கான்ட்ரிபுயுடட் பியுரிபிகேஷன் மாரல்ஸ்?’ என்ற கட்டுரையை ஒரு போட்டிக்காக எழுதினார்.
* பரிசை வென்றதோடு புகழையும் ஈட்டினார். 1750-ல் இவர் எழுதிய ‘ஏ டிஸ்கோர்ஸ் ஆன் தி சயின்சஸ் அன்ட் தி ஆர்ட்ஸ்’ நூல் முக்கியமான படைப்பாகப் போற்றப்பட்டது. தனது இயற்பண்புவாத கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கல்வி சார்ந்த தத்துவக் கருத்துகளை உலகப் புகழ்பெற்ற தனது ‘சோசியல் கான்ட்ராக்ட்’, ‘எமிலி’ ஆகிய நூல்களின் வழியாக முன்வைத்தார்.
* ‘எமிலி’ இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலான கற்பித்தல் வழிமுறைகளை வலியுறுத்தினார். இவரது புகழைக் கண்டு பொறாமை கொண்ட சிலர், இவரது நூல்கள் சமயத்துக்கு எதிரானவை என்றனர்.
* இதனால் பிரெஞ்சு அரசு இவரது நூல்களைத் தீயிட்டுக் கொளுத்தி யது, அவரை பிரான்சுக்குள் நுழைவதற்கு தடை விதித்தது. ஆனால், இவரது சிந்தனைகள் படித்தவர்கள், இளைஞர்கள், தொழிலாளிகள் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்தன.
* கல்வி, சமூகம், அரசியல் தத்துவம், பிரெஞ்சுப் புரட்சி, பழமைவாதம், சமூக உடைமைக் கோட்பாடு உள்ளிட்டவை குறித்து எழுதி வந்தார். ‘கன்ஃபெஷன்ஸ்’, ‘ரெவெரீஸ் ஆஃப் ஏ சாலிடரி வாக்கர்’, ‘பெர்பெட்சுவல் பீஸ்’, ‘ஜூலி அவ் லா நொவேலி ஹெலோய்ஸ்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.
* இவரது பெரும்பாலான படைப்புகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர், பிரான்சின் முக்கியமான மெய்யியலாளர், அறிவொளி பரப்பியவர், படைப்பாளி என்றெல்லாம் போற்றப்படும் ழேன் ழக்கே ரூசோ 1778-ம் ஆண்டு 66-வது வயதில் மறைந்தார்.
* இவரது மறைவுக்குப் பின்னர், இவரது சிந்தனைகளுக்கும் படைப்புகளுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் இவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.