வலைஞர் பக்கம்

ரோசலிண்ட் ஃபிராங்க்ளின் 10

செய்திப்பிரிவு

இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்

மரபணுவின் சரியான வடிவத்தைக் கண்டறிந்த இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ரோசலிண்ட் எல்சி ஃபிராங்க்ளின் பிறந்த தினம் இன்று (ஜூலை 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

லண்டனில் ஆங்கிலோ யூத குடும்பத்தில் (1920) பிறந்தார். தந்தை, ஒரு வணிக வங்கியில் பங்குதாரராக இருந்தவர். சிறுவயது முதலே கணிதம், அறிவியல், மொழிப் பாடங்களில் சிறந்து விளங்கினார். தான் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்று 15 வயதிலேயே தீர்மானித்தார்.

பள்ளிக் கல்வி முடிந்ததும், கல்லூரி செல்ல விரும்பினார். பெண்களுக்கு உயர் கல்வி தேவையில்லை என்ற தந்தை, சமூக சேவையில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார். அதையும் மீறி 1938-ல் கேம்பிரிட்ஜில் உள்ள நியூன்ஹாம் கல்லூரியில் சேர்ந்தார். 1941-ல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

உதவித்தொகை பெற்று அதே கல்லூரியில் ஆராய்ச்சி மாணவி யாகச் சேர்ந்தார். ஆனால், அடுத்த ஆண்டே வெளியேறி, பிரிட்டிஷ் நிலக்கரி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார். நிலக்கரி, கார்பன்களின் பல்வேறு மைக்ரோ கட்டமைப்புகள் குறித்து 4 ஆண்டுகாலம் ஆராய்ச்சி மேற்கொண்டார்.

எக்ஸ் கதிர் விளிம்பு விளைவுப் படிகவியல் மூலம் நிலக்கரி மூலக் கூறின் அமைப்பைக் கண்டுபிடிக்கும் வழிமுறையை உருவாக்கி னார். இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதி, 1945-ல் முனைவர் பட்டம் பெற்றார். தனது ஆராய்ச்சி குறித்து 5 கட்டுரைகள் வெளியிட்டார்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உயிர் இயற்பியலாளர் பிரிவில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினார். கரைசல்களில் உள்ள புரதங்கள், கொழுப்புகளின் தன்மை பற்றி ஆராய்ந்தார். மரபணு ஆராய்ச்சியில் 2 ஆண்டுகள் ஈடுபட்டார்.

டிஎன்ஏ இழைகளின் அமைப்பு பற்றி ஆராய்ந்தார். அவற்றை எக்ஸ் கதிர்களின் விளிம்பு விளைவுப் படிகவியல் முறையில் படம் பிடித்தார். இதன்மூலம் மரபணு மூலக்கூறு வடிவத்தை முதலில் படம் பிடித்தவர் என்ற பெருமை பெற்றார்.

பெண் என்பதால், கிங்ஸ் கல்லூரி ஆய்வுக்கூடத்தில் அவமானங்களுக்கு ஆளானவர், லண்டன் பர்பெக் கல்லூரிக்கு இடம்பெயர்ந்தார். வைரஸ் பற்றிய தனது ஆய்வுகளை அங்கு தொடர்ந்தார். 5 ஆண்டுகளில் 17 ஆய்வறிக்கைகள் வெளியிட்டார்.

ஓர் ஆய்வுக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தார். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டே ஆராய்ச்சிகளையும் தொடர்ந்தார். தன் ஆராய்ச்சிகள் மூலம் அறிவியல் களத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கிய ரோசலிண்ட் எல்சி ஃபிராங்க்ளின் 37-வது வயதில் (1958) மறைந்தார்.

ரோசலிண்ட்டுக்கு மென்மேலும் புகழ் கிடைத்தது, அவரது மறைவுக்குப் பிறகுதான். கிங்ஸ் கல்லூரியில் இருந்து அவர் வெளியேறியபோது, அவர் பதிவு செய்திருந்த மரபணுவின் எக்ஸ்ரே படம், ஆராய்ச்சிக் குறிப்புகள் ஆகியவற்றை உடன் பணியாற்றிய வில்கின்சன் என்ற அறிவியலாளர் எடுத்து வைத்திருந்தார். வாட்சன், கிரிக் ஆகிய அறிவியலாளர்களுக்கு இதை அவர் அனுப்பி வைத்தார்.

அவர்கள் 3 பேரும் இணைந்து இதுதொடர்பாக மேலும் ஆய்வு மேற்கொண்டனர். ஆராய்ச்சியில் வெற்றி கண்ட 3 பேரும் இதற்காக 1962-ல் நோபல் பரிசு பெற்றனர். அதன்பிறகு, ரோசலிண்ட் பெருமை உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்கா, இங்கிலாந்தில் பல உயர்கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சிக் கூடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

SCROLL FOR NEXT