வலைஞர் பக்கம்

சிகரெட்டும் சிறுவனும்

ரஹீம் கஸாலி

ஒரு நாள் நான் என் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு செயின் ஸ்மோக்கர். பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்த சிகரெட்டை எல்லாம் ஊதித் தள்ளினார்.

சிகரெட் காலியாகிவிட்டது. அப்போது என்னைப் பார்த்து, "கொஞ்சநேரம் இருங்கள். கடைக்கு போய் சிகரெட் வாங்கிக்கொண்டு வந்துவிடுகிறேன்" என்றார்.

அந்த நேரம், வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணின் பதினைந்து வயது பையன் வந்தான். அவனைப் பார்த்த நான் என் நண்பரிடம், "அவனை போய் வாங்கிவர சொல்லுங்களேன். ஏன் தேவையில்லாமல் நீங்கள் போகிறீர்கள்" என்று சொன்னேன்.

"பரவாயில்லை. கடை பக்கத்தில்தான் இருக்கிறது. நானே போய்க்கிறேன்" என்றவாறு அவர் கிளம்பிப்போய் வாங்கிக்கொண்டு வந்தார்.

பின்பு அவரே என்னிடம் சொன்னார்.

"அந்தப் பையனை போகச் சொல்லலாம். ஆனால் இன்னைக்கு நமக்காக வாங்கப்போவான். சின்னப் பையனா இருக்கானே என்று கடைக்காரருக்கு சந்தேகம் வந்து அவனிடம் யாருக்கு சிகரெட் வாங்குறே என்று கேட்டால், எங்க முதலாளிக்கு என்று சொல்வான். கடைக்காரரும் நம்மிடம் கேட்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்வார்.

என்றாவது அவனுக்கு சிகரெட் குடிக்க ஆசை வந்துச்சுன்னா நம்மப் பேரை சொல்லி அவன் ஒரு சிகரெட் வாங்கி விடுவான். கடைக்காரரும் எத்தனை தடவைதான் என்கிட்டே கேட்பாரு. எனக்காத்தான் இருக்கும்ன்னு கொடுத்துடுவாரு. இந்தப் பழக்கம் நம்மோடு போகட்டும். எதுக்கு அவனையும் கெடுப்பானே... அதான் நானே போயிட்டேன்" என்றார்.

அவரின் பதில் எனக்கு நியாயமாகப்பட்டது.

SCROLL FOR NEXT