கோடையின்
வாசனையை
வேப்பம்பூ காட்டிவிடுகிறது.
செய்கூலி இல்லாமல்
வெயில் அதிகமாகவே ஜொலிக்கிறது. .
பகல் பொழுது மிக நீண்டதாய் ...
திண்ணைகளும் காலியாகின்றன
செல்சியசும் புரியவில்லை
பாரன்ஹீட்டும் விளங்கவில்லை
எல் நினோ அத்துப்படியில்லை
ஓசோனில் ஓட்டையும் அறியவில்லை
போன வருஷத்தைக் காட்டிலும்
வெயில் ஜாஸ்தி என்பதே பழகிப்போச்சு
சூரியனுக்கும் பூமிக்கும்
லட்சம் மைல்கள் தூரம் இல்லை
கைக்கு எட்டும் தூரம் தான்
சோஷலிசமாய் வெப்பம்
சமத்துவம் பேசுகிறது.
உழைக்காதவருக்கும் வியர்வை.
இளநீர்க் கடையில் தஞ்சம் புகுந்த
குளிர்பான பாட்டில்கள்
வியர்த்தபடி இருக்கின்றன
மின்சாரம் அடங்கிய கணம்
ஓலை விசிறியை
தன்னிச்சையையாய் கைகள்
தேடிக்கொண்டிருக்கின்றன. .
நுங்குகள் தந்த
பனைமரத்தையும்
துவைத்துப் போட்டு விடுகிறது
வியர்க்குரு முலாம் பூசி
உயிர்ப்பலியில் முடியும் போதே
விபரீதம் புரிகிறது .
கத்திரி வெயில் சற்றே
தாமதமாக தான் உரைக்கிறது.
காரணமும் தெரிகிறது
கானகம் அழித்த
நம் பாவத்திற்கு
புவிப்பந்து நிபந்தனையில்லாமல்
அக்கினி பிரவேசம் செய்கிறது.
இறுமாப்பு மனிதனுக்கா
இல்லை வெயிலுக்கா ?
வருடந்தோறும் கேள்வி
நீண்டு கொண்டே இருக்கிறது.