நோபல் பரிசு பெற்ற பிரெஞ்ச் இலக்கியவாதி
பிரபல பிரெஞ்ச் படைப்பாளியும் இலக்கியத்துக்கான முதல் நோபல் பரிசை வென்றவருமான சல்லி புருதோம் (Sully Prudhomme) பிறந்த தினம் இன்று (மார்ச் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிறந்தார் (1839). இவரது முழுப்பெயர், ரெனே ஃபிரான்சுவா அர்மாண்ட் சல்லி புருதோம். பள்ளிப் பருவத்தில் அறிவியலில் நாட்டம் கொண்டிருந்தார். அறிவியலில் பட்டம் பெற்றார்.
* முதன்முதலாக ஒரு தொழிற்சாலை அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். பின்னர் ஆவண எழுத்துப் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றினார்.
* ஆனாலும் இவரது அறிவியல் ஆர்வம், திறன், எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகும் வழக்கம் எப்போதும் இவரைவிட்டு விலகவில்லை. ஒரு படைப்பாளியாகப் பரிணமித்த பிறகும், எந்த விஷயமானாலும் அலசி ஆராய்ந்த பிறகே ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டிருந்தார்.
* நிறைய வாசித்தார். இலக்கியத்தில் ஆர்வம் பிறந்தது. கவிதைகள் எழுதத் தொடங்கினார். முதன்முதலாக ‘தி புரோக்கன் வேஸ்’ என்ற கவிதையை எழுதி வெளியிட்டார். 1865-ல் ‘ஸ்டான்சாஸ் அன்ட் பொயம்ஸ்’ என்ற இவரது தலைசிறந்த கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.
* ‘தி ஈவன்ட்ஸ்’, ‘தி எவிடன்ஸ்’ உள்ளிட்ட கவிதைகள் வெளிவந்த பிறகு, ஒரு கவிஞராக இவருக்குக் கிடைத்த வரவேற்பும் புகழும் முழுமூச்சாக இலக்கியப் பணிகளில் இவரை ஈடுபட வைத்தது. பிரெஞ்ச், இத்தாலி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளை நன்கு அறிந்திருந்த இவர், உலகப் புகழ்பெற்ற பல படைப்புகளை மொழிபெயர்த்தார்.
* ரோமானியப் புலவரும் தத்துவமேதையுமான லுக்ரிடியசின் படைப்பை பிரெஞ்ச் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அன்றைய காலகட்டத்தின் ரொமான்டிஸ பாணிப் படைப்புகளுக்கு எதிர்வினையாகவும், ‘கலை கலைக்காகவே’ என்பதை வலியுறுத்தியும், நளினம், சமநிலை மற்றும் கவிதை அழகியல் தரத்தை மீண்டும் உருவாக்கும் முனைப்பில் தொடங்கப்பட்ட ‘பார்னசியன் மூவ்மன்ட்’ என்ற இயக்கத்தின் முன்னணி உறுப்பினராகச் செயல்பட்டார்.
* ‘ட்ரையல்ஸ்’, ‘தி சால்டிட்யூட்ஸ்: பொயட்ரி’, ‘தி ரிவோர்ட் ஆஃப் ஃபிளவர்ஸ்’, ‘தி வெய்ன் டென்டர்னஸ்’, ‘லா ஜஸ்டிஸ்’, ‘தி பிரிசம்’, ‘வேரியஸ் பொயம்ஸ்’ உள்ளிட்ட இவரது கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.
* கட்டுரைகள், குறிப்பாக தத்துவம் குறித்தும், மதம் உட்பட பல்வேறு விஷயங்களைத் தன் விருப்பத்துக்கேற்பத் தேர்ந்தெடுக்கும் மனிதனின் உரிமைகள் பற்றியும் நிறைய எழுதினார். டைரிக் குறிப்புகளையும் எழுதி வந்தார். ‘வொர்க்ஸ் ஆஃப் சல்லி புருதோம்’, ‘வாட் டு ஐ நோ?’, ‘தி ட்ரூ ரிலிஜியன் அகார்டிங் டு பாஸ்கல்’ உள்ளிட்ட இவரது கட்டுரைகள், ‘டைரி: தாட் லெட்டர்ஸ்’ என்ற டைரிக் குறிப்பு உள்ளிட்ட அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
* 1881-ல் பிரெஞ்ச் அகாடமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 26 ஆண்டு காலம் செயல்பட்டார். ‘பிரெஞ்ச் ரிலிஜியன் ஆஃப் ஹானர்’ என்ற கவுரவம் பெற்றார். 1901-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார். முதன்முதலாக இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர் என்ற பெருமையையும் பெற்றார்.
* ஏறக்குறைய இவரது அனைத்து கவிதைகளும் தொகுக்கப்பட்டு ‘பொயட்ரி’ என்ற பெயரில் 6 தொகுதிகளாக வெளியிடப்பட்டன. இறுதிவரை எழுதி, பிரெஞ்ச் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த உன்னதப் படைப்பாளியான சல்லி புருதோம், 1907-ம் ஆண்டு 68-வது வயதில் மறைந்தார்.