நோபல் பரிசு பெற்ற டென்மார்க் அணு இயற்பியல் விஞ்ஞானியான அகே நீல்ஸ் போர் (Aage Niels Bohr) பிறந்த தினம் இன்று (ஜூன் 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
• டென்மார்க் தலைநகர் கோபன்ஹேக னில் (1922) பிறந்தார். இயற்பியல் விஞ்ஞானியான தந்தை நீல்ஸ் போர், இவர் பிறந்த ஆண்டில் இயற்பிய லுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவருக்கும் பிஞ்சுப் பருவத்திலேயே அறிவியல் ஆர்வம் அரும்பியது.
• பள்ளிக்கல்விக்குப் பிறகு, கோபன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் இயற்பி யலில் பட்டம் பெற்றார். தந்தையிடமே அறிவியல் உதவியாளராக சேர்ந்து இயற்பியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். தாயும் அறிவியலில் ஆர்வம் கொண்டவர். தன் மகனின் ஆய்வுகள் குறித்து விவாதிப்பதோடு கட்டுரைகள் எழுதவும் உதவினார்.
• இவரது 17 வயதில், டென்மார்க்கை ஹிட்லரின் நாஜிப் படை கைப்பற்றியது. பெற்றோர் கிறிஸ்தவர்கள் என்றாலும் பாட்டியின் யூதப் பின்னணி காரணமாக தங்கள் குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சினர். இவர்களது குடும்பத்தினர் உட்பட சுமார் 7,000 பேர் கடல் வழியாக ஸ்வீடனுக்குத் தப்பிச் சென்றனர்.
• விரைவில் தந்தையும் மகனும் அங்கிருந்து தங்களுக்கு உதவ வந்த பிரிட்டன் போர் விமானம் மூலம் அந்நாட்டுக்குச் சென்றனர். இருவரும் பிரிட்டனின் அணுகுண்டுத் திட்டத்தில் இணைந்து பணியாற்றினர். பின்னர் அமெரிக்கா சென்றனர்.
• அங்கு புகழ்பெற்ற மன்ஹாட்டன் திட்டத்தில் இவர் இணைந்தார். அப்பா பிரபலமானவர் என்பதால் இருவருக்கும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் ஆலோசகராக தந்தை நியமிக்கப்பட்டார். போர் முடிந்த பிறகு, 1945-ல் மீண்டும் நாடு திரும்பினர். தன் படிப்பைத் தொடர்ந்த இவர், அடுத்த ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார்.
• கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு இயற்பியல் இன்ஸ்டிடியூட்டில் (தற்போது நீல்ஸ்போர் இன்ஸ்டிடியூட்) ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1948-ல் அமெரிக்கா சென்று, பிரின்ஸ்டன் உயர் ஆராய்ச்சி நிறுவனத்தில் காந்தப் புலத்தில் அணுக்கரு இயக்கம் குறித்து ஆராய்ந்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.
• மீண்டும் சொந்த ஊர் திரும்பி, கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் அணுக்கருவின் சுழற்சி நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு 1954-ல் முனைவர் பட்டம் பெற்றார். 1956-ல் அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.
• தந்தை இறந்த பிறகு, நீல்ஸ் போர் இன்ஸ்டிடியூட் இயக்குநராகப் பொறுப்பேற்றார். முழு நேரமும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக 1981-ல் ஓய்வு பெற்றார். இதற்கிடையில் அணுக்கரு குறித்து ஆராய்ந்தார். தன் சகாக்களுடன் இணைந்து கூட்டு அணுக்கள், அணுக்கரு துகள்களில் துகள் இயக்கம், அணு மையக் கட்டமைப்பின் கோட்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை வரையறுத்தார்.
• இதற்காக இவருக்கும் பென் மோட்டெல்சன், ஜேம்ஸ் ரெய்ன்வாட்டர் ஆகியோருக்கும் 1975-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தந்தையைப் போலவே இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர் என்ற பெருமை பெற்றார். திரவ இயக்கவியல் துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.
• தன் ஆராய்ச்சிகள் குறித்து பல நூல்களை எழுதினார். கணித இயற்பியலுக்கான டேனி ஹெயின்மேன் பரிசு, ஆடம்ஸ் சமாதான விருது, ரூதர்ஃபோர்டு பதக்கம் உள்ளிட்ட பல விருதுகள், பரிசுகளைப் பெற்றார். அணு இயற்பியல் துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய அகே நீல்ஸ் போர் 87-வது வயதில் (2009) மறைந்தார்.