ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை, ஈரான்–இராக் பகை என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு வித்திட்ட சம்பவம் அது.
1979-ம் ஆண்டில், இதே நாளில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத் துக்குள் அதிரடியாக நுழைந்தனர், ‘இமாம் வழியைப் பின்பற்றும் முஸ்லிம் மாணவர்கள்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரானை ஆண்ட மொஹம்மத் ரேஸா பெஹ்லவியை, ஆட்சியை விட்டு சில மாதங்களுக்கு முன்புதான் நீக்கியிருந்தது, அயாதுல்லா கோமேனி தலைமையிலான புரட்சி. ஈரானை விட்டுத் தப்பிச்சென்ற மொஹம்மத் ரேஸா மெக்ஸிகோவில் தங்கியிருந்தார். அங்கு அவரது உடல்நலத்தைப்
பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குப் புற்றுநோய் இருந்ததைக் கண்டறிந்தனர். சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஈரான் புரட்சியாளர்கள், அமெரிக்கத் தூதர கத்தைக் கைப்பற்றினார்கள். அங்கிருந்த 90 பேரைச் சிறைபிடித்தனர். ஈரானில் நிலவிய அசாதாரணச் சூழ்நிலையை அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் கவனித்துதான் வந்தார். எனினும், அமெரிக்கத் தூதரகக் கட்டிடத்தைப் புரட்சியாளர்கள் தாக்கக்
கூடும் என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கை யைக் கவனிக்கத் தவறினார்.
இரண்டு வாரம் கழித்து அமெரிக்கர்கள் அல்லாதோர் விடுவிக்கப்பட்டனர். எஞ்சிய 52 அமெரிக்கர்கள், மொத்தம் 444 நாட்கள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். தேர்தலில் வென்ற ரொனால்டு ரீகன் 1981 ஜனவரி 20-ல் அதிபராகப் பதவியேற்ற சில நிமிடங் களில் பிணையக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இடையில், ராணுவ நடவடிக்கை மூலம் அவர்களை மீட்க ஜிம்மி கார்ட்டர் அரசு முயன்றது.
இந்த முயற்சிகளில் எட்டு அமெரிக்கர் களும் ஒரு ஈரானியரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு, கடந்த ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான ‘அர்கோ’வை ஈரானில் அந்த நாட்டு அரசு தடைசெய்தது.