வலைஞர் பக்கம்

அன்பு, அக்கறையுடன் - லஞ்ச் பாக்ஸ்!

செய்திப்பிரிவு

கோடை விடுமுறை முடிவுக்கு வரப்போகிறது. விடுமுறை முடியப்போகிறதே என்று குழந்தைகள் வருத்தப்படுவர். அம்மாக்களுக்கும் வருத்தம் வரும் அது விடுமுறை முடிகிறதே என்பதற்காக அல்ல. பள்ளி திறந்தால் ஒவ்வொரு நாளும் விதவிதமாக மதிய உணவு தயார் செய்துதர வேண்டும் என்ற கவலை அது.

என்ன சமைத்துக் கொடுத்தால் குழந்தைங்களுக்கு பிடிக்கும்? அதே சமயம் அது சத்தானதாவும் இருக்க வேண்டும், பல்வேறு வகையாகவும் இருக்க வேண்டும் என்றெல்லாம் ஏராளமான யோசனைகள் இப்போழுதே அம்மாக்கள் மனதில் ஓட ஆரம்பித்திருக்கும்.

சமையல் அறைக்குள் நுழைந்தாலே, ஒரே குழப்பம் தான்! இன்றைக்கு என்ன சமைக்கலாம், அதில் என்ன புதுமை செய்யலாம் என்று எண்ணம் அலைமோதும். அதிலும் வேலைக்கு செல்லும் அம்மாக்கள் படும்பாடு ஆழ்ந்த அனுதாபத்துக்குறியது அவர்கள் வேலைக்கும் செல்ல வேண்டும், வீட்டில் சமையல் வேலையையும் பார்க்க வேண்டும்.

ஏனோதானோவென்று சமைத்துக் கொடுக்க முடியாது. மெனுவும் சலிப்பூட்டுவதாக இருக்கக்கூடாது. சமையலறையில் தாய்மார்களின் வேலை 'கண்டிஷன்ஸ் அப்ளைட்' டேக்லைனோடுதான் நடக்கிறது. ஆனால், அம்மாக்கள் அன்புடன் அதை ஏற்றுக் கொள்கின்றனர் என்பதற்கு சாட்சி நமது 'பாடி மாஸ் இண்டக்ஸ்' (Body Mass Index) தான்.

சில நேரங்களில் வேலைப் பளு, நேர நெருக்கடி காரணமாக பாக்கெட் உணவுகள் வீட்டுக்குள் புகுந்து விடுகின்றன. அது சரியா தவறா? எந்த மாதிரி உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்? போன்ற கேள்விகளோடு நாம் ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சங்கர் அவர்களை சந்தித்தோம்.

வளரும் குழந்தைகளுக்கு என்ன மாதிரி காலை உணவுகள் கொடுக்கலாம்?

குழந்தைகளுக்கு கொடுக்கும் காலை உணவில் எப்பொழுதுமே புரதத் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் இருப்பது அவசியம். இதுவே அவர்களது வளர்ச்சியைக் கட்டமைக்கிறது. அப்போது தான் அவர்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும். காலை உணவை உட்கொண்டால் தான் மூளைக்குச் செல்ல வேண்டிய குளுக்கோஸ் சத்து சரிவர சென்றடைந்து, குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உதவும்.

எடுத்துக்காடாக ரொட்டி, பாலாடைக்கட்டி (Bread with cheese), அசைவம் என்றால் ஆம்லெட் உடன் ரொட்டி (Bread with omlette) கொடுக்கலாம். அதிலேயே புரதம், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு சத்தும் கிடைக்கிறது இந்த சத்துக்கள் இருக்கும் உணவுகளை குழந்தைகளுக்கு காலை உணவாக கொடுப்பது சிறந்தது.

காலையில் பால் மட்டும் கொடுத்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறார்களே.. இது சரியா?

பாலில் புரதச்சத்து இருந்தாலும் அது மட்டும் காலை உணவுக்கு போதாது. அதற்கு பதிலாக பாலிலே பழங்கள், மற்றும் நட்ஸ் வகைகளையும் சேர்த்து 'மில்க் ஷேக்' அல்லது 'ஸ்மூதி' போன்றவற்றைத் தயாரித்துக் கொடுக்கலாம். அவ்வாறு செய்வதால் விட்டமின் சத்துகள் கிடைக்கும்

மாணவர்கள் தேர்வு நேரத்தில் எந்த மாதிரி உணவுகள் உட்கொள்ளலாம்?

பொதுவாகவே தேர்வு நேரத்தில் காரம் கலந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. தேர்வு எழுதும் வேளையில் எந்தத் தொல்லையும் தராத வகையில் உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். பூரி கிழங்கு போன்ற உணவு வகைகளைத் தவிர்க்கலாம்.

சீக்கிரம் ஜீரணமாகும் உணவுகள் இட்லி, இடியாப்பம், ஆப்பம், தயிர் கலந்த உணவுகள் அல்லது வெறும் தயிரையே கூட உட்கொள்ளலாம்

5 வயதில் தொடங்கி 15 வயது வரையிலான வளரும் குழந்தைகளுக்கு என்ன மாதிரி உணவுகள் கொடுக்கலாம்?

5 முதல் 15 வரை வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஹார்மோன் மாற்றம் ஏற்படும். அதனால் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக தேவைப்படும். அதிலும் பெண் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். கால்சியம் மூலம் எலும்புகள் பலப்படும். அதனால் அவர்கள் விரும்பகூடிய வகையில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் இருக்கும் உணவுகளை கொடுக்கலாம்.

தினமும் குழந்தைகளுக்கு எத்தனைமுறை உணவு கொடுக்கலாம்?

இத்தனை முறை தான் என்றெல்லாம் குறிப்பிட்ட அளவுகள் கிடையாது. அது குழந்தைகளின் உடல் தன்மையை பொருத்தது. நன்றாக விளையாடி களைத்துப் போய் வரும் குழந்தைகள் 2 அல்லது 3 முறை அதிகமாக உணவுகள் உண்ணலாம். ஆனால் சாப்பிட்டு முடித்தவுடன் தூங்கிவிடுவது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, வெளியே போகாமல் சோம்பலாக வீட்டிலேயே இருந்தால் நிச்சயம் உடல் எடை அதிகரிக்கும்.

குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் கொடுக்கலாமா? என்ன மாதிரியான ஸ்நாக்ஸ் வகைகள் உகந்தது?

ஸ்நாக்ஸ் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும், ஏனென்றால், அவர்கள் காலை உணவை சரியாக சாப்பிடுவது கிடையாது. அதனால் தான் பள்ளிகளில் ஸ்நாக்ஸ் டைம் என்று தனியாக கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு கொஞ்சம் சத்தானதாக ஸ்நாக்ஸ் தர வேண்டும். சுண்டல், கொழுக்கட்டை, பிரெட் டோஸ்ட் எதாவது பழங்கள் போன்றவற்றை கொடுக்கலாம்.

கீரை வகைகளை எப்படி குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து கொடுக்கலாம்?

பொதுவாகவே குழந்தைகள் கீரை வகைகளை கண்டாலே ஓடிவிடுவார்கள் அதனாலேயே கீரை என்பது தெரியாதவாறு வெந்தயக் கீரை போட்டு சப்பாத்தி செய்து கொடுக்கலாம். பசலைக் கீரை வைத்து பாலக் பன்னீர் செய்யலாம், புதினா வைத்து புலாவ் செய்துக் கொடுக்கலாம் .கீரையையே புதிதாக குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி செய்தால் அவர்கள் சாப்பிடுவார்கள்.

பாக்கெட் உணவுகளை பயன்படுத்தலாமா?

கண்டிப்பாக பாக்கெட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் அத்தகைய உணவு வகைகளால் குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. சிப்ஸ், நூடுல்ஸ், மைதா இருக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

BMI என்றால் என்ன?

உடல் நிறை குறியீட்டெண் பிஎம்ஐ (BODY MASS INDEX) என்பது ஒரு மனிதனின் உடல் எடை மற்றும் உயரத்தை கணக்கிட்டு அவர் உடல் பருமனாக இருக்கிறதா,கொழுப்பின் அளவு சரியான விகிதத்தில் உள்ளதா என்பதைக் கண்டறிவது

BMI <18.5 குறைவான எடை

BMI 18.5-24.9 சரியான எடை

BMI 25-29.9 அதிக எடை

BMI 30-39.9 உடல் பருமன்

BMI> 40 உடல்நலக்குறைவு மற்றும் உடல் பருமன்



இன்றைய சூழலில் வாழ்க்கையின் வேகத்திற்கு நிகரான வேகத்தில் நாமும் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் அதனால் உணவின் மீது உள்ள அக்கறை குறைந்து வருகிறது. கண்ணில் கண்ட உணவை சத்தானதா என்று கூட ஆராயாமல் சாப்பிட்டு வருகிறோம். இனிமேலாவது நாமும் நம் குழந்தைகளும் தரமான சத்தான உணவுகளை உண்டு நோயற்ற வாழ்வை வாழ்வோம்.

SCROLL FOR NEXT