உயரத் துடிக்கும்
முடவன் நான்.
அடிக்கு ஒருமுறை
வழுக்கியோ திறனின்றியோ
விழுகிறேன்.
எப்படியோ கை ஊன்றி
எழுந்து விடுகிறேன்
யார் தயவும் இல்லாமல்.
மீண்டும் விழுந்தால்
மாண்டுவிடாமல் எழ
மனதில் உறுதிகொண்டு.
ஒவ்வொரு முறையும் உறுதி
கொஞ்சம் கொஞ்சமாய்
குறைகிறது.
தத்தளிக்கும் என்னை
தூக்கிவிட்டு துயர் துடைக்கும்
தாயுள்ளம் எதிர்பார்க்கும்
தற்குறி இல்லை நான்.
விழுந்தவன் எழட்டும் என
வழி விட்டு
விலகிச் செல்லும்
பண்புகூட எவன் கேட்டான்.
வாழைப்பழ தோல் வழுக்கி
விழுந்தால்கூட
சிரிக்க சொல்லித்தானே
வளர்த்தார் இங்கு
எனவே
எள்ளி நகையாடும் குணம்கூட
இருந்து தொலைக்கட்டும்.
கிடைத்தான் ஒரு கழுதை என்று
ஏறி மிதிக்கும் இந்த
வக்கிரம் மட்டும்தான்
வலிக்கிறது!