பிரிட்டன் பொருளாதார நிபுணர்
பிரிட்டனைச் சேர்ந்த பொருளாதார நிபுணரும் மரபுசார் பொருளாதார சிந்தனையை உருவாக்கியவருமான ஆல்ஃபிரட் மார்ஷல் (Alfred Marshall) பிறந்த தினம் இன்று (ஜூலை 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில் பிறந்தார் (1842). தந்தை வங்கி ஊழியர். ஆரம்பக் கல்வி முடித்ததும், கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்ஸ் கல்லூரி யில் தனக்குப் பிடித்த கணிதம் மற்றும் அறிவியல் பயின்றார்.
l கல்லூரியில் படித்தபோது உளவியல் ரீதியாக சில பிரச்சினைகளை எதிர்கொண்டதால் தத்துவப் படிப்புக்கு மாறினார். மாறாநிலை வாதம் குறித்து ஆர்வம் கொண்டார். இதுதான், பொருளாதாரம் குறித்து பயில்வதற்கான தூண்டுதலாக அமைந்தது. தாராளவாதம், சோசலிசம், தொழிற்சங்கங்கள், பெண் கல்வி, வறுமை மற்றும் முன்னேற்றம் ஆகிய விஷயங்களில் ஆர்வம் காட்டினார்.
l 1868-ல் கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் தார்மீக அறிவியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 1875-ல் அமெரிக்காவில் நடைபெற்ற வர்த்தகப் பாதுகாப்பு ஆய்வில் கலந்து கொண்டார். அமெரிக்கா சென்று கட்டணக் கட்டுப்பாடுகளால் எழும் தாக்கத்தை அளவிடும் ஆய்வுகளில் ஈடுபட்டார்
l இங்கிலாந்து திரும்பியவுடன் கேம்பிரிட்ஜில் அரசியல் பொருளியல் பாடத்தை மேம்படுத்துவதில் தீவிர முனைப்புடன் ஈடுபட்டார். 1885-ல் அரசியல் பொருளியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஒரு சில ஆண்டுகளில் நாட்டிலேயே மிகச் சிறந்த பொருளியல் நிபுணராக உயர்ந்தார்.
| ஹென்றி சிட்க்விக், பெஞ்சமின் ஜோவெட் உள்ளிட்ட தனது சம காலத்திய சிந்தனையாளர்கள் பலருடன் இணைந்து, ‘கேம்ப்ரிட்ஜ் ஸ்கூல்’ என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். பொருளாதாரம் குறித்த தனது சிந்தனைகளை 1881-ல் ஒரு நூலாக எழுதத் தொடங்கினார். உலகப் புகழ்பெற்ற ‘பிரின்சிபல்ஸ் ஆஃப் எகனாமிக்ஸ்’ என்ற இவரது நூல் 1890-ல் வெளியானது.
l பல்வேறு பொருளியல் நிலைப்பாடுகளில் (வாங்குபவர் - விற்பவர், உற்பத்தியாளர் -நுகர்வோர், சேமிப்பாளர் - முதலீட்டாளர், முதலாளி - தொழிலாளி) மனிதன் மேற்கொள்ளும் பணிகளை ஆராய்வதே பொருளாதாரப் பாடம் என இவர் வரையறுத்தார். பொருளாதாரம் குறித்த இவரது விளக்கம் நலப் (வெல்ஃபேர்) பொருளாதாரம் எனப்பட்டது.
l பல தலைமுறைகளாக இவரது பிரின்சிபல்ஸ் ஆஃப் எகனாமிக்ஸ் நூல் பொருளாதார மாணவர்களுக்கான பாடப் புத்தகமாக உள்ளது. பொருளாதாரம் கற்றுக்கொடுக்கும் முறையில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இந்த நூலில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்கள் இவரது அசலான சிந்தனையில் தோன்றியவை.
l ‘தி எகனாமிக்ஸ் ஆஃப் இண்டஸ்ட்ரி’, ‘எலிமன்ட்ஸ் ஆஃப் எகனாமிக்ஸ் இண்டஸ்ட்ரி’, ‘இண்டஸ்ட்ரி அண்ட் டிரேட்’, ‘மணி, கிரெடிட் அண்ட் காமர்ஸ்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதினார். 1890-ல் ‘பிரிட்டிஷ் எகனாமிக்ஸ் அசோசியேஷன்’ என்ற அமைப்பை உருவாக்கினார். பிறகு அது ராயல் எகனாமிக்ஸ் சொசைட்டியாக மாறியது.
l விலை நிர்ணயம், தங்கம், வெள்ளி, சர்வதேச வர்த்தகம் ஆகியன தொடர்பான அரசாங்க கொள்கைகளில் இவர் கருத்துக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. பிரிட்டனின் பொருளாதார சிந்தனையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.
l டிமான்ட் - சப்ளை வரைபடம், மார்ஜினல் யுடிலிட்டி உள்ளிட்ட பல கருத்துருக்களை மேம்படுத்தினார். புதிய மரபுசார் (நியு கிளாசிக்கல்) பொருளாதார சிந்தனையை உருவாக்கியோரில் முக்கியமானவராகக் கருதப்படும் ஆல்ஃபிரட் மார்ஷல், 1924-ம் ஆண்டு 82-வது வயதில் மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்