ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர்
இங்கிலாந்தைச் சேர்ந்த சிறந்த படைப்பாளியும், ஆங்கில இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க நகைச்சுவை எழுத்தாளருமான ஜெரோம் கே.ஜெரோம் (Jerome Klapka Jerome) பிறந்த தினம் இன்று (மே 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இங்கிலாந்தின் கால்ட்மோர் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் (1859) பிறந்தார். தந்தை மத போதகர், கட்டிட வடிவமைப்பாளராகவும் பணியாற்றினார். செயின்ட் மேரில்போன் கிராமர் பள்ளியில் கல்வி பயின்றார் ஜெரோம்.
* சிறு வயது முதலே அரசியல், நடிப்பு, எழுத்து ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். குறிப்பாக அரசியலில் முக்கியப் புள்ளியாக வரவேண்டும் என்று விரும்பி னார். தனது 13-வது வயதில் அப்பாவையும், 15-வது வயதில் அம்மாவையும் இழந்தார். இதனால் படிப்பு பாதியில் நின்றது.
* லண்டன் வடமேற்கு ரயில்வே பிரிவில் ரயிலுக்கு நிலக்கரி சேகரிக்கும் வேலையில் சேர்ந்தார். 4 ஆண்டுகாலம் அங்கு வேலை செய்தார். ஆரம்பகாலத்தில் தவறான வியாபாரத்தில் முதலீடு செய்ததால் நஷ்டமடைந்து கடனாளியானார்.
* இவரது அக்கா நாடகத் துறையில் இருந்ததால் இவரது நடிப்பு ஆசை நிறைவேறியது. அவ்வப்போது நடித்தும் வந்தார். மேடைக்காக ஹரால்டு கிரிக்டன் என்று பெயர் சூட்டிக்கொண்டார். ஒரு நடிகராக ஓரளவு வெற்றி பெற்றார். ஆனாலும், பத்திரிகைத் துறையில் இருந்த ஆர்வம் காரணமாக, 21-வது வயதில் நடிப்பை நிறுத்திவிட்டு பத்திரிகையாளராகும் முயற்சியில் ஈடுபட்டார்.
* ஒருசில பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிவந்தார். அவை பெரிதாக வரவேற்பு பெறவில்லை. பள்ளி ஆசிரியர், வங்கி குமாஸ்தா, வக்கீல் உதவியாளர் என கிடைத்த வேலைகளைச் செய்தார். பல்வேறு துறைகளில் தனக்கு இருந்த அனுபவங்களைத் தொகுத்து ஒரு நகைச்சுவை நினைவுச் சித்திரமாக எழுதி 1885-ல் வெளியிட்டார்.
* இது வரவேற்பு பெற்றதால், தொடர்ந்து நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். அவை நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த நூல்கள் வர்த்தரீதியிலும் வெற்றி பெற்றதால், இவரது பொருளாதார நிலை உயர்ந்தது. முழு நேர எழுத்தாளராக மாறினார்.
* இவரது ‘த்ரீ மேன் இன் தி போட்’ படைப்பு மாபெரும் வெற்றிபெற்று, இலக்கிய உலகில் இவருக்கு சிறப்பான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இதனால், உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். இந்த நாவல் வெளிவந்த 20 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையானது.
* இக்கதையைத் தழுவி பின்னர் திரைப்படங்கள், தொலைக்காட்சி, வானொலி நாடகங்கள், மேடை நாடகங்கள் தயாரிக்கப்பட்டு, அவையும் வெற்றி பெற்றன. தொடர்ந்து நாவல்கள், நாடகங்கள், கதைத் தொகுப்புகள், சிறுகதைகள் என ஏராளமான படைப்புகளை எழுதினார். ‘மை லைஃப் அண்ட் டைம்ஸ்’ என்ற சுயசரிதை நூலையும் எழுதினார்.
* ‘ஐட்லர்’ என்ற இதழின் ஆசிரியராக செயல்பட்டார். பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு கிடைத்த அனுபவங்கள், குழந்தைப் பருவம் மற்றும் பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இவரது பெரும்பாலான படைப்புகள் இருந்தன.
* இவரது மற்ற ஆசைகள் நிறைவேறினாலும், அரசியல் ஆசை மட்டும் இறுதிவரை நிறைவேறவே இல்லை. ஆங்கில இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்ந்த ஜெரோம் கே.ஜெரோம் 68-வது வயதில் (1927) மறைந்தார்.