சமீபத்தில் கன்னியாகுமரியில் நடந்த, வெண்புள்ளிகள் என்றழைக்கப்படும் `லூக்கோடெர்மா’ குறித்த ஒரு விழிப்புணர்வுக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். உடன் நாஞ்சில் நாடன், ஜெயமோகன், மலர்வதி போன்ற எழுத்தாளர்களும் கலந்துகொண்டார்கள். வெண்புள்ளிகள் தொற்றுநோயல்ல, பரம்பரை நோயுமல்ல அது ஒரு நிறமிக் குறைபாடு மட்டுமே என்று விளக்கும் பிரசுரங்கள், புத்தகங்கள் வெளியிடப்பட்டன. வெண்புள்ளிகளைப் பொதுப்புத்தியில் ‘வெண்குஷ்டம்’ என்று சொல்வதை அரசு தடை செய்திருக்கிறது. ஆனால் இன்னமும் பள்ளிகளில், புகழ்பெற்ற கல்வி நிலையங்களில்கூட இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்று அந்தக் கூட்டத்தின் அமைப்பாளர் உமாபதி வேதனையோடு சொன்னார். வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட ஒரு பதின்வயது சிறுமி கூட்டத்தின் நடுவே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தாள். அவள் இந்தப் பொதுப்புத்தி விலக்கலைத் தொடர்ந்து இன்னமும் சந்தித்துக்கொண்டே இருக்கிறாள், இருக்க வேண்டும் என்ற உண்மை குறுகவைத்தது. உமாபதி, தமிழ்நாட்டில் ஏறக்குறைய 36 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றொரு கணக்கு சொன்னார்.
எனது மாமனாருக்கு இருக்கிறது. திருமணத்துக்கு முன்னர், அப்பா அவரைச் சந்தித்துவிட்டு வீட்டுக்கு வந்து “பொண்ணெல்லாம் நல்லாத்தான் இருக்குது. ஆனா அவருக்கு லேசா வெள்ளை வெள்ளையா உதட்டில இருக்கு. பிரச்சினையில்லையா? ''என்றார். நான் மருத்துவத் துறையில் இருப்பதால் ''சேச்சே ''என்றேன். ஆனாலும், பின்னால் பையனுக்கு ஒருமுறை சிறிய தோல் பிரச்சினை வந்தபோது சலனமடையத்தான் செய்தேன்.
தமிழ் இலக்கியவாதிகளில் சிலருக்கு இருக்கிறது. சமயவேல், எஸ். சங்கரநாராயணன். ஜெயமோகன் இதுகுறித்து ஒரு நினைவைச் சொன்னார். சரஸ்வதி இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியர் ஒருவரைப் பற்றிய குறிப்பு அது. அவர் ஒருநாள் திடீரென்று காணாமல் போய்விட்டார். சுந்தர ராமசாமியின் நண்பர் அவர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது பத்திரிகைத் தோழர்கள், இடதுசாரித் தோழர்கள் யாருக்குமே அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. எல்லோரும் அவரை மெதுவாக மறந்துவிடுகிறார்கள். ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவரை அவர் ஊரான கோவையிலேயே கண்டுபிடிக்கிறார்கள். அவர் அங்கேயே ஒரு சிறிய வீட்டில் யார் கண்ணிலும் படாமல் மறைந்து வாழ்ந்திருக்கிறார். காரணம் அவரது முகத்தில் இருந்த சில வெண்புள்ளிகள். அதைக் கேட்டு சுரா கண்ணீர் விட்டு அழுதார் என்று ஜெயமோகன் சொன்னார். வெண்புள்ளிகளை அருவருத்து ஒதுக்கும் நிலை இருந்தது; இருந்துவந்திருக்கிறது. இன்றைய சூழலில் தொழுநோயே குணப்படுத்தக் கூடிய ஒன்றுதான்.