வலைஞர் பக்கம்

இணைய களம்: ஒரு அப்பா, ஒரு பிள்ளை, ஒரு மீனு கதை!

செய்திப்பிரிவு

இரவில் பாய் விரித்துப் படுத்தவுடன், “அப்பா மீனு கதெ...” என்று ஆரம்பிப்பான் சந்துரு. பிறகு எங்கள் உரையாடல் இப்படிப்போகும்.

“ஒரு ஊர்ல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய காடு இருந்துச்சாம்.”

“உம்..”

“அந்த காட்டுல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய கொளம் இருந்துச்சாம்.”

“உம்..”

“அந்தக் கொளத்துல என்ன இருந்துச்சி?”

“மீனு.”

“என்ன கலர் மீனு?”

“வெள்ளை, ஒயிட்டு, கருப்பு, ஆரஞ்சு, புளு.”

“அப்ப அந்தக் கொளத்துக்கு யாரு வந்தா?”

“ஆனை.”

“யானை என்ன செஞ்சுது?”

(துதிக்கை போல கையை உயர்த்தியபடி) “தண்ணி குச்சுது.”

“அப்ப அது வாய்க்குள்ள என்ன போச்சு?”

“மீனு.”

“உடனே யானை என்ன செஞ்சுது?”

“மீனை கடிச்…” என்றபடி என் கையைக் கடிப்பான்.

“ஆ... வலிக்குது.”

சிரிப்பான்.

“கடிபட்ட மீனு தண்ணியில குதிச்சி என்ன பண்ணுச்சி?”

பதில் சொல்ல முடியாமல், கையாலும் கண்ணாலும் எதோ சொல்ல முயற்சி பண்ணுவான். அவன் சொல்வதைப் புரிந்துகொண்டு, “ஆங்... கரெக்ட்டு. அதோட ஃப்ரென்ட்ஸை எல்லாம் கூட்டிக்கிட்டு வந்து யானைக்கு கீச்சலம் காட்டுச்சி” என்றபடி அவனுக்குக் கிச்சுக்கிச்சு பண்ணுவேன்.

மறுபடியும் சிரிப்பு.

“உடனே யானை கொளத்தைவுட்டு எப்படி ஓடுச்சி?”

“குடுகுடுகுடுகுடுன்னு.”

கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு, மறுபடியும் “அப்பா கதெ” என்பான்.

“ஒரு ஊர்ல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய காடு இருந்துச்சாம்.”

“உம்..”

“அந்தக் காட்டுல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய கொளம் இருந்துச்சாம்.”

இப்படியே கொட்டாவியுடன் ஏழெட்டு முறை கதை சொல்வேன். முதவாட்டி கேட்பது போலவே முகத்தை வைத்துக்கொண்டிருக்கும் அவனிடம், ஒரே ஒரு மாற்றம்தான் இருக்கும். முதலில் இடப்பக்கம் இருப்பான், அடுத்த கதைக்கு வலப்பக்கம், திடீரென தலைமாட்டில், பிறகு கால் மாட்டில், பிறகு என் மீது படுத்திருப்பான். சில நேரம் கதை சொல்லியபடியே தூங்கிவிட்ட என்னை, “அப்பா கதெ” என்று உலுப்புவான். ரகளையைப் பொறுக்க முடியாமல், அவன் அம்மா வருவாள். “இப்பத் தூங்கல” என்று ஒரே அதட்டுதான். பேட்டரி கழற்றிய பொம்மைபோலச் சட்டென்று ஆஃப் ஆகிவிடுவான் சந்துரு. நடிப்பு அல்ல, உண்மையிலேயே தூங்கிவிடுகிறான். இதென்ன மாயம்!

SCROLL FOR NEXT