படைப்பாளி, இலக்கியவாதி
ஒடிசாவின் பிரபல படைப்பாளியும் இலக்கியத்துக்கான ஞானபீடப் பரிசை வென்றவருமான கோபிநாத் மொஹந்தி (Gopinath Mohanty) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கட்டாக் மாவட்டத்தில், மஹாநதிக் கரையின் அருகே உள்ள நாகாபாலி என்ற கிராமத்தில் பிறந்தார் (1914). சோன்புரியில் ஆரம்பக்கல்வி பயின்றார். 12 வயதில் தந்தையை இழந்தார். பிறகு அண்ணனுடன் பாட்னா சென்றார். பள்ளிப் படிப்புக்குப் பிறகு ராவென்ஷா கல்லூரியில் பட்டம் பெற்றார்.
* பாட்னா பல்கலைக்கழகத்தில் 1936-ல் முதுகலைப்பட்டம் பெற்ற பிறகு ஒரிசா அரசு நிர்வாகப் பணியில் சேர்ந்தார். சிறுவயது முதலே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார். தலைசிறந்த இலக்கியவாதிகளின் நூல்களை வாசித்தார்.
* 1940-ல் இவரது முதல் நாவல் ‘மானா காஹிராரா சாஸா’ வெளிவந்தது. தொடர்ந்து ‘தாதி புதா’, ‘பராஜா’, ‘அம்ருதர் சந்தான்’, ‘சபன் மாடி’, ‘மாட்டிமடால்’ உள்ளிட்ட 24 நாவல்கள், ‘காஸர் ஃபூல்’, ‘நவ வதூ’, ‘உட்தா கயி’ உள்ளிட்ட 10 சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்.
* மேலும் ‘முக்திபத்தே’, ‘மஹாபுருஷ்’ உள்ளிட்ட நாடகங்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள், ‘கலாஷக்தி’ என்ற தலைப்பில் 2 தொகுதிகளாக வெளிவந்த விமர்சனக் கட்டுரைகள், கந்த், கடபா மற்றும் சரோரா பழங்குடியின மக்களின் மொழிகள் குறித்த 5 நூல்கள் உள்ளிட்ட இவரது படைப்புகள் ஒரிய இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன. இவை மட்டுமல்லாமல், ஒரிய மொழியில் இவர் மொழிபெயர்த்து 3 தொகுதிகளாக வெளிவந்த ‘டால்ஸ்டாயின் வார் அன்ட் பீஸ்’ மற்றும் ‘ரவீந்திரநாத் தாகூரின் ஜனஜோக்’ ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை.
* நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஒரிசா மக்களின் வாழ்க்கையை இவரது எழுத்துகள் பிரதிபலித்தன. பாடல், உரைநடை, அன்றாட வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், வாக்கியங்களை உள்ளடக்கிய தனித்துவம் வாய்ந்த பாணியைப் பின்பற்றினார்.
* இவரது ‘பராஜா’, ‘தண்டபாணி’, ‘லயா பிலயா’, ‘தாதி புதா’ ஆகிய புகழ்பெற்ற நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. 1950-ல் ஒரிசாவின் பெருமைமிகு விஸ்வ மிலன் சான்றிதழ் பெற்றார்.
* ‘அமிருதரா சந்தான்’ நாவலுக்காக 1955-ல் சாகித்திய அகாடமி விருது பெற்றார். ‘மாட்டிமடால்’ என்ற இவரது காவிய - உரைநடை படைப்புக்காக 1973-ல் ஞானபீட விருது வழங்கப்பட்டது. மூன்று லட்சத்து இருபதாயிரம் வார்த்தைகளில் எழுதப்பட்ட இந்த நாவல், ஒரிய மொழியின் மிகப் பெரிய நாவல் எனக் கருதப்படுகிறது. இதை எழுதி முடிக்க 10 ஆண்டுகளைச் செலவிட்டார்.
* உத்கல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றினார். 1986-ல் அமெரிக்காவில் சான் ஜோஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலுக்கான இணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
* இவர் பிறந்த மகாநதிக் கரையில் பல அற்புத ஒரிய இலக்கியங்கள் உருவாவதற்கு இவருடைய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. இவரது அண்ணன் மற்றும் உறவினர் குருபிரசாத் ஆகியோரும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஒரிசா இலக்கியத்துக்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.
 சோவியத் லாண்ட் நேரு விருது, பத்ம பூஷண் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். ஒரிய இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய கோபிநாத் மொஹந்தி 1991-ம் ஆண்டு 77வது வயதில் மறைந்தார்.