வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1957 நவம்பர் 3: விண்வெளிக்குச் சென்றது லைக்கா!

சரித்திரன்

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான போட்டி உச்சத்தில் இருந்த சமயம். 1957 அக்டோபர் 4-ம் தேதி ஸ்புட்னிக்-1 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவி அமெரிக்கா வுக்கு அதிர்ச்சி கொடுத்தது சோவியத் ஒன்றியம். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் ஒரு மாதம் கழித்து, இதே நாளில் ஒரு உயிரினத் தைச் சுமந்துகொண்டு ஸ்புட்னிக்-2 என்ற சோவியத் ஒன்றியத்தின் விண்கலம் விண் வெளிக்குச் சென்றது. அதில் பயணம் செய்தது ‘லைக்கா’நாய். அதுதான் பூமியின் சுற்று வட்டப்பாதைக்குப் பயணம் செய்த முதல் உயிரினம். மாஸ்கோ நகரத் தெருக்களில் திரிந்துகொண்டிருந்த மோங்ரெல் ரக நாய் அது.

விண்வெளிக்கு நாயை அனுப்பலாம் என்று முடிவு செய்தவுடன் பல நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றை வைத்து சோதனை நடத்தப்பட்டது. அவற்றில் அல்பினா, முஷ்கா மற்றும் லைக்கா ஆகிய மூன்று நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இறுதியில் லைக்காதான் ஸ்புட்னிக்கில் பயணம் செய்தது. விண்கலத்தின் உள்ளே சங்கிலியால் கட்டப்பட்டு லைக்கா வைக்கப்பட்டிருந்தது. தேவையான உணவு, நீர் ஆகியவை ஜெல் வடிவில் வைக்கப்பட்டிருந்தன. விண்கலம் மேலே செல்லும்போது ஏற்படும் அதிக வெப்பத்தைத் தாங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விண்கலத்தில் பல நாட்கள் லைக்கா உயிருடன் இருந்ததாக பல ஆண்டுகள் நம்பப்பட்டது. எனினும், நான்காவது சுற்றுவட்டப்பாதையில் ஸ்புட்னிக்-2 சென்றபோதே, அதாவது, விண்கலம் செலுத்தப்பட்டு சில மணி நேரத்தில் லைக்கா இறந்துவிட்டது. இந்தத் தகவல் 2002-ல்தான் தெரியவந்தது.

எனினும், உயிரினங்கள் குறிப்பாக மனிதர்களும் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை லைக்கா விதைத்தது. இதன் தொடர்ச்சியாக,1961-ல் யூரி ககாரின் என்ற ரஷ்ய வீரர் முதன்முதலாக விண்வெளியில் பயணம் செய்தார்.

SCROLL FOR NEXT