பிரபல இந்தித் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் (Mahesh Bhatt) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*பம்பாயில் பிறந்தார் (1948). இவரது தந்தை, இயக்குநர்; தயாரிப்பாளர். சிறுவயதிலேயே பெற்றோர் பிரிந்து விட்டதால், அம்மாவால் வளர்க்கப் பட்டார்.
*குடும்ப நண்பர் ஒருவரின் உதவி யால் ராஜ் கோஸ்லாவிடம் துணை இயக்குநராக சேர்ந்தார். 21-வது வயதில் இயக்குநராக அறிமுகமானார். 1984-ல் இவர் தயாரித்த ‘ஸாரான்ஷ்’ திரைப்படம் 14-வது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 1986-ல் வெளிவந்த ‘நாம்’ திரைப்படம் இவரது முதல் வர்த்தகத் திரைப்படம்.
*1987-ல் இவரது சகோதரர் முகேஷ் பட்டுடன் இணைந்து ‘விசேஷ் ஃபிலிம்ஸ்’ என்ற பேனரில் வெளிவந்த ‘கப்சா’ திரைப்படம் மூலம் தயாரிப்பாளரானார். ‘டாடி’, ‘ஸ்வயம்’ போன்ற கலைப்படங்களுடன் ‘ஆவர்கி’, ‘ஆஷிகி’, ‘தில் ஹை கி மான்தா நஹி’ உள்ளிட்ட வர்த்தகத் திரைப்படங்களையும் தயாரித்தார்.
*இவர் இயக்கிய ‘சாதக்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. ‘மன்சிலே அவுர் பீ ஹை’, ‘லஹு கே தோ ரங்’, ‘ஸார்’, ‘கும்ராஹ்’, ‘கிரிமினல்’, ‘விஷ்வாஸ்காத்’, ‘ஹம் ஹை ராஹி ப்யார் கீ’, ‘ஜக்ம்’, ‘ஆஜ்’, ‘காஷ்’, ‘டிகானா’, ‘சியாசத்’ உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை.
*தேசிய திரைப்பட விருது, ‘ஸ்பெஷல் ஜூரி’ விருது, நர்கீஸ் தத் விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். தனது சொந்த வாழ்க்கை அனுவபங்களையும் தன்னைப் பாதித்த விஷயங்களையும் அடிப்படையாகக் கொண்டு படங்கள் தயாரிக்கும் வழக்கம் கொண்டவர்.
*ஓஷோ, யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது தத்துவங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். யு.ஜி. கிருஷ்ணமூர்த்தியுடனான உரையாடல்கள் குறித்து ஒரு நூலை எழுதியுள்ளார். பல்வேறு இடங்களில் தான் சந்தித்த மக்கள், கண்ட நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு ‘அன்சங் எக்ஸ்ட்ராடினரி லைஃப்ஸ்’ என்ற நுலை எழுதியுள்ளார். ‘ஸ்வாபிமான்’, ‘ஏ மவுத்ஃபுல் ஆஃப் ஸ்கை’, ‘கபி கபி’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார்.
*இவரது படங்களில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, ஏறக்குறைய அனைத்துப் பாடல்களுமே வெற்றி பெறும். இவரது குடும்பத்தில் பிள்ளைகள் உட்பட பலரும் நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராகச் செயல்பட்டு வருகின்றனர்.
*அனுபம் கெர், ராகுல் ராய், பூஜா பட், அதுல் அக்னி ஹோத்ரி, எம்ரான் ஹஷ்மி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு அடையாளமும் முகவரியும் கொடுத்திருக்கிறார். சஞ்சய் தத். அமிர் கான், ஜூஹி சாவ்லா உள்ளிட்ட பல பிரபலங்களின் தொழில் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தவர். 1999-ல் இயக்குநர் பணிகளிலிருந்து விலகி திரைக்கதைகள் எழுதத் தொடங்கினார்.
*‘துஷ்மன்’, ‘ராஜ்’, ‘மர்டர்’, ‘காங்ஸ்டர்’, ‘வோ லம்ஹே’ உள்ளிட்ட பெரும்பாலானவை வெற்றித் திரைப்படங்கள். அமெரிக்காவின் ‘டீச் எய்ட்ஸ்’ என்ற தன்னார்வ அமைப்பின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.
*தயாரிப்பாளர், கதாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் என இயங்கினாலும் இதுவரை அவர் படங்களில் நடித்ததில்லை. இந்த ஆண்டில் ‘சித்தார்த்தா’ என்ற படத்தில் புத்த பிட்சுவாக நடித்துள்ளார். இன்று 68-வது வயதை நிறைவு செய்கிறார். பாலிவுட்டின் பலம்பொருந்திய ஒரு ஆளுமையாகத் தன்னை உயர்த்திக் கொண்டுள்ள மகேஷ் பட் தற்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.