தென்னிந்தியாவின் பாரம்பரிய இசையான கர்னாடக சங்கீதத்தை வளர்க்க ‘மியூசிக் அகாடமி’ என்ற அமைப்பை சர் சி.பி. ராமஸ்வாமி ஐயர் 1928 ஆகஸ்ட் 18-ல் தொடங்கி வைத்தார். 1927 டிசம்பரில் மெட்றாஸில் நடந்த முதலாவது அனைத்திந்திய சங்கீத மாநாட்டில் இயற்றிய தீர்மானத்தை அடியொற்றி இந்த அகாடமி தொடங்கப்பட்டது. அந்த மாநாடும் மெட்றாஸ் மாநகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாநாட்டையொட்டி நடந்தது மற்றுமொரு சிறப்பு. ஸ்பர் டேங்க் ஏரிக் கரையில் போடப்பட்ட பந்தலில் 50-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. எஞ்சியவை ‘மியூசியம் தியேட்டர்’ அரங்கில் நடைபெற்றன. டாக்டர் யு. ராமா ராவ் மெட்றாஸ் மியூசிக் அகாடமியின் முதல் நிறுவனத் தலைவர். அகாடமி அலுவலகம் தம்புச் செட்டித் தெருவில் அவருடைய மருத்துவமனை அமைந்திருந்த எண். 323 இல்லத்தில் இருந்துதான் செயல்பட்டது. அவருக்குப் பிறகு கே.வி. கிருஷ்ணசாமி ஐயர், டி.ஆர். வெங்கட்ராம ஐயர், டி.எஸ். ராஜம், கே.ஆர்.சுந்தரம் ஐயர், டி.டி வாசு ஆகியோர் அடுத்தடுத்து தலை வர்களாகப் பதவி வகித்தனர்.
பல்வேறு இடங்களில் அலுவலகம் கண்ட அகாடமி, இறுதியாக மவுபரீஸ் சாலையில் ‘ஸ்வீட் ஹோம்’ என்று பெயரிடப்பட்ட இல்லத்துக்கு இடம் பெயர்ந்தது. அங்குதான் அதற்கு நிரந் தரக் கட்டிடம் கட்டப்பட்டது. 1946-ல் அந்த இடம் வாங்கப்பட்டது. 1955 முதல் 1962 வரையில் அகாடமி கட்டிடம் உருவெடுத்தது. அந்தக் கலையரங்கம் உருவாகப் பெரிதும் காரணமாக இருந்த டி.டி.கிருஷ்ணமாசாரியின் பெயர் அதற்கு சூட்டப்பட்டது. 90 ஆண்டு களாக இசைப் பணியைத் தொய் வடையாமலும் தரம் குன்றாமலும் தொடர்ந்து நடத்தி வருகிறது அகாடமி.
மியூசிக் அகாடமி கட்டிடத்துக்கான அடிக்கல்லைப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு 1960-ல் நாட்டினார். கச்சேரிகள் 1962-ல் இருந்துதான் தொடங்கின. அப் போதைய மதறாஸ் மாகாண கவர்னர் ஜெய சாமராஜ உடையார் அகாடமியின் 36-வது மாநாட்டை புதிய கட்டிடத்தில் தொடங்கி வைத்தார். அந்த இடம் தயாரா வதற்கு முன்னால் நகரின் வெவ்வேறு இடங்களில் கச்சேரிகளும் அவை தொடர் பான கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. அகாடமி உருவானதும் அதே இடத்தி லேயே அனைத்தும் இடம்பெற்றன.
மதறாஸ் மாநகரில் இசைக்காக ஒரு அகாடமி தேவையென்ற தீர்மானம், 1926 ஜனவரி 7-ல் சவுந்தர்ய மஹால் என்ற திருமணக் கூடத்தில் நடந்த கூட்டத்தில் அப்போதைய நகரப் பிரமுகர்கள் சிலரால் இயற்றப்பட்டது. அந்தக் கூட்டத்துக்கு டி.வி. சேஷகிரி ஐயர் தலைமை வகித்தார். டாக்டர் யு. ராமா ராவ், எஸ்.சத்யமூர்த்தி, திருமதி மார்கரெட் கசின்ஸ், சங்கைக்குரிய எச்.ஏ. பொப்ளாய், டபிள்யு. துரை சாமி ஐயங்கார், சி.டி.ராஜரத்தின முதலியார், சி.ஆர்.சீனிவாச ஐயங்கார், சி.ராமானுஜாசாரியார், எஸ்.குருசாமி செட்டி, ஆர்.கிருஷ்ண ராவ் போன்ஸ்லே போன்றோர் அதில் பங்கேற்றனர். தென்னிந்திய இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கவும் இசையை வளர்க்கவும் அகாடமி தேவையென்று அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. எஸ்பிளனேடில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. கட்டிடத்தில்தான் மெட்றாஸ் மியூசிக் அகாடமி முதல்முறையாகத் தொடங்கப்பட்டது. அகாடமியின் முதல் மாநாடு ஈஸ்டர் விடுமுறைக் காலத்தில் 1929-ல் மெட்றாஸ் பல்கலைக்கழகத்தின் செனட் ஹவுஸில் நடந்தது. சங்கீத நிபுணர்களின் ஆய்வுக்கூட்டம் திருவல்லிக்கேணியில் ராஜா ஹனுமந்த லாலா தெருவில் மணி ஐயர் ஹாலில் நடைபெற்றது. சங்கீத நிகழ்ச்சிகளும் மாநாடும் நடத்த டிசம்பர் மாதமே சிறந்ததாக இருக்கும் என்று 1930-ல் முடிவு செய்யப்பட்டது.
அப்போது முதல் ‘டிசம்பர் சீசன்’என்கிற ‘மார்கழிக் கச்சேரி’ ஆரம்பமாயிற்று. 1930 முதல் 1940 வரையில் சங்கீத மாநாடு, ரிப்பன் பில்டிங்குக்குப் பின்னால், மை-லேடீஸ்’ கார்டனுக்குப் பக்கத்தில் பந்தல் போட்டு நடத்தப்பட்டது. அந்த இடத்துக்கு அருகிலேயே ‘பார்க் ஃபேர்’ என்ற கண்காட்சியும் நடந்து வந்தது. அந்த இரைச்சல் இசை நிகழ்ச்சிக்கு இடையூறாக இருந்தது. எனவே 1941, 1942, 1943 ஆண்டுகளில் செனட் ஹவுஸ் இடத்துக்கே மாற்றப்பட்டது.
‘சங்கீத கலாநிதி’ என்ற பட்டத்தை வழங்குவது என்ற முடிவை எடுத்த பிறகு, 1943 ஜனவரி முதல் தேதி ரசிக ரஞ்சனி சபையில் கச்சேரி நடந்தது. அதற்கு முன்னால் மாநாட்டைத் தொடங்கி வைத்த அனைவருக்கும் ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்கப்பட்டது. அடுத்த மாநாடுகள் ஜெனரல் பேட்டர்சன் சாலையில் இருந்த ‘தி ஃபன்னல்ஸ்’ (இப்போதைய சத்யமூர்த்தி பவன்) கட்டிடத்திலும், கச்சேரிகள் லாட் கோவிந்ததாஸின் கார்டன், ராயப்பேட்டை வெஸ்ட்காட் சாலையில் இருந்த ராமநாதபுரம் ராஜாவின் இல்லத்திலும் நடந்தது. ராமநாதபுரம் ராஜாவின் இல்லத்தை வாங்கிய கட்டிட கான்ட்ராக்டர் முனிவேங்கடப்பா 1930-ல் கே.கிருஷ்ணா ராவுடன் சேர்ந்து பிற்காலத்தில் நகரின் முக்கிய அடையாளச் சின்னமாகத் திகழ்ந்த உட்லேண்ட்ஸ் ஹோட்டலைத் தொடங்கினார்.
மெட்றாஸ் மியூசிக் அகாடமியின் மாநாடுகள் 1954 வரையில் மயிலாப்பூரில் உள்ள சுந்தரேஸ்வரர் ஹாலில் (இப்போது ஆர்.ஆர். சபா) நடந்தன. உரைகள், விளக்கங்கள் நேஷனல் கேர்ள்ஸ் ஸ்கூலில் (பின்னாளில் லேடி சிவசாமி ஐயர் பள்ளி) நடந்தன. கச்சேரி பி.எஸ்.ஹைஸ்கூலில் நடந்தன. 1962-ல் டி.டி.கே. ஆடிட்டோரியம் திறக்கப்பட்ட பிறகு மெட்றாஸ் மியூசிக் அகாடமியின் கச்சேரிகள், ஆய்வரங்கங்கள், காட்சி விளக்க நிகழ்ச்சிகள் அனைத்தும் வெகு தரமாக அதன் சொந்தக் கட்டிடத்திலேயே நடைபெறத் தொடங்கின.
- சரித்திரம் பேசும்…