‘தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என முழங்கிய நாமக்கல் கவிஞர், தமிழரின் தனித்துவமான குணங்களைப் பட்டியலிடும்போது ‘வாய்மை வாழ்வின் நெறியென்றான் / தூய்மை வாழ்வின் விளக்கென்றான்’ என்று சொல்லிப் பெருமைப்பட் டார். ஆனால் இப்போதோ, ‘நோட்டுக்கு ஓட்டு’ என்று வாய்மையோ, தூய்மையோ அற்ற ஒரு நடைமுறையால் தமிழ்நாடு அடையாளம் காணப்படுகிறது.
2016 மே மாதத்தில் அரவக்குறிச்சி,தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்தியத் தேர்தல் வரலாற்றில் வாக்குக்குப் பணம் கொடுக்கப்பட்டதற்காக தேர்தல் ரத்து செய்யப்பட்ட ‘பெருமையை’ அதன் மூலம் தமிழகம் அடைந்தது. இப்போது ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் அந்தப் ‘பெருமையைத்’ தமிழகம் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்படுவதற் கான காரணங்களை விளக்கி 29 பக்க அறி விப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட் டிருக்கிறது. வாக்காளர்களில் 85 விழுக்காட்டின ருக்கு தலா ரூ.4 ஆயிரம் எனக் கணக்கிட்டு சுமார் ரூ. 89 கோடி விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் வருமான வரித்துறை சோதனை யில் சிக்கியிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறு கிறது. இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 171 B, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவுகள் 8 (1) மற்றும் 123 (1) ஆகியவை வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை தண்டனைக்குரிய குற்ற மாக அறிவித்திருப்பதையும் அந்தக் குற்றத்தைச் செய்பவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 6 ஆண்டு கள்வரை தேர்தலில் போட்டியிட முடியாதபடி தடை விதிக்கப்பட வழி செய்திருப்பதையும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை நம் மால் மனப்பூர்வமாக வரவேற்க முடியவில்லை. ஏனென்றால், அரவக்குறிச்சி,தஞ்சாவூர் தொகுதி களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டபோதும் (15.05.2016) தேர்தல் ஆணையம் இதே கார ணங்களையும், இதே சட்டப் பிரிவுகளையும்தான் குறிப்பிட்டிருந்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் கைப்பற்றப்பட்டது ரூ. 32 லட்சம்தான். ஆனால் அப்போது அரவக்குறிச்சி தொகுதியில் அன்பு நாதன் என்பவரிடம் ரூ. 4.77 கோடி பணமும், ரூ. 1.30 கோடி மதிப்புள்ள வேட்டி புடவை வாங்கியதற் கான ரசீதுகளும் கைப்பற்றப்பட்டன. தஞ்சாவூர் தொகுதிக்குட்பட்ட லாட்ஜ் ஒன்றில் ரூ. 20 லட்சம் கைப்பற்றப்பட்டது. ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம் 13 வார்டுகளுக்கு ரூ.1.40 கோடி விநியோகிக்கப் பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. பலர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
அந்தத் தொகுதிகளில் மீண்டும் 2016 நவம் பரில் தேர்தல் நடந்தது. அதே வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். வெற்றிபெற்ற எவரும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை.வழக்கு பதிவு செய் யப்பட்ட எவரும் இதுவரை தண்டிக்கப் படவுமில்லை.
ஆர்.கே.நகரில் இப்போது தேர்தல் ரத்து செய் யப்பட்டிருந்தாலும் மீண்டும் தேர்தல் நடத்தப் படும்போது இதே வேட்பாளர்கள்தான் போட்டி யிடப் போகிறார்கள். அரவக்குறிச்சியிலும் தஞ்சாவூரிலும் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனைகளில் குற்றம் சாட்டப்பட்டவர் கள் எப்படி சுதந்திரமாக இருக்கிறார்களோ, அப் படித்தான் இப்போது குற்றம் சாட்டப்பட்டவர் களும் எந்தக் கவலையும் இல்லாமல் உலா வரப்போகிறார்கள். ‘வருமானவரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட உதிரி காகிதங்களின் அடிப்படையில் முக்கியமான பதவிகளை வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் மீது விசாரணை நடத்த உத்தரவிட முடியாது’ என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கும் நிலையில் (W P 505/2015 Common Cause and Others Vs union of India) அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி விலகும்படி கேட்பதுகூட ‘சிறுபிள்ளைத்தனமாகவே’ பார்க்கப்படும். இதுதான் நமது தேர்தல் ஜனநாயகத்தின் விநோதமான நடைமுறை.
தேர்தலில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்து வதற்காகப் பல்வேறு ஆலோசனைகளை, பரிந்துரைகளை சட்ட ஆணையம் அவ்வப்போது மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. 1999-ம் ஆண்டு நீதிபதி பி.பி.ஜீவன் ரெட்டி தலைவராக இருந்தபோது அரசுக்கு அளிக்கப்பட்ட சட்ட ஆணையத்தின் 170-வது அறிக்கையில் அரசே தேர்தல் செலவுகளை ஏற்பது, அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதைத் தடை செய்வது, அரசியல் கட்சிகளின் கணக்குகளைக் கட்டாயத் தணிக்கைக்கு உட்படுத்துவது, விகிதாச்சார தேர்தல்முறை உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
2004-ம் ஆண்டு டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோது தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையமே விரிவானதொரு அறிக் கையை அரசுக்கு அளித்தது. அரசியல் கட்சிகளின் கணக்குகளைத் தணிக்கை செய்வது உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் இடம்பெற்றிருந்தன.
2015-ம் ஆண்டு நீதிபதி ஏ.பி.ஷா தலைவராக இருந்தபோது சட்ட ஆணையம் அளித்த 255-வது அறிக்கையில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டிருந்தது. பதினாறு பரிந் துரைகளையும் முன்வைத்திருந்தது.
தற்போது சட்டமன்ற/நாடாளுமன்ற சபா நாயகரிடம் இருக்கும் கட்சித் தாவல் தொடர் பாகத் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை உயர் நீதிமன் றத்திடமும் உச்ச நீதிமன்றத்திடமும் அளிப்பது; தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திலும் தனி அமர்வு களை உருவாக்கி அந்த வழக்குகளில் ஆறு மாதங் களில் தீர்ப்பளிக்கச் செய்வது; சுயேச்சை வேட் பாளர்கள் போட்டியிடுவதைத் தடை செய்வது; அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படும்போது மதம், சாதி, இனம்,மொழி,வாழிடம் முதலான வற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டவோ, வன்முறையில் ஈடுபடவோ மாட்டோம் என்ற உறுதிமொழியைப் பெறுவது; அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகத்தைப் பேணும் விதமாக விதிகளை உருவாக்குவது உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் இடம்பெற்றிருந்தன.
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக சட்ட ஆணையமும், தேர்தல் ஆணையமும் அளித் துள்ள அறிக்கைகளில் பல்வேறு விஷயங்கள் ஆராயப்பட்டிருந்தாலும் வாக்குக்குப் பணம் கொடுத்தால் என்ன செய்வது என்பதைப் பற்றி சிறப்பு கவனம் செலுத்தி ஆராயப்படவில்லை.
தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், ஆர்.கே.நகர் அனுபவங்களின் அடிப்படையில் இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய விதிகளை உருவாக்க வேண்டியது அவசியம். ஏற்கெனவே முன்மொழியப்பட்டிருக்கும் தேர்தல் சீர்திருத்தங் களை நடைமுறைப்படுத்துவதோடு வாக்குக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்யவும், அவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியைப் பதிவு நீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையம் முன்வரவேண்டும். தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுகிறவர்களின் வாக்குரிமையை முடக்கி வைத்தல், அரசியல் கட்சிகளில் அவர்கள் பதவி வகிப்பதைத் தடை செய்தல் முதலான நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கலாம்.
வாக்குக்குப் பணம் வாங்கும் வாக்காளர்களின் வாக்குரிமையைக் குறைந்தபட்சம் பத்து ஆண்டு களுக்கு நிறுத்தி வைப்பது பற்றியும் ஆலோசிக்க லாம். இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் தேர்தல்முறை மீதே மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். அது தேர் தல் ஜனநாயகத்துக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.
ஆர்.கே.நகர் தொகுதியில் புழங்கியிருக்கும் கோடிக்கணக்கான கறுப்புப் பணம், மத்திய அர சின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை முற்றாகத் தோல்வி அடைந்துவிட்டதையே காட்டுகிறது. தேர் தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் கறுப் புப் பணத்தையும் ஒழிக்க முடியாது, ஜனநாயகத் தையும் காப்பாற்ற முடியாது. அதை மத்திய அரசு உணர்ந்து தேர்தல் சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.
கட்டுரையாளர்: ரவிக்குமார்
(விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்)