வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1923 அக்டோபர் 16: நிறுவப்பட்டது வால்ட் டிஸ்னி!

சரித்திரன்

பெரியவர்களைக் குழந்தைகளாக்கும் தன்மையும், குழந்தைகளைக் கற்பனை உலகில் மிதக்க வைக்கும் ஆற்றலும் கொண்டவை கார்ட்டூன் படங்கள். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற கார்ட்டூன் பாத்திரங்களை உருவாக்கி உலகமெங்கும் பிரபலப்படுத்திய கலைஞர் வால்ட் டிஸ்னி. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த வால்ட் டிஸ்னியின் மூதாதையர்கள் பிரிட்டன் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள்.

இளம் வயதிலிருந்தே ஓவியக் கலை ஆர்வத்துடன் வளர்ந்த டிஸ்னி, நாளிதழ்களில் வரும் கார்ட்டூன்களைப் பார்த்து அப்படியே வரைவார். கன்ஸாஸ் சிட்டி நகரின் பள்ளியில் படித்தபோது அவருக்கு திரைப்படம் மீதும் ஆர்வம் உண்டானது. பள்ளியில் படித்துக்கொண்டே, வீடுவீடாகச் சென்று நாளிதழ்களை விநியோகிக்கும் பணியையும் செய்தார். இடையில் ஓவியமும் கற்றுக்கொண்டார். முதல் உலகப்போர் சமயத்தில், தனது 16-வது வயதில் ராணுவத்தில் சேர முயன்றார். எனினும், மிகவும் இளையவர் என்ற காரணத்தால் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. பின்னர் செஞ்சிலுவை சங்கத்தில் இணைந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரிந்தார்.

அதன் பின்னர் விளம்பர நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அப் ஐவார்க்ஸ் என்ற ஓவியருடன் இணைந்து சொந்த நிறுவனத்தையும் தொடங்கினார். ஆர்வம் மிக்க டிஸ்னி, அனிமேஷன் கலையையும் கற்றுக்கொண்டார். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், தனது அண்ணன் ராய் டிஸ்னியுடன் இணைந்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் அனிமேஷன் திரைப்பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். 1923-ல் இதே நாளில் தொடங்கப்பட்டதுதான் புகழ்பெற்ற ‘வால்ட் டிஸ்னி’ நிறுவனம்.

அனிமேஷன், கார்ட்டூன் திரைப்படங்களைத் தயாரித்து உலகப் புகழ்பெற்றார் டிஸ்னி. இன்றும் அனிமேஷனில் டிஸ்னி நிறுவனம் முக்கியப் பங்கை வகிக்கிறது.

SCROLL FOR NEXT