மூன்று நண்பர்கள் அதில் ஒருவருக்கு காதல் மீது நம்பிக்கை இல்லை. காதல் என்பது உடலமைப்பு, தோற்றத்தைக் கண்டு வரும் ஒரு அம்சம் தான் என்பது இவரின் கூற்று. மற்றொருவர் ஓவியர். இவரைப் பொருத்தவரை, காதல் அன்பின் வெளிப்பாடு. இவர் விரும்பும் பெண்ணுக்கும் இவருக்கும் உண்டான வயது இடைவெளி பதினைந்து. அப்பெண் இவரினும் மூத்தவள். கடைசி தோழன் 'நீங்க வந்தா மட்டும் போதும்' என்று காதலிக்காக அலையும் காஞ்சி போன பையன்.
மூவர் வாழ்விலும் நட்பு தான் பிரதானம். காதல் மீது நம்பிக்கையற்ற நண்பன், ஓவியனின் காதலை உடல் ஈர்ப்பு என்று கேலி செய்கிறான். நட்பு சுக்குநூறாக உடைகிறது.
முதலில் கூறிய நண்பன் அமீர் கான். இரண்டாவது கூறியது அக்ஷய் கண்ணா. இவரின் காதலி 'டிம்பிள் கபாடியா', மூன்றாவது காஞ்சி போன பையன் தான் சைஃப் அலி கான்.
முதலில் புள்ளியில் துவங்கி மெருகேறி மெருகேறி ஒரு மாஸ்டர் பீஸ் ஓவியமாக வடிவம் காணும் இப்படம் தான் 'DIL CHAHTHA HAI'.
தந்தையின் பிசினஸ் எடுத்து நடத்த பாரிஸ் செல்லும் அமீர் கான், அங்கே ப்ரீதி ஜிந்தாவுடன் நட்பாகி, இறுதியில் தன்னையும் அறியாமல் காதலில் விழுவார். ப்ரீதி மீது அமீர் தான் கொண்ட காதலை இறுதியில் புரிந்து கொண்டு மனமகிழ்ச்சி காண்பதும், பிரிந்த நண்பர்களுடன் சேர்வது தான் க்ளைமாக்ஸ்.
இப்போது, இந்த கதையில் அமீர் கானுக்கு பதிலாக ஜீவாவையும், சைஃப், அக்ஷய் கண்ணாவிற்கு பதிலாக சந்தானத்தையும், வினய்யையும் வர்ணனை செய்து கொள்ளுங்கள்! இப்போ உங்க மனசு என்ன சொல்லுது? என்றென்றும் புன்னகை கதை இதுக்கு கொஞ்சம் மேட்ச் ஆகுது இல்லை?
'என்றென்றும் புன்னகை' படத்தை 'DIL CHAHTHA HAI'யின் காப்பி என்று கூற முடியாது. ஆனால் கதையை நடத்திச் செல்லும் டெம்ப்ளேட்டிற்கு இயக்குனர் 'Farhan Akthar' தான் முக்கிய காரணகர்த்தா.
நல்ல கதைக்களம், இது தான் நடக்கும் என்பதை கிளைமாக்ஸ் வரை நம்மால் கணிக்க முடியும். வசீகரிக்கும் மதியின் ஒளிப்பதிவு, இதமான ஹாரிஸ் பின்னணி, புகுத்தப்படாத நகைச்சுவை என அனைத்தும் இணைந்து நாம் குவித்த நினைவுகளின் ஆல்பத்தை பார்ப்பது போன்ற அனுபவத்தை தருகின்றது.
ஹாரிஸின் பாடல்கள் மனதில் கொஞ்சம் கூட ஓட்டவில்லை. எங்கே போனது என்றே தெரியவில்லை இவர் இசையில் செய்கின்ற ஜாலம். 'வானெங்கும் நீ மின்ன 'பாடல் ஒன்று தான் முணுமுணுக்க வைக்கிறது அதுவும் உன்னாலே 'உன்னாலே 'படத்தில் வருகின்ற 'முதல் நாள் இன்று 'பாடலைத் தான் நினைவுபடுத்துகிறது.
ஒரு காட்சியில் வினய் ஜீவாவிடம் 'இப்பவும் சொல்றேன் எனக்கு என் வாழ்க்கை தான் முக்கியம்! ஏன்னா என் வாழ்க்கையே நீ தான்டா ' இந்த ஒரு இடம் மட்டும் தான் படத்தில் முலாம் பூசிய இடமாக தெரிகிறது. மற்றபடி யதார்த்தம் எங்கேயும் அத்து மீறப்படவில்லை.
ஜீவாவுக்கும் நாசருக்கும் உண்டான உறவு தாமரை இலையிலே உள்ள தண்ணீர்ப் போலவும், மகனின் தோழனுக்கும் நண்பனின் அப்பாவுக்கும் இடையே அமைகின்ற உறவு உடலில் செந்நீர் போலவும் அழுத்தமாக பதிவிடப்பட்டிருந்தது.
'லவ் டுடே 'படத்தில் ரகுவரனுக்கும் விஜயின் நண்பர்களுக்கும் உண்டான அழகான உறவிற்குப் பிறகு, என்றென்றும் புன்னகையில் தான் அது அழகாக கையாளப்பட்டுள்ளது. நாசரை படத்தின் வேர் என்று கூட கூறலாம், எத்தனை நாட்களாகியது இவரை இப்படி ஒரு வலுவான கதாபாத்திரத்தில் பார்த்து.
ஜீவா, த்ரிஷா அழகான கூட்டணி. இருவருக்கும் காதல் பிறக்கின்ற இடம் பார்ப்பவர்களையே காதல் கொள்ள வைக்கிறது. ஒரு வருடத்திற்குப் பிறகு வந்தாலும் த்ரிஷா தனது ரம்யமான அழகால் மனதை பறித்துச் செல்கிறார். கவுதம் மேனனும், மிஷ்கினும் ஜீவாவின் திறமையை விரயம் செய்திட, இப்படத்தில் அஹமத் அதை வீணடிக்காமல் பயன்படுத்தியுள்ளார்.
சந்தானத்தின் ஒன் லைனர்ஸ் கதை களத்திலிருந்து விலகி நில்லாமல் அமைந்துள்ளது. குறிப்பாக குடித்துவிட்டு மனிதன் தலைகீழாக நடப்பது போல் இவர் வீட்டுக்குள்ளே உருளும் காட்சி ஹைலைட் காமெடி.
எப்போது தான் இந்த அமெரிக்க மாப்பிள்ளை கதாபாத்திரம் விமோசனம் அடையப் போகிறதோ தெரியவில்லை. இந்த படத்திலும் ஊறுகாயாக அமெரிக்க மாப்பிள்ளை பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
வெகு நாள் ஏக்கம் என்று கூட கூறலாம், தமிழ் சினிமாவில் இதமான அனுபவம் தரும் Feel Good படங்கள் வரவில்லையே என்று. ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஜீவா விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்பும் ஒரு நல்ல படைப்பாகத் தான் 'என்றென்றும் புன்னகை 'அமைந்துள்ளது.
புன்னகை, கண்ணீர் தான் மனிதனை மனிதனாய் உணர வைக்கும் கருவிகள். இவ்விரண்டையும் சரியான அளவில் கொடுத்த 'என்றென்றும் புன்னகை' ஆனந்தப் புன்னகை தான்.