சமூக வலைத்தளத்தில் காவிரி விவகாரத்தை வைத்து பிழைப்பு நடத்தாதீர்கள் என ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பது:
"இரண்டு, மூன்று நாட்களாக கர்நாடகாவிலும், சென்னையிலும் நடக்கும் விஷயங்கள் மிகவும் கேவலமாக இருக்கிறது. இதை யார் பண்ணுகிறார்கள் என்பதை ஒரே ஒரு விநாடி யோசித்தால் கூட தெரியும். கர்நாடகாவில் கே.பி.என் பேருந்தை கொளுத்தியவர்கள், சென்னையில் ஹோட்டலை அடித்து நொறுக்கியவர்கள் நம்மைப் போன்ற சாதாரண நபர்கள் கிடையாது. இப்பிரச்சினையை ஒயக் கூடாது என்று நினைப்பவர்கள் தான்.
மொழியை வைத்து அரசியல் பண்ணும், மொழியை வைத்து லாபம் தேடிக் கொள்ளும் சில நபர்கள் தான் பிழைப்பு நடக்க வேண்டுமே என்று பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ரொம்ப வருஷமாக பண்ணியவர்கள், இந்த வருஷமும் பண்ணியிருக்கிறார்கள். சாதாரண மக்களாகிய நாம், ஒரு 10 பேர் அடித்து நொறுக்கும் வீடியோவை 10 பேர் ஷேர் பண்ணுவது மட்டுமன்றி தமிழன் வீரம் என்னவென்று தெரியுமா என்றும் கர்நாடக வீரம் என்னவென்று தெரியுமா என பிரச்சினையை உருவாக்குபவர்களுக்கு ரியாக்ட் பண்ண வேண்டாம்.
பெங்களூரில் நடைபெறும் சம்பவங்களைத் தொடர்ந்து சென்னையிலும் ஒரு ஹோட்டலை அடித்து உடைத்திருக்கிறார்கள். விவேகமான மனிதர்களாக இருப்போம். நாம் நமது வேலையை பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்போம். சென்னை வெள்ளத்தின் போது நமக்கு நிறைய உதவி இருக்கிறார்கள். அது தான் நம்மைப் போன்ற சாதாரண மக்களின் மனது.
கர்நாட்காவில் பஸ்ஸை எரித்தவர்களையும், சென்னையில் ஹோட்டலை உடைத்தவர்களையும் அரசாங்கத்தினர் கைது செய்வார்கள். இப்பிரச்சினை 50 வருடங்களாக போய் கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் இதை வைத்து பிழைப்பு நடத்தாதீர்கள். நாம் அனைவரும் மனிதர்களாக இருப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.
</p>