உலகின் மாபெரும் வல்லரசான அமெரிக்கா, முதல் உலகப் போர் தொடங்கி முக்கியமான பல போர்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கேற்றிருக்கிறது. ஒரே ஒரு போரில்தான் அதிகாரபூர்வமான தோல்வியைத் தழுவியது. 1955 முதல் 1975 வரை நடந்த வியட்நாம் போர்தான் அது. அப்போது தெற்கு வியட்நாம், வடக்கு வியட்நாம் என்று இரண்டாகப் பிரிந்துகிடந்தது வியட்நாம்.
இரண்டு பகுதிகளையும் இணைத்து ஒரே நாடாக்கி கம்யூனிஸ ஆட்சியைக் கொண்டுவருவதில் வடக்கு வியட்நாம் முனைப்புடன் இருந்தது. இதைத் தடுக்க நினைத்த அமெரிக்கா, அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. 20 ஆண்டுகளாக நடந்த இந்தப் போரில், பலவிதமான போர்க்குற்றங்கள் நடைபெற்றன. இதனால், அமெரிக்க மக்கள் இந்தப் போரை வெறுத்தனர்.
வியட்நாமிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று கோரிப் போராட்டங்கள் வெடித்தன. 1967-ல் இதே நாளில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கட்டிடத்தை நோக்கிப் புறப்பட்ட பேரணியில், 1 லட்சம் பேர் கலந்துகொண்டனர்.
தேசியவாதிகள், ஹிப்பிகள், பேராசிரியர்கள், பெண்கள் அமைப்புகள், முன்னாள் போர்வீரர்கள் அடங்கிய போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
அக்டோபர் 23 வரை பென்டகன் கட்டிடத்தைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். எழுத்தாளர் நார்மன் மெயிலர், இரண்டு பத்திரிகை யாளர்கள் உட்பட ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டனர்.
இதே போன்ற போராட்டங்கள் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பானிலும் நடைபெற்றன. எனினும் போர் முடிவுக்கு வருவதற்கு அதற்குப் பின்னும் எட்டு ஆண்டுகள் பிடித்தன.
- சரித்திரன்