வலைஞர் பக்கம்

பிரான்செஸ்கோ சிப்பியோன் மார்ச்செஸ் டெ மாஃபி 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

இத்தாலி அறிவியலாளர், நாடகாசிரியர்

இத்தாலியைச் சேர்ந்த எழுத்தாளர், புதைபொருள் ஆய்வாளர், நாடகாசிரியர், வானியலாளர், இயற்பியலாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட பிரான்செஸ்கோ சிப்பியோன் மார்ச்செஸ் டெ மாஃபி (Francesco Scipione marchese di Maffei) பிறந்த தினம் இன்று (ஜூன் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* வட இத்தாலியில் வெரோனா நகரில் பிறந்தார் (1675). பார்மா என்ற ஊரில் பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, ரோம் நகரில் உயர் கல்வி பயின்றார். இத்தாலியின் மகத்தான கவிஞர்களின் படைப்புகளை வாசித்தார்.

* ரோம் நகரில் படித்துக்கொண்டிருந்தபோது, ஆர்காடியன் அகாடமி என்ற இசைக் குழுவின் உறுப்பினராகச் சேர்ந்தார். சொந்த ஊர் திரும்பிய பின் அங்கே ஆர்காடியா அகாடமியைத் தொடங்கினார். 1703-ல் சுய விருப்பத்துடன் ராணுவத்தில் இணைந்து பணியாற்றினார்.

* பின்னர் டுரினில் உள்ள ராயல் நூலகத்தில் இருந்த கையெழுத்துப் பிரதிகள், சேகரித்து வைக்கப்பட்டிருந்த தொன்மையான கலைப் பொருட்களை ஆராய்ந்தார். தொடர்ந்து, ஒரு பிரபல நடிகருடன் ஏற்பட்ட நட்பால் நாடகத் துறையில் புகுந்தார்.

* 1714-ல் வெளிவந்த இவரது தலைசிறந்த படைப்பாகப் போற்றப்பட்ட ‘மெரோப்’ என்ற சோக நாடகம், இவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது. ‘தியேட்ரோ இட்டாலியானோ’, ‘லி செரிமோனையே’ உள்ளிட்ட நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

* தொல்லியலிலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, ‘வெரோனோ இல்லஸ்ட்ரேட்டா’ என்ற நூலை எழுதினார். பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்.

* தொல்லியல் ஆராய்ச்சிகளுக்காக பாரீஸ் சென்றார். அங்கே ‘அகாடமி ஆஃப் இன்ஸ்கிரிப்ஷன்ஸ்’ மற்றும் ‘பெல்ஸ் லெட்டர்ஸ்’ என்ற கவுரவம் மிக்க அமைப்பில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். வானியல், இயற்பியல் குறித்த ஆராய்ச்சிகளில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர், சொந்தமாக விண்ணாய்வகம் ஒன்றை நிறுவி ஆய்வுகளை மேற்கொண்டார்.

* பல நூல்களையும் எழுதினார். ‘ஃபார் தி பர்த் ஆஃப் தி பிரின்ஸ் ஆஃப் ஜென்டில்மேன் பியட்மான்ட்’, ‘நைட்லி சயின்ஸ்’, ‘டெல் ஏன்ஷியன்ட் கண்டிஷன் ஆஃப் வெரோனா’, ‘டிப்ளமாடிக் ஹிஸ்ட்ரி’, ‘மாரல் பாயின்ட்ஸ் பிலாங்கிங் டு தியேட்டர்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவரது படைப்புகள் அனைத்தும் 1790-ல் 28 தொகுதிகளாக வெளியிடப்பட்டன.

* லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. பல நாடுகளிலிருந்து பல அரிய கலை, தொல்லியல் பொருள்களை வாங்கி வந்தார். இவ்வாறு தான் சேகரித்தப் பொருள்களைக் கொண்டு மிகப் பெரிய அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கினார்.

* இத்தாலிய நாடகக் கலைக்குப் புத்துயிர் ஊட்டியவர் எனப் போற்றப்பட்ட இவர் பல்வேறு துறைகளிலும் சாதனைகள் நிகழ்த்தினார். தனது 80-வது வயது நெருங்கும்போது ஹீப்ரு கற்கத் தொடங்கிய இவர், ஒருசில மாதங்களிலேயே அதைக் கற்றுத் தேர்ந்தார் எனக் கூறப்படுகிறது.

* இலக்கியம், மொழிகள், அறிவியல், கலைகள், தொல்லியல், வரலாறு, வானியல் என ஏராளமான களங்களில் ஆர்வமும் திறனும் கொண்டிருந்தவரும் அத்தனை களங்களிலும் முத்திரைப் பதித்தவருமான பிரான்செஸ்கோ சிப்பியோன் மார்ச்செஸ் டெ மாஃபி 1755-ம் ஆண்டு 80-வது வயதில் மறைந்தார்.

SCROLL FOR NEXT