வலைஞர் பக்கம்

பூக்கும் செடிகளுக்கு நீரூற்றும் தோட்டக்காரர்கள்

செய்திப்பிரிவு

பூங்காவின் சிமெண்ட் நாற்காலியில்

அமர்ந்திருந்தன நிழல் உருவங்கள் இரண்டு.

ஒன்று அடக்கமுடியாமல் சிரித்தபடி

மற்றொன்று அதை முறைத்தபடி.

தூரத்து விளக்கின் கீழ் இருந்து அவற்றைக்

கவனித்துக் கொண்டிருந்தேன்.

அது மாலை மயங்கி

இருள் தயங்கி நுழையும் வேளை.

சிறிது நேரத்தில் சிரித்தது அழுதது

முறைத்தது ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தது

ஒன்றின் கைகளை மற்றது பற்றிப் பிணைந்து

இறுக்கி இளகி

விரல்கள் கோர்த்து சொடக்கெடுத்து

மொழி தாண்டிய மொழியால்

உரையாடிக்கொண்டிருந்தன

ஆட்கள் போவதும்

நேரம் போவதும் அறியாமல்.

பொது இடத்தில் என்ன இது

அநாகரிகம் எனத் தோன்றியது

அவற்றைப் பார்க்கும் போது.

பூங்காவைச் சுற்றி வந்த காவலாளியிடம்

புகார் கூற நினைத்த என்னை நெருங்கி வந்து

கண்டித்தார் அவர்:

‘காது கேளாத வாய் பேசாத

காதலர்கள்...

குறுகுறுவென்று பார்த்து அவர்களைத்

தொந்தரவு செய்யவேண்டாம்’ என.

அவரது குரலின் கடுமையை விட பெரிதாய் இருந்தது

அவர் இதயத்தின் கருணை.

அவரது பார்வையை வாழ்த்தி

எனது பார்வைக்கு வருந்தி திரும்பிக்கொண்டேன்.

பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தன

அவர் நீரூற்றும் செடிகள்.

மீண்டுமொரு முறை

நிழல்களைப் பார்க்கத் தோன்றியது

காவலாளி பார்க்கிறாரா எனக்

கவனித்துவிட்டுப் பார்த்தேன்.

நிழல்களின் விரல்களில்

இன்னமும் பீறிட்டுக்கொண்டுதான் இருந்தது

அன்பின் நீரூற்று.

எழுந்து புறப்பட்டேன்

பூக்கும் செடிகளுக்கு நீரூற்றும்

தோட்டக்காரர்கள் இருக்கும்வரை

உலகின் மேலான

என் நம்பிக்கை வற்றாது.

SCROLL FOR NEXT