வலைஞர் பக்கம்

முல்லை முத்தையா 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

தமிழ் எழுத்தாளர், பதிப்பாளர்

தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த எழுத்தாளருமான முல்லை முத்தையா (Mullai Muthiah) பிறந்த தினம் இன்று (ஜூன் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் (1920) பிறந்தவர். அடகுக் கடை வைத்திருந்த தந்தை, தமிழ் ஆர்வமும் கொண்டிருந்தவர். தந்தைவழி, தாய்வழிப் பாட்டனார்களும் தமிழ் அறிஞர்கள், வெண்பா பாடுவதில் வல்லவர்கள். இயல்பாகவே இவருக்கும் இலக்கிய ஆர்வம் அரும்பியது.

* சொந்த ஊரில் 10-ம் வகுப்பு வரை பயின்றார். சமஸ்கிருதமும் கற்றார். பர்மாவில் தந்தை நடத்திய கடையில் பணிபுரிவதற்காக 15 வயதில் அங்கு சென்றார். அங்கு தமிழ் இலக்கியங்களைக் கற்றார். பர்மாவில் போர் மூண்டதால் அங்கு வியாபாரம் செய்ய முடியாமல் போனது. நண்பர்களோடு சேர்ந்து நடைபயணமாகவே இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்.

* இலக்கிய ஆர்வம் காரணமாக 1942-ல் ‘சக்தி’ இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றினார். ‘நகரசபை’ என்ற இதழையும் நடத்திவந்தார். பாரதிதாசனின் விருப்பப்படி ‘முல்லை’ இதழைத் தொடங்கினார். அதுமுதல் இவரை ‘முல்லை முத்தையா’ என்று பாரதிதாசன் குறிப்பிட, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.

* எம்.எஸ்.உதயமூர்த்தி உள்ளிட்ட பலரை ஊக்கப்படுத்தி எழுதச் செய்தார். முருக பக்தி பாடல்களைத் தொகுத்து ‘முருகன் அருள் செல்வம்’ என்ற பெயரில் 600 பக்கங்கள் கொண்ட நூலாகப் பதிப்பித்தார். முதலில் கமலா பிரசுரமும், பின்னர் பாரதிதாசனின் நூல்களை வெளியிடுவதற்காக முல்லை பதிப்பகமும் தொடங்கினார். இதன்மூலம், தமிழ் நூல் வெளியீட்டுத் துறை வளர்ச்சிக்கு வித்திட்டார்.

* திருவள்ளுவர் கழகத்தை 1946-ல் தொடங்கினார். ராஜாஜியின் நூல்கள் வெளியிடப்படாத அந்த சமயத்தில் அவரது நூலை ‘புரொஹிபிஷன்’ என்று ஆங்கிலத்திலும், ‘கள் ஒழிக’ என தமிழிலும் வெளியிட்டார்.

* பாவேந்தர் பற்றி பல அறிஞர்களிடம் கட்டுரை, கவிதை, கருத்துரைகளைக் கேட்டு வாங்கி ‘புரட்சிக் கவிஞர்’ என்ற நூலாக 1946-ல் வெளியிட்டார். இந்நூல், பாரதிதாசனைப் பற்றிய முதல் நூலாகவும் தமிழில் முதல் தொகுப்பு நூலாகவும் பெருமை பெற்றது.

* பாமரர்களுக்கும் திருக்குறள் பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் திருக்குறளுக்கு எளிய நடையில் உரை எழுதினார். திருக்குறளின் பெருமை, திருக்குறள் அறிவுரைகள், திருக்குறள் உவமைகள் என பல தலைப்புகளில் 7 நூல்களாக வெளியிட்டார். 1959-ல் தொடங்கிய இந்த அரும்பணி, 2000-ம் ஆண்டு வரை தொடர்ந்தது.

* பஞ்சாயத்து நிர்வாகம் பற்றி 9 நூல்கள், ‘இன்பம்’, ‘தமிழ்ச்சொல் விளக்கம்’, ‘நபிகள் நாயகம் சரித்திர நிகழ்ச்சிகள்’, ‘பார் புகழும் பாவேந்தர்’, ‘முல்லைக் கதைகள்’, ‘மாணவர்களுக்கு’, ‘புறநானூற்றுச் சிறுகதைகள்’ என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

* உலகப் புகழ்பெற்ற 10 நூல்களை மொழிபெயர்த்து சுருக்கி புதுமையான முறையில் வெளியிட்டார். பொது அறிவுக் களஞ்சியத்தை முதல்முறையாக படங்களுடன் தொகுத்து வெளியிட்டார். ‘பாரதியார் கதைகள்’, ‘1001 இரவுகள்’, ‘ஷேக்ஸ்பியர் கதைகள்’, ‘மனோன்மணியம்’, ‘குறுந்தொகை’ உள்ளிட்ட நூல்களை மலிவுவிலைப் பதிப்புகளாக வெளியிட்டார்.

* குறள் ஆய்வுச் செம்மல், திருக்குறள் சீர் பரவுவார், திருக்குறள் நெறித் தோன்றல் உள்ளிட்ட பல பட்டங்களைப் பெற்றுள்ளார். இவருடைய பல நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இறுதிவரை தமிழ்ப்பணி ஆற்றிவந்த முல்லை முத்தையா 80-வது வயதில் (2000) மறைந்தார்.

SCROLL FOR NEXT