வலைஞர் பக்கம்

இன்று அன்று | 188 அக்டோபர் 14 : உலகின் மிகப் பழைய ‘ஷூட்டிங்’

சரித்திரன்

19-ம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த மிகப் பெரும் கண்டு பிடிப்பு ஒன்றுதான், இன்று உலகின் பெரும்பாலான பகுதிகளில் பெருமளவு தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது எனலாம். குறிப்பாக, தமிழகத்தில் அதன் தாக்கம் அதிகம். திரைப்படம்தான் அந்த மகத்தான கண்டுபிடிப்பு.

1878-ல் எடுக்கப்பட்ட ‘எ ஹார்ஸ் இன் மோஷன்’ என்ற காட்சிதான் தற்சமயம் மிச்சம் இருக்கும் மிகப் பழைய காட்சி. புகைப்படக் கலையை அடிப்படையாகக் கொண்டு ஸ்டாப் மோஷன் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது அது. குதிரை மீது ஒருவர் சவாரி செய்யும் இந்தக் காட்சியின் நீளம் 15 வினாடிகள்தான்.

அதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட ‘ரவுந்தே கார்டன் சீன்’ என்ற காட்சி பழைய திரைக்காட்சிகளில் ஒன்று. கின்னஸ் சாதனையிலும் இது பதிவுசெய்யப்பட்டுள்ளது. ‘ஒளிப்பதிவின் தந்தை’ என்று 1930-களில் கருதப்பட்ட பிரெஞ்சு திரைப்படக் கலைஞர்தான் இதைப் படம் பிடித்தார். 1888-ல் இதே நாளில் இந்தக் காட்சி படமாக்கப்பட்டது. எனினும், 1895-ல் லூமியர் சகோதரர்கள் படமாக்கிய ‘வொர்க்கர்ஸ் லீவிங் தி லூமியர் ஃபேக்டரி’ என்ற படம்தான் முதல் திரைக் காட்சி என்று கருதப்படுகிறது.

பிரிட்டனின் லீட்ஸ் நகரத்தில் உள்ள ரவுந்தே தோட்டத்தில் இந்தக் காட்சியை அவர் படமாக்கினார். அந்தக் காட்சியில் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் சில தப்படிகள் நடக்கின்றனர். மொத்தம் 2.11 வினாடிகள்தான் ஓடுகிறது இந்தக் காட்சி. இது மொத்தம் 12 பிரேம்கள் கொண்டது. 1930-ல் இந்தக் காட்சியை லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகம் பத்திரப்படுத்தியது.

SCROLL FOR NEXT